முகப்பரு தழும்புகள் மறைய என்ன செய்யலாம்? - டாக்டர் மைத்ரேயி ராஜேந்திரன்
சரும நிறத்தை அதிகரிப்பதைவிட இயற்கையான சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதில்தான் இன்று பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தனது சருமத்தின் தன்மை என்ன? அதற்கேற்ப க்ரீம்களை எப்படி தேர்ந்தெடுப்பது? என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதனால் தவறான க்ரீம்களை பயன்படுத்தி பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சருமத்தை பராமரிப்பது பற்றியும், பாதிக்கப்பட்ட சருமத்திற்கு சிகிச்சை அளிப்பது பற்றியும் நம்முடன் உரையாடுகிறார் தோல்நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் மைத்ரேயி ராஜேந்திரன்.
சிலருக்கு எல்லா சோப்களும் ஒத்துக்கொள்வதில்லை. சருமத்திற்கு ஏற்றவாறு சோப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
வறண்ட சருமம் கொண்டவர்கள் மினரல் ஆயில், செரமைடு போன்ற மாய்ச்சுரைஸிங் சோப்களை பயன்படுத்த வேண்டும். எந்த சருமமாக இருந்தாலும் Ph அளவை சமன்படுத்தும் சோப்களை பயன்படுத்தினால் சருமம் வறண்டுபோதல், சேதமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது.
தேங்காய் எண்ணெயை சருமத்தின்மீது பயன்படுத்தலாமா?
வறண்ட சருமம் கொண்டவர்கள் எண்ணெயை பயன்படுத்தலாம். ஏனென்றால் அவர்களுடைய சருமத்திற்கு இயற்கையான பாதுகாப்பு திறன் இருக்காது. எனவே போதுமானவரை மாய்ச்சுரைஸிங் தன்மையை கொடுக்க எண்ணெய் பயன்படும். ஆனால் குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து சிறிதுநேரம் வைத்திருந்துவிட்டு, குளித்தபிறகு மாய்ச்சுரைஸிங் லோஷன் தடவிக்கொள்ளலாம். இதையே எண்ணெய் சருமம் கொண்டவர்களும், முகப்பரு அதிகம் இருப்பவர்களும் பயன்படுத்தினால் சருமத்துளைகள் மூடி முகப்பரு மேலும் அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன.
வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்
முகப்பரு வர நிறையக் காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு மரபணுரீதியாக முகப்பருக்கள் உருவாகும் அல்லது சிலருக்கு மரபணு மாற்றங்களாலும் வரலாம். எல்லாருடைய சருமத்திலும் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக இருப்பதைத்தான் எண்ணெய் சருமம் என்கிறோம். பிசிஓடி, தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்சினைகளால் சிலருடைய சருமத்தின் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக செயல்பட்டு முகப்பரு வர காரணமாகிறது. அடுத்து வாழ்க்கைமுறை. நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் ஜங்க், எண்ணெய் உணவுகள், ஸ்வீட், பால் பொருட்கள் அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருக்கும். அதனாலும் முகப்பரு உருவாகும்.
சிலருக்கு முகப்பருவால் வடுக்கள் மற்றும் குழிகள் உருவாகின்றதே. இதை எப்படி குணப்படுத்துவது?
சிலருக்கு கருப்பாகவோ அல்லது சரும நிறத்தைவிட அடர் நிறத்திலோ அல்லது சிவப்பாகவோ வடுக்கள் உருவாகலாம். இதை தினசரி நாம் மேற்கொள்ளும் சரும பராமரிப்பிலேயே சரிசெய்யலாம். இது உடனே சரியாகாவிட்டாலும் படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் ஒருசிலருக்கு மட்டும்தான் அது போகாமல் அப்படியே முகத்திலிருக்கும். அந்த வடுக்களை மாத்திரை, க்ரீம்களை பயன்படுத்தி சரிசெய்ய முடியாது. இதனை ஆரம்பகட்டத்திலேயே லேசர் போன்ற சிகிச்சைகள்மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
நீங்காத முகப்பரு வடுக்களுக்கு அளிக்கப்படும் லேசர் சிகிச்சை முறை
விபத்தால் சரும பாதிப்பு ஏற்படுவோருக்கு குணப்படுத்த முடியுமா?
விபத்து ஏற்பட்ட உடனே முதலில் தையல் போடுவார்கள். அங்கிருந்தே சருமம் குணமடையத் தொடங்குகிறது. காயம் ஆறியபிறகு சருமத்தில் அது தழும்பாகவோ அல்லது கருமையான மார்க்காகவோ மாறிவிடும். அதைப் பொருத்துதான் சிகிச்சை அளிக்கப்படும். சரும நிறத்தில் மட்டும் மாற்றம் இருந்தால் அதை முடிந்தவரை சரிசெய்யமுடியும். அதுவே தழும்பாக உருவாகும்போது லேசர் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இருப்பினும் அதை 100% முழுமையாக குணப்படுத்த முடியாது.
சருமத்தில் வரக்கூடிய பொதுவான நோய்கள் என்னென்ன?
தொற்றுகள் பொதுவானவை. அதிகமாக வியர்ப்பவர்களுக்கு பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். நிறையப்பேருக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்படும். சுகாதாரமற்ற வாழ்க்கைமுறையால் முகப்பரு என்பது இப்போது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.
மேக்கப் போடுவதால் ஸ்கின் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை - மருத்துவர் மைத்ரேயி ராஜேந்திரன்
சரும அலர்ஜிக்கு முக்கிய காரணம் என்ன?
அலர்ஜி என்பது ஒவ்வொருவரின் சருமத்துடைய தன்மையை பொருத்தது. மரபணுரீதியாகவே சிலருக்கு அலர்ஜி ஏற்படக்கூடிய தன்மை இருக்கலாம் அல்லது மரபணுக்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களாலும் அலர்ஜி வரலாம். நிறையப்பேருக்கு ஆஸ்துமா, டஸ்ட் அலர்ஜி போன்றவை இருக்கும். இவர்களுக்கு சரும அலர்ஜி எளிதில் வரலாம். இதுதவிர வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பாதுகாப்புத் திறனானது குறைவாக இருப்பதால் வெளிப்புற காரணிகளின் தாக்கத்தால் எளிதில் சருமம் பாதிப்படையும். அதுவே பாதுகாப்பு திறன் நன்றாக இருக்கும்போது அலர்ஜி போன்ற பாதிப்புகள் எளிதில் ஏற்படாது.
தினசரி மேக்கப் போடுவதால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
மேக்கப் ப்ராடக்ட்ஸால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது. ஆனால் சரும தன்மைக்கு ஏற்றவாறு ப்ராடக்ட்ஸை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும். எண்ணெய் மற்றும் முகப்பரு அதிகமுள்ள சருமம் கொண்டவர்கள் திக்கான க்ரீம்களை பயன்படுத்தாமல் liquid, fluid தன்மையுள்ள non - greasy, non - oily போன்ற ப்ராடக்ட்ஸை பயன்படுத்தலாம். வேலை முடிந்து வந்தவுடன் மேக்கப்பை உடனடியாக நீக்கி சருமத்தை க்ளென்ஸ் செய்துவிடவேண்டும். இல்லாவிட்டால் முகப்பரு பிரச்சினை இல்லாதவர்களுக்குக்கூட எளிதில் வர வாய்ப்புகள் உள்ளன. முடிந்தவரை தினசரி ஹெவி மேக்கப் போடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் இதனால் சருமம் பாதிப்படையும்.
அடிக்கடி நாக்கால் உதட்டை ஈரப்படுத்தினாலும்கூட உதடு கருமையாகலாம் - மருத்துவர்
சிலருக்கு உதடு கருமையாக இருக்கும். அதனை சரிசெய்வது எப்படி?
பொதுவாகவே இந்தியர்களுக்கு உதடு கருமையாகத்தான் இருக்கும். இங்கு 90 - 95% பேருக்கு உதடு அப்படித்தான் இருக்கும். புகைப்பிடித்தல், போதிய தண்ணீர் குடிக்காமல் இருத்தல், லிப்ஸ்டிக் பயன்படுத்துதல், அடிக்கடி நாக்கால் உதட்டை ஈரப்படுத்துதல் போன்ற காரணங்களாலும் உதடு கருமையாகலாம்.
சருமம் பளிச்சென இருக்க காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் நெய் போட்டு குடிக்கலாம் என்று சொல்வது உண்மையா?
உடல் நீரேற்றத்துடன் இருப்பதால் சருமம் பளபளப்பாவது உண்மைதான். ஆனால் நெய் சேர்த்து குடிப்பதால் சருமம் பளபளப்பாகும் என்பதில் அறிவியல்பூர்வமான உண்மை இருக்கிறதா என தெரியவில்லை. தினசரி 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், இளநீர், மோர் குடிப்பதும் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும். இதனால் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.