இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சுயதொழில் செய்ய வேண்டும் என நம்மில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் எப்படி தொடங்குவது? என்ன மாதிரியான தொழில் செய்வது? என குழப்பம், தயக்கம் இருக்கும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் வீட்டிலிருந்தபடியே கேக் மேக் செய்து நிறைய லாபம் ஈட்டலாம். பிறந்தநாள், நிச்சயதார்த்தம், திருமணம் என எந்த விதமான கொண்டாட்டமாக இருந்தாலும் கேக் கட்டிங் என்பது முக்கியமானதாக மாறி விட்டது. சமையலே தெரியாதவர்கள் கூட எளிதில் கேக் எப்படி செய்வது என கற்றுக்கொள்ள முடியும். அதுவும் ஆரோக்கியமாக வீட்டிலேயே கேக் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் சாக்லேட் பட்டர் கேக் எப்படி செய்வது என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் தாமரை செல்வி.


செய்முறை :

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் 135 கிராம், உப்பு சேர்க்காத பட்டர் எடுத்து நல்ல கிரீம் பதத்திற்கு பீட் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 210 கிராம் பொடித்த வெள்ளை சர்க்கரையை எடுத்து ஒன்றுசேர கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக எடுத்து வைத்துள்ள 175 கிராம் மைதாவை சேர்த்துக்கொள்ள வேண்டும். பேக்கிங் பவுடர் சேர்த்து பீட் செய்துக்கொள்ள வேண்டும்.


உப்பு சேர்க்காத பட்டரை பீட் செய்யும் காட்சி

அதனுடன் 2 பின்ச் உப்பு, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து முதலில் கரண்டி வைத்து கிளறி விட வேண்டும். எடுத்து வைத்துள்ள 25 கிராம் கோகோ பவுடர் சேர்த்து கலந்து விட வேண்டும். அடுத்ததாக நல்ல கிரீம் போல பீட் செய்து கொள்ளலாம்.

பின்னர் 3 முட்டையை உடைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு பீட் செய்து, ஏற்கனவே கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து மீண்டும் பீட் செய்து கொண்டு 100 மி.லி பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பீட் செய்ய வேண்டும். தேவைக்கேற்ப 100 முதல் 150 மி.லி வரை பாலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பால் சேர்த்து பீட் செய்யும்போது மாவு, திரி திரியாக பிரியும். எனவே கலவை கிரீம் போல மிருதுவாக வர நன்கு பீட் செய்ய வேண்டும். பீட் செய்வதுதான் முக்கியமான விஷயம்.


ஹார்ட் ஷேப் பேக்கிங் ட்ரேயில் நிரப்பப்பட்டுள்ள சாக்லேட் பட்டர் கேக் மாவு கலவை

இறுதியாக ஹார்ட் ஷேப் ட்ரேயில் பட்டர் தடவி கேக் மாவு கலவையை நிரப்பி, அதன் மேலே தேவைக்கேற்ப சாக்கோ சிப்ஸ் போட்டுக் கொள்ளலாம். 180 டிகிரி ப்ரீ-ஹீட் செய்த மைக்ரோவேவ் ஓவனில் 20 நிமிடங்களுக்கு பேக் செய்தால் சுவையான கேக் ரெடி!

ஐசிங் செய்வதற்கு அறை வெப்பநிலையில் இருக்கும் விப்பிங் கிரீம் 150 கிராமை ஒரு பாத்திரத்தில் எடுத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு பீட் செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அதனுடன் 1 1/2 தேக்கரண்டி பொடித்த வெள்ளை சர்க்கரை சேர்த்து மீண்டும் 5 முதல் 8 நிமிடங்களுக்கு பீட் செய்து கொள்ளலாம்.


ஐசிங் செய்யப்பட்டுள்ள fresh சாக்லேட் பட்டர் கேக்

ரெடியான ஐசிங் கிரீமை கோன் கவரில் போட்டு, நமக்கு விருப்பமான டிசைனில் ஐசிங் செய்து எடுத்தால் இனிமையான நிகழ்வை கொண்டாட சூப்பரான சாக்லேட் பட்டர் கேக் ரெடி!

Updated On 13 Aug 2024 12:03 AM IST
ராணி

ராணி

Next Story