இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம், தண்ணீர் தேங்குதல், பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியால் பல்வேறு உடல்நல பிரச்னைகளும் சேர்ந்தே வந்துவிடும். எனவே மழைக்காலங்களில் பிற நாட்களைவிட உடல்நலத்தில் சற்று அதிக கவனம் செலுத்தவேண்டி இருக்கும். குறிப்பாக சில மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற வைரல் தொற்றுக்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். அதேபோல் மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய மற்றொரு பிரச்னை செரிமானக்கோளாறு. ஈரப்பதம் அதிகமான காலநிலை நிலவுவதால், பாக்டீரியாக்களின் வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும். இது வயிற்றுப்போக்கு, அஜீரணம் மற்றும் பிற வயிறு சம்பந்தமான தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பிரச்னைகளுக்கும் சில ஆயுர்வேத மூலிகைகள் தீர்வுகொடுக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா.

துளசி

ஆயுர்வேதத்தில் முக்கியமான ஒரு மூலிகையாகப் பார்க்கப்படுகிறது துளசி. இது மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்புப்பொருட்கள் நிறைந்திருக்கிறது. மழைக்காலங்களில் பரவலாக ஏற்படும் தொற்றுக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. துளசி இலைகளை அப்படியே சாப்பிடுவது அல்லது துளசி டீயை குடிப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக்குழாய் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். மேலும் மன அழுத்தத்தை குறைக்கும்.

இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப்பொருள்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்திருக்கிறது. மழைக்காலத்தில் வரும் பொதுவான பிரச்சினைகளான சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்றவற்றிற்கு தீர்வுகொடுக்கும். இஞ்சி டீ அருந்துவது அல்லது உணவில் இஞ்சி சேர்ப்பது செரிமானத்தை தூண்டுவதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். குளிர்நேரங்களில் உடலை இதமாக வைத்திருக்கவும் உதவுகிறது.


பூண்டு

பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் இது ஆண்டாண்டு காலமாக மருந்து தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லிசின் என்ற மூலப்பொருளானது பூண்டில் நிறைந்திருக்கிறது. பூண்டை பச்சையாக உண்ணுதல் அல்லது உணவுகளில் சேர்த்துக்கொள்வதால் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதுடன், உடலில் கொழுப்பு சேர்வதை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அஸ்வகந்தா

ஆயுர்வேதத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்று அஸ்வகந்தா. மன அழுத்தத்தை குறைத்தல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்தை மேம்படுத்துவதில் அஸ்வகந்தா முக்கிய பங்காற்றுகிறது. அஸ்வகந்தா பொடி அல்லது மாத்திரைகளை உட்கொள்வது, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடல் தன்னுடைய வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ளவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.


வேம்பு

கசப்பான மூலிகைகளில் ஒன்றான வேம்பு, அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புத்தன்மையால் பரவலாக மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலைகளை உட்கொள்ளுதல் அல்லது வேம்பினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உட்கொள்ளுதல் ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்குகிறது. இதுதவிர மழைக்காலத்தில் பரவலாக வரக்கூடிய தொற்றுகளான மலேரியா, டெங்கு மற்றும் காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

திரிபலா

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவைதான் திரிபலா. இது பழமைவாய்ந்த மூலிகைகளில் ஒன்று. இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடண்ட் மற்றும் நச்சு நீக்கி. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதற்கு உதவுவதுடன், செரிமானத்தையும் தூண்டுகிறது. மழைக்காலத்தில் திரிபாலா பொடியை வெந்நீரில் கலந்து உட்கொள்வது, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையுமே மேம்படுத்தும்.


இந்த மூலிகைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், இவற்றை உட்கொள்வதற்கு முன்பு, நிபுணர் அல்லது ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் டயட்டுடன் இந்த மூலிகைகளை எப்படி சேர்த்து உண்பது என்பது குறித்த ஆலோசனையை வழங்குவர். மேலும் இந்த மூலிகைப் பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட அல்லது அதற்கென பிரத்யேகமாக உள்ள கடைகளில் வாங்குவது நல்லது.

Updated On 1 Aug 2023 11:38 AM GMT
ராணி

ராணி

Next Story