இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குளிர்காலத்தில் சுற்றுலா செல்ல ஒரு தரப்பு மக்கள் ஆர்வம் காட்டி வரும் வேளையில், அதே அளவிற்கு நோய்தொற்றுகள் குறித்த பயத்துடன் இருக்கின்றனர் இன்னொரு தரப்பினர். மற்ற பருவ காலங்களைவிட குளிர்காலத்தில் ஏன் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். குளிர், மழைக்காலங்களில் பரவக்கூடிய தொற்றுநோய்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்தும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்குகிறார் தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் பாக்கியராஜ்.

மழைக்காலங்கள், குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?

தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பேரழிவை சந்தித்திருக்கின்றன. இதனால் பொருளாதார ரீதியாக மக்கள் ஒருபுறம் பாதிக்கப்பட்டாலும் மற்றொரு புறம் நோய்க்கிருமிகளாலும் பாதிக்கப்படுகின்றனர். மழை மற்றும் குளிர்காலங்களில் வெக்டார் நோய்ப்பரவல் அதிகமாக இருக்கும். நமது ஊரில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று காலரா. இதனால் வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குளிர்காலத்தில் நிறையப்பேருக்கு இருக்கக்கூடிய மூச்சு பிரச்சினையின் காரணி என்ன?

மூச்சு பிரச்சினைகள் பல்வேறு காரணங்களால் வருகின்றன. குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு நிறையப்பேருக்கு மேல்புற சுவாசக்குழாய் பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொதுவாகவே நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை வைரஸ்கள் ஏற்படுத்துகின்றன. சிக்குன்குனியா வைரஸ் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம். வைரஸ்கள் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தி, நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி, சுவாசக்குழாய் தொற்றுக்களை ஏற்படுத்துகிறது. இதனால்தான் SpO2 என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுகிறது. உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூச்சு பயிற்சிகள் மூலம் இதுபோன்ற நோய்த்தொற்றுகளின் தீவிரத்திலிருந்து தப்பிக்கலாம்.


தொற்றுநோய்க்கான காரணிகள்

மருத்துவ வசதிகளின்றி தவிப்பவர்கள் வீட்டிலேயே தொற்றுநோய் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியுமா?

இந்தியாவை பொருத்தவரை நிறையபேர் போதிய வசதிகளின்றிதான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் சிறப்பான முயற்சிகளை எடுத்து அரசு மருத்துவமனைகளிலேயே இலவச மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் ஆங்காங்கே ஆரம்ப சுகாதார நிலையங்கள், வீடு தேடி மருத்துவம் என சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மக்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மக்கள் மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிட்டால் நோய் குணமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதனால்தான் multi drug resistant bacteria -க்கள் உருவாகி உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக இருப்பவர்கள் திடீரென நோய்வாய்ப்படுவது எதனால்?

உதாரணத்திற்கு மழையில் நனைந்தால் இரண்டு நாட்களுக்குள் சளி பிடிக்கும். சளி பிரச்சினைக்கான காரணம் தெரிந்திருந்தும் பலபேர் அதற்கான அடிப்படை சிகிச்சை எடுக்க மறுக்கிறார்கள். ஆரம்ப தொற்றுக்கு வீட்டிலேயே கசாயம் செய்து குடிப்பதில் தவறில்லை. ஆனால் அதுவே தீவிரமாகும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். குறிப்பாக, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.


மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது

மழைக்காலத்தில் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு தீர்வு என்ன?

குறிப்பாக, மழை மற்றும் வெயில்காலங்களில் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவர்களை immunocompromised patients என்கிறார்கள். அதேபோல, வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இன்ஃப்ளூயன்சாவால் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி போன்ற தொற்றுகள் எளிதில் பரவுகின்றன. குழந்தைகள் கைகளை தரையில் வைத்துவிட்டு அப்படியே வாயில் வைப்பதால் பாக்டீரியாக்கள் எளிதில் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன. எனவே குழந்தைகளின் கைகளை அடிக்கடி கழுவுவது, அவர்களை சுத்தமாக வைத்திருப்பது போன்றவைமூலம் தொற்றை தவிர்க்கலாம்.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று எளிதில் பரவுவதற்கான காரணிகள் என்னென்ன?

கொரோனா தொற்றானது droplets (சளி, எச்சில் நீர்த்திவலைகள்) மூலமாக பரவுகிறது. காசநோயானது (Tuberculosis) காற்றின்மூலம் பரவுகிறது. எயிட்ஸ் (Bloodborne pathogens) ரத்தத்தின்மூலமாக பரவக்கூடியது. நோயாளிகளின் பக்கத்தில் நிற்பதாலோ, அவர்களை தொடுவதாலோ எயிட்ஸ் பரவாது. சுவாசக்குழாய் தொற்றுகளானது எளிதில் பரவும் என்பதால் கைகள் மற்றும் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் மழை வெள்ளம் போன்ற காரணங்களால் வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதனை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.


டெங்குவை பரப்பும் Aedes aegypti கொசு

ஈ. கோலை பாக்டீரியா என்ற ஒரு பாக்டீரியா குடல் பகுதியில் இருக்கும். இந்த பாக்டீரியா மலத்தின் வழியாக வெளியே வரும். பொது இடங்களில் மலம் கழிக்கும்போது, மழை வெள்ள சமயங்களில் தண்ணீரில் பரவி மனிதர்களை பாதிக்கும். எனவே நாம் சாப்பிடும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சீராக பராமரிக்க வேண்டும். மழை-வெள்ளம் வீட்டிற்குள் புகுவதால் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் அண்மையில் பார்த்தோம். எனவே வீட்டிலுள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகமிக அவசியம்.

ஒருசிலருக்கு டெங்கு, டைஃபாய்டு போன்ற நோய்கள் மீண்டும் மீண்டும் வருவது ஏன்?

டெங்கு வைரஸானது ஒரு வருடம் வரை உயிர்வாழக்கூடிய வாய்ப்புகள் அதிகம். டெங்குவானது Aedes aegypti என்ற கொசு மூலமாகத்தான் பரவுகிறது. எனவே இந்த கொசு வீட்டுக்குள் வராமல் தடுக்க, கொசு வலை போடவேண்டும். அதேபோல் நல்ல தண்ணீரிலிருந்து கொசு உற்பத்தியாவதால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாகவே மழை நீரானது நல்ல தண்ணீர் என்பதால் அதனை தேங்கவிடாமல் உடனடியாக அகற்றிவிடுவது நல்லது. டைஃபாய்டு அடிக்கடி வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில் அதில் O, H, AH, BH என நான்கு ஆன்டிஜென்கள் உள்ளன. இந்த பாக்டீரியாவானது 22 நாட்கள் நமது உடலில் அதன் தாக்கத்தை செலுத்தும். இதனால் ஒருமுறை டைஃபாய்டு வந்து குணமான பிறகும், ஒரு வருடம் வரை பரிசோதித்தால் பாசிட்டிவ் என்றுதான் காட்டும். இதற்கு பயப்பட வேண்டியதில்லை. முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் காதுகள் மற்றும் கண்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.


ஊட்டச்சத்து உணவுகள் - கீரைகள், காய்கறிகள் மற்றும் கனிகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் ஹைஜீனிக் உணவுகள் குறித்து கூறுங்கள்...

ஹைஜீனிக் உணவு என்று கிடையாது. ஹைஜீனிக் என்ற பெயரில் ஐரோப்பிய உணவுமுறைகளுக்கு சென்றுவிட்டோம். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகள்தான் தமிழ் கலாசார உணவுகள். கீரைகள், காய்கறிகள், கனிகளை தமிழ் கலாசாரப்படி எடுத்துக்கொண்டாலே போதுமானது. உலகிலேயே கீரை வகைகள் அதிகமாக கிடைப்பது இந்தியாவில்தான். இயற்கையாக கிடைக்கக்கூடிய அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களிலுமே வைட்டமின் பி, டி சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. எனவே கீரை மற்றும் பருப்பு வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிறையப்பேருக்கு சொறி, சிரங்கு, சேற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதற்கு தீர்வு என்ன?

சேற்றில் அதிகமாக நடப்பது, நீரில் நீண்ட நேரம் நிற்பது போன்ற காரணங்களால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆசியாவிலேயே இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களுக்கு சிறு புண்கள் வந்தாலே அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சிறு புண் ஏற்பட்டவுடனேயே மருத்துவரை அணுகி மருந்துகளை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் செப்டிக் ஆகி ரத்தநாளங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள்

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறதா?

100% வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு வைரஸுமே அதன் வீரியத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட தடுப்பூசியும் எந்த அளவிற்கு ஆண்டிபாடிகளுடன் இருக்கிறது என்பது குறித்து அறிவியல்பூர்வமாக தெளிவாக விளக்கப்படவில்லை. ஒவ்வொரு வைரஸும் உருமாறிக்கொண்டே இருப்பதால் ஒமிக்ரானிலிருந்து உருமாறி உருமாறி தற்போது ஜே.என்.1 வகை வைரஸானது பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது பரவும் வைரஸானது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.

Updated On 15 Jan 2024 11:58 PM IST
ராணி

ராணி

Next Story