இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நமது தாத்தா, பாட்டிகளிடம் கேட்டால், “அந்த காலத்தில் எங்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இருக்காது, அப்போதெல்லாம் வயலில் கிடைக்கும் கம்பு, ராகியைத்தான் சேகரித்து வந்து சமைத்து சாப்பிடுவோம்” என்று கூறுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட்டதால்தான் அவர்கள் 70 வயதுக்கு மேல் ஆகியும் ஆரோக்கியமாகவும், நோய் நொடிகளின்றியும் வாழ்ந்தனர் என்பதே அவர்களில் பலருக்கு தெரியாது. அப்படி முன்னோர் ரசித்து, ருசித்து சாப்பிட்ட உணவுகள்தான் இன்றைய ஜங்க் உலகில் மீண்டும் பிரபலமாகிவருகின்றன. அந்த வரிசையில் பாரம்பரிய அரிசிகளில் ஒன்றுதான் காட்டுயானம். இந்த அரிசிக்கு இந்த பெயர் வந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும்? காட்டுயானம் வயலில் வளர்ந்திருந்தால் அதற்குள் யானையே மறைந்துவிடுமாம். அப்படிப்பட்ட அரிசியில் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


செய்முறை:

காட்டுயானம், கருங்குறுவை போன்ற பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்துவதற்கு முன்பு கிட்டத்தட்ட 8 மணிநேரமாவது ஊறவைக்க வேண்டும். இப்படி ஊறவைப்பதால் சாப்பிடும்போது கடினமாக இருக்காது.

காட்டுயானம், பச்சரிசி இரண்டையும் சம அளவில் எடுத்து 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை உலர்த்தி மாவாக பொடித்துக்கொள்ள வேண்டும். பொடித்த மாவை 15 நிமிடம் வேகவைத்து உதிர்க்க வேண்டும்.

உதிர்த்த மாவுடன் துருவிய தேங்காயை சேர்க்கவேண்டும். அதில் எவ்வளவு இனிப்பு தேவையோ அவ்வளவு வெல்லப்பாகை வடித்து சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

மாவு நன்றாக திரண்டு வந்தவுடன். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொழுக்கட்டைகளாக பிடிக்கவும். இதை 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான, சத்துமிக்க காட்டுயானம் பிடி கொழுக்கொட்டை ரெடி!

காட்டுயானம் அரிசியின் நன்மைகள்:

  • காட்டுயானம் அரிசியில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்பு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. குறிப்பாக, ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு தேய்மான பிரச்சினை இருப்பவர்கள் இந்த அரிசியை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • நரம்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. குறிப்பாக மரபணுக்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
  • இதில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 அதிகம் இருக்கிறது.
  • மாங்கனீஸ், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தசோகையை தடுக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற அரிசி இது.
Updated On 19 Feb 2024 6:20 PM GMT
ராணி

ராணி

Next Story