இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய பிஸியான காலகட்டத்தில் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு என்பது சற்று கடினமானதாகவே இருக்கிறது. குறிப்பாக, சருமத்திற்கு கொடுக்கும் கவனத்தை பலருக்கும் தலைமுடிக்கு கொடுப்பதில்லை. போதிய ஊட்டச்சத்தின்மை மற்றும் மாசு, அழுக்கு போன்ற பல்வேறு காரணங்களால் முடிகொட்டுதல், இளநரை போன்ற பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தலைமுடியை வீட்டிலேயே பராமரிப்பது குறித்து விளக்குகிறார் காஸ்மடாலஜிஸ்ட் ஐஸ்வர்யா.

தலைமுடியை பராமரிப்பது எப்படி?

தலையை மூடியுள்ள சருமம் என்பது உடலிலிருக்கும் சருமத்தின் நீட்சிதான். சரும பராமரிப்புக்கு அதிக அக்கறை செலுத்தும் பெரும்பாலானோர் தலைமுடிக்கு அதிக கவனம் செலுத்துவதில்லை. தலைமுடி பராமரிப்பில் முக்கிய இடம் வகிப்பது ஊட்டச்சத்துமிஉக்க உணவு. எனவே முடிக்கு தேவையான பயோட்டின் மற்றும் இரும்புச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு முக்கியமான பிரச்சினை ஸ்ட்ரெஸ். இன்றைய வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருங்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் அதனை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். ஸ்ட்ரெஸை குறைக்கும்போது முடி மற்றும் சரும ஆரோக்கியம் இரண்டுமே மேம்படும். வீட்டிலேயே தலைமுடியை பராமரிக்கலாம். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதில் தவறில்லை. ஆனால் சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைப்பது சற்று கடினம். மற்றொன்று மாசுபாடு. நம்மை சுற்றியுள்ள மாசுபாட்டின் தாக்கம் சருமத்தின்மீது நன்றாக தெரியும். அதேபோலத்தான் தலைமுடியும் பாதிக்கப்படுகிறது.

இந்த இரண்டு காரணிகளால் இப்போது நிறைய சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் வருகிறது. தேங்காய் எண்ணெயின் அடர்த்தி சற்று அதிகம். தலைக்கு குளிப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான எண்ணெய் தேய்த்து குளித்தாலே போதுமானது. வேர்க்கால்களின் துவாரங்களானது எண்ணெயை உள்ளிழுத்துக் கொள்ளும். மசாஜ் செய்தால் இன்னும் நல்லது. பொதுவாக பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் வைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதை அப்படியே வைத்திருக்கும்போது மாசு மற்றும் அழுக்குகள் அப்படியே தலையில் தங்கிவிடும். இதனால் நெற்றியில் பரு மற்றும் பொடுகு அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே அடர்த்தி குறைவான வைட்டமின் இ அதிகமுள்ள ஆர்கன் எண்ணெயை தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பயன்படுத்தலாம்.


தலைமுடி பராமரிப்பு

முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணம் மரபணு பிரச்சினையா? அல்லது போதிய பராமரிப்பின்மையா?

இன்றைய காலகட்டத்தில் இரண்டுமே முக்கிய காரணம்தான். மார்க்கெட்டுகளில்கூட சருமத்திற்கு கிடைக்கும் ப்ராடக்ட்ஸ் அளவிற்கு முடிக்கு கிடைப்பதில்லை. மரபணு சார்ந்தே ஒருவருக்கு முடி என்பதும் அமைகிறது. பெரும்பாலும் ஆண்களிடையே அதை பார்க்கமுடிகிறது. இப்போது தண்ணீர், டயட், ஸ்ட்ரெஸ், மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களால் தலைமுடி அதிகமாக பாதிக்கப்படுகிறது. முறையாக பராமரிக்க முடியாதபோது முடிகொட்டுதல் மேலும் அதிகரிக்கிறது.

உடல் வெப்பநிலை அதிகரிப்பால் முடி கொட்டுதல் ஏற்படுகிறதா? ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு முடி கொட்டும்?

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிக்காதது போன்ற பிரச்சினைகளால் முடி கொட்டுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 100 முதல் 150 வரை மயிரிழைகள் கொட்டும். தலை ஈராமாகும்போது வேர்க்கால்களின் துவாரங்கள் திறக்கின்றன. இதனால் முடிகொட்டுதல் சற்று அதிகமாகவே இருக்கும். அது மீண்டும் முளைக்காமல் போகும்போதுதான் பிரச்சினையாக உருவாகிறது. அதேபோல் ஏற்கனெவே இருக்கும் முடியும் அடர்த்தி குறைவது, நேராக இருந்த முடி வளைந்து போவது போன்றவை முடி பலவீனமாதலை காட்டுகிறது. தலைமுடியின் ஆரோக்கியத்தை சிறிய பரிசோதனை மூலம் கண்டறியலாம். தலையிலிருந்து விழுந்த முடியை எடுத்து அதை இழுத்துப் பார்க்கும்போது சட்டென உடைந்துவிட்டால், முடி பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். அதிலும் குறிப்பாக, உடையும்போது நுனியானது வளைந்து காணப்பட்டால், அதிகப்படியான கெமிக்கல் பயன்பாட்டினால் முடி மிகவும் பலவீனமாகியிருக்கிறது என்று அர்த்தம்.


முடிகொட்டுதலுக்கான காரணிகள்

இளநரை அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் என்ன? முடியை கருப்பாக பராமரிக்க என்ன செய்வது?

இளநரை ஏற்படுவது என்பது ஜெனிட்டிகல் பிரச்சினையாக இருந்தால் அதை பெரிதாக எதுவும் செய்யமுடியாது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸால் தலைமுடி எளிதில் நரைக்கிறது. எனவே முறையான பராமரிப்பு, உடல்நல பிரச்சினைகளை சரிசெய்தல், ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்தல் போன்றவை முடி கொட்டுதல் மற்றும் இளநரையை தடுக்க உதவுகிறது.

ஹேர்டை பயன்படுத்தலாமா?

இளநரை இருப்பவர்கள் ஹேர்டை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஹேர் கலரிங் ட்ரெண்டில் இருப்பதால் பெரும்பாலானோரும் அதை விரும்புகின்றனர். எதை பயன்படுத்தினாலும் அளவாக பயன்படுத்த வேண்டும். எந்த ப்ராடக்ட் வாங்கினாலும், அதில் அம்மோனியா மற்றும் பி.பி.டி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்கவேண்டும். இந்த இரண்டுமே சரும எரிச்சலை தூண்டக்கூடியது. மேலும் அலர்ஜிக்கு வழிவகுக்கும். குறிப்பாக, இந்த ரசாயனங்கள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி மலட்டுத்தன்மை பிரச்சினைக்கும் வழிவகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இளநரையை போக்க உதவும் உணவுகள்

முடியின் தன்மைக்கு ஏற்ப எண்ணெயை தேர்ந்தெடுப்பது எப்படி?

எண்ணெயின் தன்மையை முதலில் ஆராய வேண்டும். எந்த தன்மைகொண்ட எண்ணெய் நமது தலைக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதை தெரிந்துகொள்ள நிபுணர்களின் ஆலோசனை அவசியம். உதாரணத்திற்கு, தலையில் எரிச்சல் தன்மை இருப்பவர்களுக்கு அதிக வாசனையுள்ள அரோமா தெரபி எண்ணெயை பரிந்துரைக்க மாட்டார்கள். சில நறுமணங்கள் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே தலையை சரிசெய்யாவிட்டாலும், அதனை மோசமாக்காமல் இருப்பது நல்லது. பொடுகு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவேண்டாம். வேண்டுமானால் ஒரு மணிநேரம் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தாலே போதுமானது. இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

முடி அடர்த்தியை அதிகரிக்க சில டிப்ஸ்...

முடி கொட்டுதல் பிரச்சினை இருப்பவர்களுக்கு முடியின் அடர்த்தியை அதிகரிக்க சிகிச்சை அளிக்கலாம். ஆனால் தளர்ந்த முடியின் தன்மையை மாற்றி பின்னரே அடர்த்தியை அதிகரிக்க முடியும். எனவே வெயிலில் செல்லும்போது தலைமுடியை மூடிக்கொள்வது நல்லது. தலைமுடியும், நகமும் ஒரே தன்மையுள்ள புரதங்களால் ஆனவை. எனவே, ஊட்டச்சத்து பரிசோதனை மேற்கொண்டு, நகம் வளைந்தால், குறைபாட்டிற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்யவேண்டும். ஸ்ட்ரெஸை கட்டுப்படுத்துதல் மிகவும் முக்கியம். அழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா செய்யலாம். யோகா செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.


முடியின் தன்மைகேற்ப எண்ணெய் தேர்ந்தெடுத்தல்

ஒரு வாரத்தில் எத்தனைமுறை தலைக்கு குளிக்கலாம்?

ஒவ்வொருவருடைய தலைமுடியின் தன்மையை பொருத்தே அதைக் கூறமுடியும். மண்டை ஓட்டின் (Scalp) தன்மையை பொருத்தே ஒரு வாரத்திற்கு எத்தனை முறை தலைக்கு குளிக்கலாம் என்பதை கணிக்கமுடியும். ஜிம்முக்கு போகிறவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதால் தினசரி தலைக்கு குளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேசமயம் அதற்கேற்ற ஷாம்புவை பயன்படுத்தவேண்டும். அதேபோல் நீச்சல் செல்பவர்கள் கட்டாயம் செல்வதற்கு முன்பு தலைக்கு குளிக்கவேண்டும். இல்லாவிட்டால் குளோரின் தலைமுடியை சேதப்படுத்திவிடும். ஸ்விம்மிங் கேப் போட்டாலும் தலைமுடி சேதமடையும் வாய்ப்புகள் அதிகம். வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு ஒரு மணிநேரம் எண்ணெய் வைத்து குளிப்பது நல்லது.

கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லதா?

நல்லது. அதேசமயம் அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. தினமும் தலைக்கு குளிப்பவர்கள் தினமும் கண்டிஷ்னர் பயன்படுத்த தேவையில்லை. அதேபோல், கண்டிஷ்னர் என்பது முடிக்கு மட்டும்தான். தலைக்கு அல்ல. கண்டிஷ்னர் என்பது திக்கானது. எனவே அது தலையில் படிந்துவிடும். இதனால் முடிகொட்டுதலுக்கு வழிவகுக்கும்.


தலைமுடியும் கண்டிஷனரும்

முடிகொட்டுதலில் தூசியின் பங்கு எவ்வளவு?

சருமத்திற்கு எந்த அளவுக்கு தூசி, அழுக்கு மோசமானதாக மாறுகிறதோ, அதே அளவுக்கு தலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தை ஒரு நாளில் குறைந்தது இரண்டு முறையாவது கழுவி, க்ரீம் பயன்படுத்துகிறோம். ஆனால் தலைமுடியை அந்த அளவுக்கு பராமரிப்பதில்லை. இதனால் முடி கொட்டுதல் மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். தூசி மற்றும் அழுக்கால் சருமம் மற்றும் முடி பாதிப்படையும்போது, அறிகுறிகள் தென்படும். உடனே அதனை கண்டறிந்து அதற்கான பராமரிப்புகளை மேற்கொள்வது நல்லது.

Updated On 2 Oct 2023 6:35 PM GMT
ராணி

ராணி

Next Story