இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உணவு பழக்கங்கள், தூக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை இன்றைய இளம்தலைமுறையினரை பெரிதளவில் பாதிக்கின்றன. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் இருப்பவர்களுக்கும்கூட பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக புற்றுநோய் எண்ணிக்கை இளைஞர்களிடையேகூட நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆரம்பத்திலேயே எளிதில் கண்டுபிடிக்க முடியாத வாய் புற்றுநோய் குறித்தும், பெரும்பாலாக காணப்படும் உடல்நல பிரச்சினைகள் குறித்தும் விளக்குகிறார் காஸ்மடாலஜிஸ்ட் பிளாட்பின்.

காஸ்மெட்டிக் சர்ஜரி மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு இடையேயான வித்தியாசங்கள் என்னென்ன?

காஸ்மடாலஜி என்பது அழகுசார்ந்த சிகிச்சை. பிளாஸ்டிக் சர்ஜரி என்பது அறுவைசிகிச்சை முறையில் ஒன்று. அதாவது, விபத்தினால் ஏற்படும் தழும்புகளை சரிசெய்ய போதுமான சதை இல்லாத பட்சத்தில் வேறு பகுதியிலிருந்து சதையை எடுத்து அந்த இடத்தை நிரப்புவது. இதனால் தழும்புகள் உருவாகாது. காஸ்மடாலஜி என்பது காஸ்மட்டிக் ப்ராடக்ட்ஸை பயன்படுத்தி செய்யப்படும் அழகுசார்ந்த ஒரு சிகிச்சை. காஸ்மட்டிக் லேசர், ஹைட்ரா ஃபேஷியல், பீலிங் போன்ற பல டெக்னிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

காஸ்மடாலஜி சிகிச்சையை முறைப்படி செயல்படுத்தினால் முழுக்க முழுக்க பாதுகாப்பானது. நோயாளியின் வயது, உடல்நல குறைபாடுகள், ஹார்மோன் பிரச்சினைகள், மரபணு பிரச்சினைகள் போன்றவற்றை ஆராய்ந்து சிகிச்சையளித்தால் 100% பாதுகாப்பானது. லேசர் சிகிச்சை அதைவிட பாதுகாப்பானது என்றே சொல்லலாம். ஆனால் லேசரை எப்படி கையாள்வது என்பதை தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு லேசருக்கும் குறிப்பிட்ட அலைவரிசை இருக்கிறது. லேசரைக்கொண்டு பெரிய இரும்பு, வைரத்தைக்கூட வெட்டமுடியும். சருமத்திற்கு இதனை பயன்படுத்தும்போது அளவு தெரிந்திருக்கவேண்டும்.


லேசர் சிகிச்சை

கேன்சரில் ஒருவகையான வாய் புற்றுநோய் எதனால் வருகிறது?

முன்பெல்லாம் குடல் புற்றுநோய்தான் அதிகமாக கண்டறியப்பட்டது. ஆனால் இப்போது வாய் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வாய் புற்றுநோய் அதிகம் கண்டறியப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், புகைப்பிடித்தல், பாக்கு, குட்கா, ஹான்ஸ் பயன்படுத்துதல், ஃபாஸ்ட் ஃபுட்ஸை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல் போன்ற பழக்கவழக்கங்கள். பொதுவாக செல்கள் 2, 4, 8 என பெருகும். ஆனால் கேன்சர் செல்கள் ஒன்று ஐந்தாகலாம், பதினைந்தாகலாம். இப்படி அசாதாரணமாக பெருகிக்கொண்டே போகும். வாய் புற்றுநோயை ஆரம்பகட்டத்தில் கண்டுபிடிப்பது சற்று கடினம். வாயில் சிறிய புண் வந்ததுபோலத்தான் தெரியும். ஒரு புண் வந்து 14 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்குக்கூட கேன்சர் வரலாம். வாயில் புண் மட்டுமல்லாமல் வெள்ளை அல்லது சிவப்பு நிற பேட்சஸ் இருந்தாலோ, அசாதாரணமாக ஏதாவது தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஆரம்பகட்டத்திலேயே இதனை கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் நாட்கள் கடந்துவிட்டால் குணமாக்குவது கடினம்.


வாய் புற்றுநோய் காரணிகள்

வாய் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்

கேன்சருக்கு முந்தைய அறிகுறிகளான வாய் தசைகள் இறுகுதல், வாயில் பேட்சஸ் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தெரியும்போது, உடனடியாக புகைப்பிடித்தல், மது அருந்துதல், பாக்கு போடுதல், ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுதல் போன்ற பழக்கவழக்கங்களை விட்டுவிட்டாலே புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் அதுவே மெட்டாசிஸ் நிலையான அருகிலிருக்கும் உறுப்புகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் பரவிவிட்டால் குணமாக்குவது கடினம்.

கேன்சர் 3 வகைகளாக பரவும். ஒரு புண் அடுத்தடுத்து அருகருகே பெரிதாக பரவும். இதனை local spread என்கின்றனர். நிணநீர் வழியாக பரவுவதை lymphatic spread என்கின்றனர். ரத்தம் வழியாக பரவுவதை hematogenous spread என்கின்றனர். முதல் வகை அருகருகே பரவுவதால் மிக ஆழமாக செல்லாது. இது வெளியே தெரியக்கூடியதும்கூட. ஆனால் ரத்தத்தில் பரவினால் வெளியே தெரியாது. இது ஆபத்தானதும் கூட.


கேன்சர் வகைகள்

அதேபோலத்தான் lymphatic வகையும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால் அதுவும் ஆபத்தானதுதான். கேன்சரின் பிறப்பிடம் ஒன்றாக இருந்தாலும் அது பரவியிருப்பது மற்றொரு இடமாக இருக்கும். உதாரணத்திற்கு, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்திய பிறகு, சில நாட்கள் கழித்து தொடர் இருமல் வரும். பரிசோதித்து பார்த்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகியிருக்கும். இதனை மெட்டாசிஸ் பிரச்சினை என்கின்றனர். எனவே கேன்சரை பொருத்தவரை வருமுன் காப்பதே சிறந்தது.

முடிகொட்டுதலுக்கான முக்கிய காரணம் என்ன?

முடிகொட்டும் பிரச்சினை இப்போது பொதுவான பிரச்சினையாகிவிட்டது. குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு முடி கொட்டுதல் பிரச்சினை மிகவும் அதிகமாகிவிட்டது. முடிகொட்டுதலுக்கான முக்கிய காரணங்கள் மரபணு காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள், மன அழுத்தம், தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவை. பிற காரணிகளை சரிசெய்ய முடிந்தாலும், மரபணு காரணிகளால் வழுக்கை மற்றும் முடி கொட்டுதல் ஏற்பட்டால் அதனை சரிசெய்வது சற்று கடினம். இருப்பினும் இன்றைய நவீன மருத்துவத்தால் அதையும் சரிசெய்ய முடியும்.


முடி கொட்டுவதற்கான காரணங்கள்

தினமும் குளித்து சுத்தமாக இருக்கவேண்டும். வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிப்பது மிகவும் தவறு. தினமும் 50 முதல் 100 முடி உதிர்வது சாதாரணம்தான். முடி உருவாவதில் இருந்து உதிரும் வரை 4 நிலைகள் இருக்கின்றன. அவை தொடர்ந்து சுழற்சியாக நடைபெறும். எப்போது இந்த சுழற்சியில் குளறுபடி ஏற்படுகிறதோ அப்போதுதான் வழுக்கை போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. சுத்தமான தண்ணீரில் குளிப்பது, நல்ல ஷாம்பூ பயன்படுத்துவது, சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது அவசியம். தவறான வழிகாட்டுதல்களால் தலையில் தேவையற்றதை தேய்த்தால் வெளிப்புறம் மட்டுமின்றி உள்ளுறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொடுகு என்பது மற்றொரு பொதுவான பிரச்சினை. இது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். எனவே ஆண்டி - டான்ட்ரஃப் ஷாம்பூ பயன்படுத்தவேண்டும். அதேபோல் சீரமும் பயன்படுத்தலாம். வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் அதற்கான சப்ளிமெண்ட்ஸை எடுத்துக்கொள்ளலாம்.

ஹெல்மட் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படுமா?

ஹெல்மட் தினமும் பயன்படுத்தினால் நிச்சயம் முடி உதிர்வு ஏற்படும். ஹெல்மட் போடும்போது அது முடி வேர்க்கால்களின்மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் வேர்க்கால்கள் பலவீனமடைந்து சில நாட்களிலேயே முடி மெலிந்துவிடுகிறது. அதேபோல் நீண்டநேரம் ஹெல்மட் அணிந்திருந்தால் வியர்வை வரும். இதனால் பாக்டீரியா அதிகரிப்பதால் வியர்வை நாற்றம் வருகிறது. எனவே தரமான, தலைக்கு அதிக அழுத்தம் கொடுக்காத ஹெல்மட் அணிவது அவசியம்.


ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன்

ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்ட்டின் முக்கியத்துவம் பற்றி கூறுங்கள்...

தலையில் முடியே இல்லாமல் வழுக்கைத் தலையாக இருப்பவர்களுக்கு முடி மாற்று அறுவைசிகிச்சை என்கிற ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் (hair transplantation) செய்யப்படும். முடி மெலிந்தோ அல்லது அடர்த்தி குறைவாகவோ இருப்பவர்களுக்கு GFC, QR678, ஸ்டெம்செல் தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. முடி வேர்க்கால்கள் இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சைகள் அளிக்கப்படும். ஆனால் முடி முழுவதும் உதிர்ந்து வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் செய்யப்படும். ஒரு நபரின் உடலின் வேறொரு இடத்திலுள்ள முடியை எடுத்து தலையில் நடுவது.

ஆண்களுக்கு patchy beard ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

இதற்கு முக்கிய காரணம் ஜெனிட்டிக்தான். சிலர் சிறிய வயதில் இருக்கும்போதோ அல்லது கருவிலிருக்கும்போது தாய் எடுத்த மருந்து மாத்திரைகளாலோ அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் முடி வளர்வது குறைபடும். சிறுசிறு முடிகளை ஸ்டிம்யுலேட் செய்து வளரவைக்கலாம். சீரம்கள், ஊசிகள் மூலமும் வளரவைக்கலாம். ஆண், பெண் என அனைவருமே சருமத்தை பராமரிக்க வேண்டும். வெளியே செல்லும்போது தரமான சன் ஸ்க்ரீன் பயன்படுத்தவேண்டும். இது அழகுக்கு மட்டுமில்லாமல் சரும பிரச்சினைகள் வருவதையும் தடுக்கும்.

Updated On 11 Sep 2023 6:57 PM GMT
ராணி

ராணி

Next Story