இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எந்த பெண்ணுக்கும் தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கும். ஆனால் இன்றைய அழுத்தம் மற்றும் மாசு நிறைந்த சுற்றுப்புறத்தால் நிறையப் பெண்களுக்கு அது சாத்தியமாவதில்லை. பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் என்பது இப்போது அதிகரித்துவிட்டது. அதிகளவில் ஏற்படக்கூடிய கர்ப்பப்பை பிரச்சினைகள், குழந்தைப்பேறில் உள்ள சிக்கல்கள் போன்றவை குறித்து விரிவாக உரையாடுகிறார் மகப்பேறு மருத்துவர் வரலட்சுமி.

பாக்டீரியல் வஜைனோசிஸ் என்றால் என்ன? இது எதனால் ஏற்படுகிறது?

பிறப்புறுப்பில் பாக்டீரியாக்கள் தங்கி தொற்றுக்களை ஏற்படுத்துவதைத்தான் பாக்டீரியல் வஜைனோசிஸ் என்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி, துர்நாற்றம் வருதல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த தொற்று ஏற்படாமல் இருக்க தனிப்பட்ட சுகாதாரம் அவசியம். அதேசமயம் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கவேண்டும்.


பாக்டீரியல் வஜைனோசிஸ்

வெள்ளைப்படுதல் என்றால் என்ன? இதனை குணப்படுத்துவது எப்படி?

வெள்ளைப்படுதலுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. தொற்று அல்லது கர்ப்பப்பை வாயில் புண் (cervical erosion) ஏற்படுதல் போன்றவை முக்கியமானவை. வெள்ளைப்படுதலுக்கான காரணம் என்ன என்பதை மருத்துவரிடம் பரிசோதித்து கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்?

பொதுவாக அரிசி கலந்த உணவுகளை தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், ட்ரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவர். மேலும் மூன்று வேளையும் திட உணவுகளையே சாப்பிடாமல் ஏதேனும் ஒருவேளை சூப் அல்லது சாலட் சாப்பிடலாம். இதுதவிர, வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் 45 நிமிட உடற்பயிற்சி செய்யவேண்டும். காபி, டீ போன்றவற்றை தவிர்த்துவிட்டு க்ரீன் டீ மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.


பெண்கள் அதிகம் சாப்பிடவேண்டிய உணவுப்பொருட்கள்

பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை உட்கொள்வது எந்த வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்?

தவிர்க்கமுடியாத காரணங்களால் என்றாவது ஒருநாள் இந்த மாத்திரையை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. இப்படி தள்ளிப்போடும் சமயத்தில் சிலர் கர்ப்பந்தரிக்கிறார்கள். சிலருக்கு மாதவிலக்கு ஏற்படாமலேயே நின்றுவிடும். தள்ளிப்போடுவதால் சிலருக்கு அதீத ரத்தப்போக்கும் ஏற்படும். மாதமாதம் மாதவிடாய் வந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சுக பிரசவத்திற்கு பெண்கள் என்னென்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்?

ஸ்குவாட்ஸ், பட்டர்ஃப்ளை உடற்பயிற்சி போன்ற Prenatal exercise என்று சொல்லக்கூடிய கர்ப்பகால உடற்பயிற்சிகளை கர்ப்பந்தரித்த 5வது மாதத்திலிருந்து செய்யலாம். பொதுவாக வீட்டு வேலைகளை குனிந்து நிமிர்ந்து செய்தாலே போதுமானது. ஆனால் உடற்பயிற்சிகளை செய்ய விரும்புகிறவர்கள் அதற்கென இருக்கும் பிரத்யேக ட்ரெய்னர்களிடம் முறையாக பயிற்சி பெற்று செய்யவேண்டும். சில பெண்களுக்கு ரத்தக்கசிவு அல்லது ப்ளசண்டா கீழ் இருத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கும். அவர்கள் ஓய்வில் இருப்பது அவசியம்.


கர்ப்பிணிகள் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள்

பெண்கள் எந்த மாதிரியான நாப்கின்களை பயன்படுத்துவது நல்லது?

காட்டன் நாப்கின்களை உபயோகிப்பது நல்லது. 6 -8 மணிநேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஈரத்தன்மையால் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். இதுதவிர டாம்போன்ஸ் பயன்படுத்தும் பெண்களில் பலருக்கு பாக்டீரியல் வஜைனோசிஸ் பிரச்சினை அதிகம் வருகிறது. இதனால் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் போன்ற நிறைய பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. இதுதவிர சிந்தட்டிக் பேஸ்டு நாப்கின்களாலும் நிறைய பெண்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. எனவே சௌகர்யமான காட்டன் நாப்கின்களை பயன்படுத்தலாம்.

கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்களை பெண்கள் பயன்படுத்துவது சிறந்ததா?

கருத்தடை சாதனங்கள் தற்காலிகமானதுதான். இதனை பயன்படுத்துவது 100% பாதுகாப்பானது என்று சொல்லமுடியாது. கருத்தடை மாத்திரைகள் என்பது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்களை கட்டுப்படுத்தும். இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். மாதவிலக்கு ஏற்பட்ட முதல் அல்லது இரண்டாவது நாளில் மாத்திரை எடுக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 21 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.


மருத்துவர் அறிவுரையுடன் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளுதல்

அப்போதுதான் மாதவிடாய் சீராக இருக்கும். நிறையப் பெண்கள் மாத்திரை எடுக்க தொடங்கியபின் இடையிடையே விட்டுவிடுவார்கள். இதனால் breakthrough bleeding என்று சொல்லக்கூடிய நடுநடுவே ரத்தப்போக்கு இருக்கும். சில பெண்கள் 5 நாட்கள் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். இந்த இடைவெளியில் கருத்தரித்துவிடுவார்கள்.

அதேபோல் நிறைய நாட்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. இதனால் வாந்தி, குமட்டல், தலைவலி, மார்பு வீக்கம், வயிறு வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். இதுதவிர Deep vein thrombosis என்று சொல்லக்கூடிய கால்களில் ரத்தக்குழாய் அடைப்பு பிரச்சினைகளும் ஏற்படும். இதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்கவேண்டிய சூழல் ஏற்படும். எனவே கருத்தடை மாத்திரைகளை குறுகிய காலத்திற்கு முறையாக பயன்படுத்துவது நல்லது.


குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுதல்

புதிய தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்கிறார்கள். இது எதனால்?

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கத்தான் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குழந்தை பிறந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சீம்பால்தான் சுரக்கும். அதில்தான் நிறைய ஆன்டிபாடிகள் மற்றும் சத்துக்கள் இருக்கின்றன. எனவே ஆரம்பத்திலிருந்தே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். நிறைய பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் இருக்கும். எனவே மருத்துவர்களின் அறிவுரை கேட்டு அதற்கான தீர்வை பெறவேண்டும்.

பிறந்த குழந்தையை இன்குபேட்டரில் வைப்பது ஏன்?

குறை மாதத்திலோ அல்லது குறைந்த எடையிலோ குழந்தை பிறந்தால் அதற்கு மூச்சுவிடுவதிலும், தாய்ப்பால் குடிப்பதிலும் சிரமம் இருக்கும். சில குழந்தைகளுக்கு சர்க்கரை, கால்சியம் அளவு குறைந்துவிடும். சில குழந்தைகள் வெளிப்புற வெப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஹைப்போதெர்மியா நிலைக்கு சென்றுவிடும். எனவே எந்த காரணத்திற்காக குழந்தையை இன்குபேட்டரில் வைக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

Updated On 4 March 2024 11:52 PM IST
ராணி

ராணி

Next Story