இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இயேசுநாதர் பிறந்த நன்னாளை முன்னிட்டு பல இடங்களில் கிறிஸ்மா கிறிஸ் விளையாடி ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மகிழ்வர். ஆனால், இவ்விளையாட்டை விளையாடாதவர்களும் கிறிஸ்துமஸ் திருநாளில் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதோடு அக்கம் பக்கத்திலிருக்கும் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு அன்பை பகிரும் விதமாக பிரியாணி, கேக் போன்றவற்றை கொடுத்து மகிழ்வதுண்டு. இவற்றில் குறிப்பாக கேக் வழங்கும்போது கிரீம் கேக்கைக் காட்டிலும் பிளம் கேக் கொடுப்பதுதான் அதிகம். அப்படி பலருக்கும் அன்புடன் வழங்கும் இந்த பிளம் கேக்கை கடைகளில் வாங்காமல் நிறைய அன்பை சேர்த்து வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை விளக்குகிறார் சமையல் கலை நிபுணர் சந்தியா.


செய்முறை:

முதற்கட்டமாக அடுப்பில் பேனை வைத்து அதில் 100 கிராம் சர்க்கரை சேர்த்து இடைவிடாமல் கலக்கி கேரமலைஸ் செய்யவேண்டும். அதாவது அடர் சர்க்கரை பாகு பதத்திற்கு வரும்வரை பொறுமையாக கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரையானது தீய்ந்து விடும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து டார்க் பிரவுன் ஆனவுடன் அவற்றுடன் 50 மி.லி தண்ணீரை ஊற்றி கலக்க வேண்டும்.

அடுத்ததாக ரம் அல்லது ஆரஞ்சு ஜூஸில் ஊறவைத்த நட்ஸை சேர்த்து 1 நிமிடத்திற்கு அடிபிடிக்காமல் கலக்கி அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை ஆறவிட வேண்டும். இது ஆறும் சமயத்தில் ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்றி அவற்றுடன் எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ், 200 கிராம் சர்க்கரை சேர்த்து கரையும் வரை 2 நிமிடத்திற்கு நன்றாக பீட் செய்ய வேண்டும். இதை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு அதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, லவங்கப்பட்டை தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.

உருண்டை இல்லாமல் கலக்கி கொண்ட மாவில் ஆற வைத்திருக்கும் கேரமலைஸ் சர்க்கரை மற்றும் ரம் நட்ஸை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்க வேண்டும். குறிப்பாக இந்த கேரமலைஸ் நன்றாக ஆறிய பின்னரே சேர்க்க வேண்டும். நன்றாக கலக்கிய பின்னர் முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி அல்லது பிடித்த நட்ஸை இவற்றுடன் சேர்த்து கலக்கி கொள்ளலாம். கேக் செய்வதற்கான மாவு தயாராக இருக்கும் நிலையில் அதை ஒரு டின் அல்லது மோல்டில் நிரம்பி ஊற்றாமல் அரை அளவு மட்டுமே ஊற்ற வேண்டும்.

அப்போதுதான் கேக் வேகவும், உப்புசமாக வரவும் வசதியாக இருக்கும். கேக்கை வேகவைப்பதற்கு முன்னர் ஓவனை 180℃-யில் 10 நிமிடத்திற்கு ப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும். ஓவன் ப்ரீ ஹீட் ஆனவுடன் முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி அல்லது பிடித்த நட்ஸை டாப்பிங்சாக தூவி 25 நிமிடத்திற்கு ஓவனில் வேக வைத்தெடுத்து 10 நிமிடத்திற்கு ஆற வைத்தால் அற்புதமான சுவையில் ஃப்ளஃபியான பிளம் கேக் ரெடி!

Updated On 26 Dec 2023 12:54 AM IST
ராணி

ராணி

Next Story