இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகளவில் அதிகம் பேருக்கு வரக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று ஹார்ட் அட்டாக். முன்பெல்லாம் 50 வயதை தாண்டியவருக்குத்தான் இதயம் மற்றும் உள்ளுறுப்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும் என்ற நிலை மாறி சமீப காலமாக 30 வயதிற்குட்பட்டோர் பலருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. ஏன்? பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பலர் விளையாடிக்கொண்டிருக்கும்போதே திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதை தினசரி செய்திகளில் பார்க்கிறோம். இதற்கு வெளிப்புற காரணிகள் பல இருந்தாலும் முக்கியமாகப் பார்க்கப்படுவது மனநலம்தான். மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொண்டாலே இதயத்தின் ஆயுளை அதிகரிக்கலாம் என்கிறார் பேராசியர், இதய நிபுணர் வி. சொக்கலிங்கம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான தாரக மந்திரம் குறித்தும், இதயத்தை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் அவர்.

இதயத்தை இளமையாக பார்த்துக்கொள்வது எப்படி?

80 வயதுடைய ஒரு நபர் 60 வயதுபோல் தெரிகிறார் என்றால் அதற்கு காரணம் மகிழ்ச்சிதான். இதயம் என்பது 125 வயதுவரை இயங்குவதற்கு ஏற்ற சக்தியுடன் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அனைத்தும் அதிவேகத்தில் இயங்குகிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் 70 அல்லது 80 வயதை தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக் வரும். சமீபகாலமாக, இந்த வயது படிப்படியாக குறைந்து இப்போது 20 - 30 வயதுடையவர்களுக்கெல்லாம் அதிக ஹார்ட் அட்டாக் வருகிறது. இந்தியாவில் மட்டும், இப்படி ஒரு மணிநேரத்துக்கு 90 பேர் இறப்பதாக சமீபத்திய ஆய்வுகள் வெளியாகி அதிர்ச்சியூட்டுகின்றன. 125 வருடங்கள் இயங்கவேண்டிய இதயம் 25 ஆண்டுகளுக்குள் செயலிழக்கிறது என்றால் அது அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டுகின்றது. இதயத்திற்கு தேவை மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியைவிட சிறந்த தியானமோ மருந்தோ கிடையாது. Chronological வயதை நம்மால் மாற்றமுடியாது. ஆனால் biological வயதை கட்டாயம் நம்மால் மாற்றியமைக்க முடியும். வாழ்கின்ற அந்தந்த நொடியை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஆவதும், அழிவதும் மனதினால்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


மாரடைப்பு வராமல் தடுக்க மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்

நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. டோபோமின், ஆக்சிடாக்ஸின், செரட்டோனின் போன்றவையும் எண்டார்பினின் கதவுகளாக பார்க்கப்படுகின்றன. ஹேப்பி ஹார்மோன்கள் என அழைக்கப்படும் இவை அனைத்தும் விலைமதிப்பற்றவை. மகிழ்ச்சி வேண்டும் என்பதற்காக நிறைய இளைஞர்கள் மார்பின் கலந்த போதை ஊசிகளை செலுத்திக்கொள்கின்றனர். இதனால் கிடைக்கின்ற மகிழ்ச்சி தற்காலிகமானது என்றாலும் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து உயிரையே கொன்றுவிடும். ஆனால் உடலில் இயற்கையாகவே சுரக்கின்ற மார்பின்தான் எண்டார்பின். இது அனைத்து உறுப்புகளுக்குமே தேவைப்படுகிறது.

எண்டார்பின் ஹார்மோனை மனித உடலிலிருந்து எடுத்து மருந்துபோல் உருவாக்கி உடலில் செலுத்த பல ஆண்டுகள் நியூயார்க்கில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்படி நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவில் 10 CC எண்டார்பினின் விலை 2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. அப்படியே அவ்வளவு விலைகொடுத்து வாங்கி அதை நரம்பு வழியாக உடலில் செலுத்தினாலும் அது வெறும் 10 நிமிடங்கள்தான் மகிழ்ச்சியை கொடுத்தது. எனவே இயற்கையாக எண்டார்பின் சுரக்க மகிழ்ச்சியாக இருப்பது அவசியம்.


மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும்போது உருவாகும் எண்டார்பினை செயற்கையாக தயாரித்து ஊசி மூலம் 10 CC உடலில் செலுத்த ரூ.2 லட்சமாகும்

உதாரணத்திற்கு ஒன்றிலிருந்து 10 வரை எந்த அளவில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் பலர் 3 அல்லது 4 அல்லது 5 என்றுதான் சொல்கிறார்கள். வெளிப்புற காரணிகள்தான் நமது மகிழ்ச்சியை குறைத்து வைத்திருக்கின்றன. எனவே உள்மனதில் மகிழ்ச்சி அளவை 10 என வைத்துக்கொண்டால் அப்போது எண்டார்பின் சுரந்துகொண்டே இருக்கும். அதை வைத்துக்கொண்டு வெளிப்புற பிரச்சினைகளை சரிசெய்யலாம்.

உலகிலுள்ள 840 கோடி ஜனத்தொகையில் யாரிடம் கேட்டாலும் பிரச்சினை எதுவும் இல்லை என்று ஒருவரும் சொல்லமாட்டார்கள். எந்தவொரு மனிதனும் பிறந்து வாழ்ந்து இறக்கும்வரை பிரச்சினையற்று இருக்கமுடியாது. உண்மையை சொல்லவேண்டுமானால் பிரச்சினைகள்தான் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவே மன அமைதி வேண்டும். ஒருவர் தன்னை அறிந்துகொள்ளும்போது மனம் அமைதியடைந்துவிடும். இதுதான் அறிவு. அறிவு என்பது தன்னை அறிவதுதான். தன்னிடமிருக்கும் நேரம், உழைப்பு, பணம், விட்டுக்கொடுத்தல் என எதையும் கொடுக்கும் இடத்தில் இருந்தால் மகிழ்ச்சி குறையாது. குறிப்பாக, விட்டுக்கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் இருக்கிறது. சாரி என்ற ஒரு வார்த்தையை பலர் சொல்லமாட்டார்கள். விட்டுக்கொடுக்காததால் கணவன் - மனைவி, உறவுகள், சுற்றங்கள் முதல் நாடுகள்வரை அனைத்தும் அழிந்துகொண்டிருக்கிறது. நாம் தவறே செய்யாவிட்டாலும் சிலர் சண்டைப்போட்டுக்கொண்டே இருந்தால் அவருடைய உயிரைக் காப்பாற்றுவதாக எண்ணி சாரி என்று சொல்லிவிடவேண்டும். நம்மைவிட யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்ற எண்ணம் வேண்டும். ஒருவராலும் தனித்து வாழ்ந்துவிட முடியாது. சமுதாயத்துடன் ஒன்றி வாழ்ந்தாலே மகிழ்ச்சி குறையாது. வயதும் கூடாது. அதேபோல் வெற்றியடைவது மகிழ்ச்சி அல்ல; மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.


சாதாரண மனிதன்கூட மகிழ்ச்சியாக இருக்கும்போது பில் கேட்ஸைவிட பெரிய பணக்காரனாகி விடுகிறான் - மருத்துவர் சொக்கலிங்கம்

கடுமையான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது எப்படி?

மாற்றமுடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர், பலர் வேலை, பணத்தை இழந்தனர். இவை அனைத்தையும் மாற்றமுடியாது என்று நாம் நினைத்தோம், அதனால் அதை ஏற்றுக்கொண்டோம். அதேசமயம் மாற்றமுடியும் என்று நினைத்தால் முயற்சிசெய்து மாற்றக்கூடிய வலிமையை பெறவேண்டும். இந்த இரண்டையும் வேறுபடுத்தி ஏற்றுக்கொள்வதுதான் ஞானம். ஒரு பிரச்சினையைப் பார்த்து கவலைப்பட்டால் பிரச்சினை குறையாது. ஆனால் கவலையால் உயிர்தான் போகும். அதேபோல் யாரை பார்த்தும் வாழ்க்கையை காப்பி அடிக்கக்கூடாது. ஒவ்வொருவரும் தனி சக்தி படைத்த தனிமனிதர்கள். உதாரணத்திற்கு, யாசகம் பெறுபவர்கள் மகிழ்ச்சியுடன் அதை செய்தால் பில்கேட்ஸைவிட அந்த நபர் பணக்காரர்தான். எதை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்யவேண்டும். இப்போது ஐடியில் வேலைசெய்யும் பலர் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் மகிழ்ச்சியை இழப்பதால்தான் இதய மருத்துவர்களை தேடி வருகிறார்கள். Work is worship என்பதை புரிந்துகொண்டு, தனிப்பட்ட வாழ்க்கையையும், வேலையையும் சமச்சீராக கையாள கற்றுக்கொள்ளவேண்டும்.


இதயத்தின் ஆயுளைக் கூட்ட யோகா மற்றும் தியானம் அவசியம்

சமீபகாலமாக இந்தியாவில் இதயநோய்கள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு என்ன காரணம்?

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நீரிழிவு, ஹார்ட் அட்டாக், பிபி, கேன்சர், கொலஸ்ட்ரால் போன்ற பல நோய்களுக்கு இந்தியா கேபிட்டல் ஆகிவிட்டது. அதற்கு காரணம் உடல்நலத்தை கருத்தில்கொள்ளாததுதான். முதலில் வியாதியற்ற நிலையைத்தான் உடல்நலம் என்று கூறுவர். ஆனால் 49 வருடங்களுக்கு முன்பு positive state of health என்பதை மனம், உடல், ஆன்மிகம், சமுதாயம் என நான்கையும் வைத்துத்தான் தீர்மானிக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல், உயிர் மற்றும் ஆன்மிகம் மூன்றையும் சேர்த்து நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்ததுதான் யோகா மற்றும் தியானம். நமது நாட்டிலிருந்து சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இவற்றை கற்றுக்கொண்டு தற்போது ஹார்ட் அட்டாக் அளவை குறைத்துவருகிறார்கள். ஆனால் அவற்றை கண்டுபிடித்து கொடுத்த நாம் அதை கடைபிடிக்காததால் தற்போது ஹார்ட் அட்டாக் எண்ணிக்கையானது நமது நாட்டில் கூடிக்கொண்டே போகிறது. எல்லா வியாதிகளும் மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்களால்தான் வருகிறது. மனதில் இதுபோன்ற எண்ணங்கள் மேலோங்கும்போது அட்ரிலின் சுரப்பானது அதிகரிக்கிறது. இந்தியாவில் உறவுகளிடம் அதிக நெருக்கம் காட்டுவதால், மாமியார் - மருமகள், அம்மா - மகள், கணவன் - மனைவி என நெருங்கிய உறவுகளிடம் விட்டுக்கொடுத்தல் குறைவதால் அதிக சண்டை வருகிறது. பேராசையும் அதிகரித்துவிடுகிறது. ஒருசிலர் 20 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு அடுத்த நொடியே அரக்கர்களாக மாறிவிடுகின்றனர். தியானம் வாழ்க்கை முழுக்க இருக்கவேண்டும்.

Updated On 8 July 2024 6:12 PM GMT
ராணி

ராணி

Next Story