ஆயுளைக் கூட்டி மனஅழுத்தத்தை குறைக்கும் மூச்சுப் பயிற்சிகள்
பரபரப்பான இயந்திர உலகில் நம் உடலின் இயக்கத்தைப் பற்றி நாம் முறையாக தெரிந்து கொள்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை. நாம் உடலை முறையாக இயக்கினால் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி ஆயுளும் கூடும். இப்படி உடலை சரியாக இயங்கச் செய்வதான முறைகளுள் ஒன்றுதான் மூச்சுப் பயிற்சி. யோகாவின் அங்கமான மூச்சுப் பயிற்சி எனப்படும் பிராணாயாமப் பயிற்சிகள் அவற்றின் செய்முறை மற்றும் பலன்களைப் பற்றி இப்பதிவில் நாம் விரிவாக காண்போம்.
பிராணாயாமப் பயிற்சி: இதில் நாம் முக்கியமாக பார்க்கப்போவது நாடி சோதனப் பிராணாயாமா, கபாலபாதி, பஸ்திரிகா.
பிராணாயாமப் பயிற்சி செய்வதற்கான காரணங்களும், முக்கியத்துவங்களும்
நம் வாழ்வில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பயிற்சிகளுள் ஒன்று பிராணாயாமப் பயிற்சி. இப்பயிற்சியை செய்வதால் நுரையீரலின் சுவாசிக்கும் திறன் அதிகரிக்கும். இயல்பாக ஒரு மனிதனுடைய நுரையிரலின் சராசரி கொள்ளளவு 4.5 லிட்டர் வரை இருக்கும். ஆனால், தற்போதிருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பணிச்சூழல் காரணமாக நுரையிரலின் கொள்ளளவு 2.5 முதல் 3 லிட்டர் என்ற அளவில் குறைந்து போய்விட்டது. பிராணாயாமப் பயிற்சி நுரையீரலின் அளவை விரிவுபடுத்த உதவுகிறது. இப்படியாக நாம் நுரையீரலின் கொள்ளளவை விரிவுபடுத்துவதன் மூலம் நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யலாம். அதுமட்டுமின்றி மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இப்பயிற்சியை வெறும் வயிற்றில் அதிகாலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் செய்வது நன்று.
நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் பிராணாயாமாப் பயிற்சி
நாடி சுத்திப் பிராணாயாமா
நாடி சோதனப் பிராணாயாமாதான் நாடி சுத்திப் பிராணாயாமா ஆகும். நாடிகள் என்றால் நரம்புகள் என்று அர்த்தம். நமது உடலில் மொத்தம் எழுபத்திரண்டாயிரம் நரம்புகள் உள்ளன. இந்த நாடிகள் அனைத்தையும் சரிவர உடல் முழுவதும் இயங்கச் செய்தல் வேண்டும். மூலாதாரத்திற்கு கீழ் உள்ள உயிராற்றலை உடல் முழுமைக்கும் இயங்கச் செய்வதால் நமது உடலில் நோய் எதுவும் இல்லை என்பதை அறியலாம். இதற்கு நமது சித்தர்கள் சொன்ன ரகசியம்தான் மூச்சுப் பயிற்சி என்ற பிராணாயாமா. இந்த மூச்சுப் பயிற்சியில் அடிப்படையாக செய்யப்படும் ஒன்றுதான் நாடி சுத்திப் பிராணாயாமா.
நாடி சுத்திப் பிராணாயாமா என்பது மூக்கின் இடது துவாரத்தில் மூச்சை இழுத்து, வலது துவாரம் மூலம் வெளியே விடுவது ஆகும். அதேபோன்று வலது துவாரத்தில் மூச்சை இழுத்து இடது துவாரம் வழியே வெளிவிட வேண்டும். இதில் இடது துவாரம் சந்திர நாடி என்றும், வலது துவாரம் சூரிய நாடி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரு துவாரங்களிலும் மாற்றி மாற்றி இப்பயிற்சியை செய்ய வேண்டும். அதாவது “ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றை அளக்கும் கணக்கறிவாளருக்கு கூற்றை உரைக்கும் குறி”. இதன் பொருள் என்னவென்றால் “நாடி சுத்திப் பிராணாயாமாவில் காற்றை எவ்வளவு உள்ளிழுக்க வேண்டும், வெளியே விட வேண்டும் என்ற அளவை அறிந்து பயிற்சி செய்து வந்தால் இறப்பை ஒத்திப்போடும் ஆற்றல் மிக்கவராக மாறுவர்”.
நாடி சுத்திப் பிராணாயாமா செய்யும் முறை
ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரலை மடக்கிக் கொண்டு, மோதிர விரலால் இடது நாசியையும் பெருவிரலால் வலது நாசியையும் அடைத்துக் கொள்ளவும். கண்களை மூடிக் கொண்டு இடது நாசியிலிருந்து மோதிர விரலை நீக்கி மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கவும். அவ்வாறு இழுக்கும் பொழுது கழுத்தில் ஓர் அதிர்வு உண்டாகும். இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசி வழியாக மூச்சுக்காற்றை வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியேற்றுவதால் உடலில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடு அனைத்தும் வெளியேற்றப்படும். இதையை எதிர்மாறாக மாற்றி செய்ய வேண்டும். அதாவது முதலில் இடதுபுறம் மூச்சை உள்ளிழுத்து வலதுபுறத்தில் வெளியேற்ற வேண்டும். பிறகு வலதுபுறத்தில் மூச்சை உள்ளிழுத்து இடதுபுறத்தில் வெளியேற்ற வேண்டும். இது ஒரு வட்ட சுற்று ஆகும். இதைப்போன்று தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்வதால் நமது நுரையீரல் நன்கு வலுப்படும்.
நாடி சுத்திப் பிராணாயாமாவின் பலன்கள்
இந்தப் பயிற்சியை நாம் தினமும் பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். சராசரியாக, நாம் ஒரு நிமிடத்திற்கு பத்து முதல் பதினைந்து முறை மூச்சு விடுவது வழக்கம். ஆனால், இந்த பயிற்சியின்போது ஒரு நிமிடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை வரை மட்டுமே மூச்சு விடுகிறோம். இதன்மூலம், பிறந்ததிலிருந்தே ஓய்வு இல்லாத உடல் உறுப்பாக கருதப்படும் இதயத்துக்கு சிறிதளவு ஒய்வு கிடைக்கிறது. அதனால் நமது இதயம் நீண்ட நாள் உழைக்கும் சக்தியைப் பெறும். மனிதர்களோ, மிருகங்களோ எந்த உயிராயிருந்தாலும் சுவாசிப்பதன் எண்ணிக்கை அளவை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தனது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள இயலும். இதில் மிருகங்களைப் பொறுத்தவரையில், ஆமைகள் ஒரு நிமிடத்திற்கு இரண்டு முறை மட்டுமே மூச்சு வாங்கும். மலைப்பாம்பு ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே மூச்சு விடும். அதனால்தான் அவை ஆயிரம் ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. நாய்கள் ஒரு நிமிடத்திற்கு முப்பத்திரண்டு முறை மூச்சு விடுகிறது. அதனால்தான் அவை பதினாறு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மனிதர்கள் ஒரு நிமிடத்திற்கு பதினைந்து முறை வரை மூச்சு விடுவதால். நூறு முதல் நூற்றிருபது ஆண்டுகள் வரை வாழ முடிகிறது. அதுமட்டுமின்றி நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். நுரையீரலிலிருந்து சளி வெளியேறுவதோடு முகமும் பொலிவு பெறும்.
நுரையீரல் மற்றும் சளி பிரச்சினைகளை தீர்க்கும் நாடி சுத்திப் பிராணாயாமா
கபாலபாதி
“கொல்லன் உண்டு துருத்தி உண்டு சொர்ணமான ஜோதி உண்டு” அதாவது கொல்லன் என்பவன் பாத்திரங்களுக்கு முலாம் பூசுபவர். அவர் தனது கையிலிருக்கும் துருத்தி எனப்படும் ஒரு தோல் பையை அழுத்திக் கொண்டே பாத்திரங்களுக்கு முலாம் பூசும்போது கனன்று கொண்டிருக்கும் கனலின் மீது ஒரு நெருப்பு ஜுவாலை உருவாகும். இதில் துருத்தி என்பது நமது உடலின் நுரையீரலைக் குறிக்கிறது. கொல்லன் மனிதனைக் குறிக்கிறது. அதாவது மனிதன் மூச்சுக்காற்றை நன்கு இழுத்து விடும்போது அந்த ஜோதியைப் போன்று அவனது கபாலமும் ஒளி பெறும்.
கபாலபாதி செய்யும் முறை மற்றும் அதன் பயன்கள்
இந்தப் பயிற்சி முழுக்க முழுக்க மூச்சை வெளியேற்றுவதே. நமது மூக்கின் நுனியில் காற்றை வெளியேற்ற வேண்டும் அதாவது இந்த பயிற்சி செய்யும்பொழுது வயிற்றுப் பகுதியை அழுத்திச் சேர்த்து மூச்சை வெளியேற்ற வேண்டும். இதன் மூலம் நுரையீரலின் செயலாற்றல் திறன் அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப் பகுதியை அழுத்தி கீழே இறக்குவதன் மூலம் கல்லீரல் மற்றும் கணையம் நன்றாக இயங்கும். ஆன்மீக ரீதியாக பார்த்தால் குண்டலினி சக்தி அதிகமாகி, தலைப்பகுதியில் நம்மால் காண முடியாத ஒரு ஒளிவட்டம் உருவாகும். இப்படி சிறப்பான பலன்கள் எல்லாம் இந்த கபாலபாதி பயிற்சியால் கிடைக்கப்பெறும்.
பஸ்திரிகா
பஸ்திரிகாவில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. இவையனைத்தும் மூச்சுக்காற்றை வெளியேற்றுவது மற்றும் உள்ளிழுப்பது குறித்த பயிற்சிகளாக இருக்கும். முதலில் மெதுவாக செய்யத் தொடங்கி பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நன்கு பழகிய பிறகு பயிற்சியை வேகமாக செய்வது நன்மையளிக்கும்.
பஸ்திரிகா செய்யும் முறை மற்றும் பலன்கள்
முதலில் கைகளை மார்புக்கு முன்னால் சேர்த்து நீட்டி வைத்துக் கொண்டு மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு கைகளை நன்கு விரித்து மூச்சுக் காற்றை வெளியேற்ற வேண்டும். இந்தப் பயிற்சியை இருபது முதல் முப்பது எண்ணிக்கை வரை செய்ய வேண்டும். இரண்டாவதாக கைகளை இறுக்கமாக மூடிக்கொண்டு முகத்துக்கு நேராக தூக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளையும் விரிக்கும்போது மூச்சை உள்ளிழுத்து திரும்பி சேர்க்கும்போது மூச்சை வெளியேற்ற வேண்டும். மூன்றாவதாக இரு கைகளையும் மார்பை ஒட்டி மடக்கி வைத்துக் கொண்டு மூச்சை உள்ளிழுக்கும்போது கைகளை விரித்து வெளியேற்றும் போது கைகளை மடக்க வேண்டும். நான்காவதாக மூச்சை உள்ளிழுக்கும்போது கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தியும் மூச்சை வெளியேற்றும்போது கைகளைக் கீழே இறக்க வேண்டும். இந்தப் பயிற்சியை வேக வேகமாக செய்ய வேண்டும்.
வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும் பஸ்திரிகா
பஸ்திரிகா பயிற்சி செய்வதன் மூலம் சைனஸ் முதலிய பிரச்சினைகள் தீரும். குடல்கள் வலுப்பெறும். கல்லீரல், கணையம் நன்கு செயல்படும். நியூரான்கள் சுறுசுறுப்பாக இயங்கும். மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் நீங்கும்.