இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தக் கால குழந்தைகள் டிவி, செல்போன் மீது காட்டும் ஆர்வத்தை உணவு மற்றும் விளையாட்டின்மீது காட்டுவதில்லை. முக்கியமாக, காலை உணவை சாப்பிடுவதில் குழந்தைகள் ஆர்வம் காட்டுவதில்லை. அதேபோல வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதும் இல்லை. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதுடன், உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக்கொள்வது எப்படி? அவர்கள் உடல்நலத்தை எப்படி பேணிகாக்க வேண்டும்? என்பது குறித்த பல கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ரேமா.

காலை உணவு, மதிய உணவை தவிர்க்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிட என்ன செய்யவேண்டும்?

முன்பெல்லாம் பள்ளி நேரம் 9 மணிக்கு மேல்தான் இருந்தது. ஆனால் இப்போது நிறையப் பள்ளிகள் 8 மணிக்கே தொடங்கி 2 மணிக்குள் முடித்துவிடுகிறார்கள். பொதுவாகவே குழந்தைகள் காலையில் தூங்கி எழும் நேரத்தை பொறுத்துதான் அவர்கள் சாப்பிடும் நேரமும் இருக்கும். தாமதமாக எழுந்திருக்கும்போது உடனே பசிக்காது. அதனாலேயே இன்றைய பெற்றோர்கள் பால் மட்டும் கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். மேலும் இப்போதுள்ள குழந்தைகள் மதிய உணவுக்கு வெரைட்டி வெரைட்டியான உணவுகளை கேட்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் பெற்றோர்தான் மாறவேண்டுமே தவிர, இந்த தலைமுறையினரை மாற்றமுடியாது. எனவே குழந்தைகள் தூங்கச்செல்லும் நேரத்தை பெற்றோர் ஒழுங்குபடுத்த வேண்டும்.

முடிந்தவரை ப்ரைமரி பள்ளிக்குழந்தைகள் இரவு 9 மணிக்குள் தூங்கச்செல்ல வேண்டும்.குறைந்தது 9 மணிநேர தூக்கம் அவசியம். காலை எழுந்தவுடனே குழந்தைகள் டாய்லெட் செல்லமுடியாது. அதற்கு குடல் இயக்கம் தேவை. எனவே சிறிதுநேரம் ஓடி விளையாட வேண்டும். பெற்றோரும் காலை எழுந்தவுடன் பால் கொடுப்பார்கள். சூடான பானத்தை குடிக்கும்போது டாய்லெட் செல்வதும் எளிதாகி விடும். வயிறு சுத்தமான பிறகு, மற்ற வேலைகளை முடித்துவிட்டு குழந்தை காலை உணவை சாப்பிடுவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும். அப்போது குழந்தைக்கு பசி எடுக்கும். குழந்தைக்கு ஏற்றாற்போல் காலை உணவை கொடுக்கவேண்டும்.


குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு அவசியம்

ப்ரேக் டைமிற்கு பிஸ்கட் கொடுக்காமல், பழங்கள், காய்கறிகளை கொடுக்கவேண்டும். இப்போது நிறையப் பள்ளிகளில் நொறுக்குத்தீனிகளை கொடுக்கக்கூடாது என்பதை பின்பற்றுகிறார்கள். எனவே வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை கொடுக்கலாம். இதனால் பசியும் எடுக்காது. மதியம் சரிவிகித உணவை கொடுப்பதும் அவசியம். கார்போஹைட்ரேடிற்கு அரிசி சாதம், புரதத்திற்காக பருப்பு, காய்கறிகளை கொடுத்து அனுப்பவேண்டும். தினமும் ஒரே மாதிரியான உணவைக் கொடுக்காமல் வித்தியாசம் காட்டினால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வேறு என்னென்ன காரணங்கள் உள்ளன?

பொதுவாகவே குழந்தைகள் தூங்கி எழுவதற்கும் டாய்லெட்டுக்கு செல்வதற்கும் குறைந்தது அரை மணி நேர இடைவெளியாவது தேவை. காலையில் அவசர அவசரமாக கிளம்பும் குழந்தைகள் மதியத்திற்கு மேல்தான் டாய்லெட் செல்கிறார்கள். இரண்டாவது டயட். கீரை, நார்ச்சத்து மிகுந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும். குளிர்பானங்கள் மற்றும் பேக்கரி பொருட்களை தவிர்க்கவேண்டும். இதுதவிர, சுடுதண்ணீர் குடிகொடுத்து, குறைந்தது 10 நிமிடமாவது குழந்தையை டாய்லெட்டில் அமர வைக்கவேண்டும். இப்போது மலச்சிக்கல் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒன்றிரண்டு ஆண்டுகள் அதனை கண்டுகொள்ளாமல் விடும்போது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல் குழந்தைகள் அமரும் டாய்லெட் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்.


மலச்சிக்கலை தவிர்க்க ஃபாஸ்ட் ஃபுட்ஸ் கொடுக்கக்கூடாது

மாலை பள்ளி முடிந்து வந்ததும் குறைந்தது ஒரு மணிநேரமாவது ப்ரேக் கொடுக்கவேண்டும். உடனே டியூஷன் மற்றும் பிற வகுப்புகளுக்கு அனுப்பக்கூடாது. அதேபோல் குழந்தைகளை மதியம் தூங்கவைக்காமல் இருப்பது நல்லது. மாலை வரை குழந்தை தூங்கிவிட்டால் இரவு தூக்கம் வராது. சாயந்தரம் குழந்தைகளை கொஞ்ச நேரம் விளையாட விடவேண்டும். செல்போன் பயன்பாட்டை குறைக்கவேண்டும். இரவு உணவை 8 மணிக்குள் கொடுத்துவிட்டால் ஹோம் வொர்க் முடித்துவிட்டு உடனே தூங்கிவிடுவார்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை வயதுக்கேற்றாற்போல் எப்படி கொடுப்பது?

2 - 7 வயது வரையிலான குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்பது சிரமமான விஷயம். 1 வயது வரை குழந்தைகள் சீக்கிரம் வளர்ந்துவிடுவார்கள். அதன்பிறகு பசிக்கும்தன்மை இயல்பாகவே குறைந்துவிடும். அதனால் 7 வயது வரை வளர்ச்சி என்பது சற்று குறைவாகத்தான் இருக்கும். இந்த சமயத்தில் சாக்லெட் அல்லது பிஸ்கட் கொடுத்தால் பசி எடுக்காது. எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை ஸ்ப்ரிங் ரோல் அல்லது கட்லெட் போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுப்பதை விட பழங்களை அப்படியே சாப்பிடக் கொடுப்பது நல்லது.


குழந்தைகள் விளையாட்டு அவசியம்

இன்றைய குழந்தைகளிடையே உடல் இயக்கமானது மிகவும் குறைவாக உள்ளது. இதனால் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்?

அபார்ட்மெண்ட் மற்றும் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களில் வசிக்கும் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுகிறார்கள். ஆனால் சிறிய இடங்களில் வசிக்கும் குழந்தைகள்தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதை பார்க்கமுடிகிறது. குறிப்பாக ஒபேசிட்டி என்று சொல்லக்கூடிய உடற்பருமன், சமூகத்துடன் சேருதல் மற்றும் ஆட்டிஸம் சார்ந்த குறைபாடுகள் போன்றவை வருகிறது.

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் என்னென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டால் குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும்?

பெண்கள் 21 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது. தாய்க்கு எந்தவித தொற்றும் இருக்கக்கூடாது. தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தது 5 பரிசோதனையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். சொந்தத்திலேயே திருமணம் செய்பவர்களுக்கு சில மரபணு பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இருப்பதால், கரு பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். கருவுற்றிருக்கும் தாய் 9 -12 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். மன மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கவேண்டும்.


பாலூட்டும் தாய்மார்களுக்கான கவனிப்பு

பீடியாட்ரீஷியனுக்கும் நேனட்டாலஜிக்கும் என்ன வித்தியாசம்?

நேனட்டாலஜி என்பது பச்சிளம் குழந்தையை பராமரிக்கும் மருத்துவம். அதாவது பிறந்து ஒரு மாதம் வரையிலான குழந்தையை பராமரிக்கும் மருத்துவர். இதற்கு பீடியாட்ரீஷியன் படித்து முடித்துவிட்டு மேலும் 3 ஆண்டுகள் படிக்கவேண்டும். இதனால் பிறந்த குழந்தையை இன்னும் சிறப்பாக பார்த்துக்கொள்வார்கள்.

எப்போது குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்தவேண்டும்?

குறைந்தது 2 வருடங்களாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். ஒரு வயதிலேயும்கூட அதனை நிறுத்திவிடலாம். வேண்டுமென்றால் 4 வயது வரைகூட தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் குழந்தைக்கு 2 வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிடலாம்.


குழந்தைகளுக்கான ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள்

குழந்தை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்?

காலை 6.30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இருவேளையும் பல் துலக்க வேண்டும். சூடான தண்ணீர் அல்லது பால் கொடுத்தால் வயிறு சுத்தமாகிவிடும். அடுத்த அரை மணிநேரத்தில் காலை உணவு கொடுக்கவேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு வகுப்பை கவனிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். கண் பிரச்சினைகள், காது கேளாமை, புரிதல் தன்மை, பிற குழந்தைகளை அடிக்கிறதா போன்ற பிரச்சினைகள் தாமதமாகத்தான் பெற்றோருக்கு தெரியவருகின்றன. எனவே பெற்றோர் - ஆசிரியர் மீட்டிங் மிகவும் முக்கியம். அதேபோல், பிரைமரி வகுப்பு குழந்தைகளை டியூஷன் அனுப்பாமல் பெற்றோரே வீட்டில் வைத்து சொல்லிக்கொடுப்பது இணக்கத்தை ஏற்படுத்தும். கலர்ஃபுல்லான உணவுகளை கொடுக்கவேண்டும். ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கில் ஈடுபட வலியுறுத்த வேண்டும்.

Updated On 21 Nov 2023 12:04 AM IST
ராணி

ராணி

Next Story