இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காண்டினென்டல் எனப்படும் பல்வேறு நாடுகளின் உணவுகளை ருசி பார்க்க இன்றைய தலைமுறையினர் ஆசையாக இருப்பதால், அதுபோன்ற உணவுகளை சமைக்க கற்றுக்கொள்வதில் இன்றைய கால இளைஞிகளும், அம்மாக்களும் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் இந்த வார சமையலில் நாம் பார்க்கப்போவது இத்தாலியன், மெக்சிகன் வகை உணவுகளுக்கு அடிப்படையாக உள்ள ஒரு பேஸ் பொருள்தான். அதுதான் ஒயிட் சாஸ். இது மிகவும் எளிதான ரெசிபியாக இருந்தாலும், சரியான பதத்தில் இதனை செய்வதில்தான், பல முக்கிய உணவுகளின் சுவையே அடங்கியுள்ளது. எனவேதான் ஒயிட் சாஸை "மதர் சாஸ்" என்று கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒயிட் சாஸை, வீட்டிலேயே எப்படி எளிதாக செய்யலாம் என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் பியூஷ் ஆர்யா.


செய்முறை

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அது சூடானதும் பட்டரை போட்டு உருக்க வேண்டும். அதனுடன் ரோஸ் மேரி இலை தண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை கார்லிக் (பூண்டு) ஒயிட் சாஸ் தேவை என்பவர்கள், இந்த நிலையிலேயே 5 பூண்டுகளை சிறியதாக நறுக்கி போட்டுக்கொள்ளலாம். பட்டர் நன்கு உருகி, அதில் ரோஸ் மேரி இலை தண்டின் அரோமா நன்கு இறங்கியவுடன், மைதாவை சேர்த்து கிளற வேண்டும். பட்டரும், மைதாவும் சேர்த்து சமைக்கப்படுவது ரூ(roux) என்று சொல்லப்படுகிறது. மைதாவின் பச்சை வாசனை போகும்வரை அதனை சமைக்க வேண்டும். அதன் நிறம் பொன்னிறம்போல் மாறும்போது பாலை சேர்க்க வேண்டும். பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டே நன்கு கலக்க வேண்டும். மைதா கட்டியாகாமல் இருக்கும் வகையில் நன்கு கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். பால் சேர்த்த கலவை பொங்கிவரும்வரை காத்திருந்து, அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் சீஸை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பால் சூடாக இருப்பதால், சீஸ் நன்றாக உருகி அதனுடன் கலந்துவிடும். இறுதியில் மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துவிட்டால், யம்மியான ஒயிட் சாஸ் ரெடி. சாஸ் தயாரானவுடன் அதன் உள்ளிருக்கும் ரோஸ் மேரி இலை தண்டை வெளியே எடுத்து போட்டுவிடலாம். இந்த ஒயிட் சாஸை, சூடு ஆறியவுடன் ஃபிரிட்ஜில் நன்கு மூடிவைத்து 3 நாட்கள்வரை பயன்படுத்தலாம்.

குறைந்தபட்ச பொருட்களுடன் இந்த செய்முறையை பின்பற்றினால், வீட்டிலேயே ஒயிட் சாஸை எளிதாக தயாரித்துவிடலாம். அப்படி தயாரித்துவிட்டோம் என்றால், ஒயிட் சாஸ் பாஸ்தா, ஒயிட் சாஸ் வெஜ்ஜிஸ் என பலவகை டிஷ்களை செய்து அசத்தலாம். காய்கறிகள், வேகவைத்த உணவுகள் என அனைத்துடனும் இந்த சாஸை சேர்த்து, ருசியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

Updated On 8 April 2024 11:47 PM IST
ராணி

ராணி

Next Story