இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உடலை வலிமையாக்க என்னதான் மாத்திரை மருந்துகளை சாப்பிட்டாலும் இயற்கை உணவுகளால் கிடைக்கும் சத்துக்கள் அவற்றில் கிடைப்பதில்லை. அப்படி காலங்காலமாக எலும்புகளை வலிமையாக்க எடுத்துக்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றுதான் கருப்பு உளுந்தங்களி. குறிப்பாக, பெண்கள் இந்த களியை கட்டாயம் சாப்பிடவேண்டும் என நமது முன்னோர்கள் வலியுறுத்துவர். இப்போது மருத்துவர்களும் பெண்களை இந்த களியை சாப்பிடச் சொல்கின்றனர். எலும்பு மற்றும் மூட்டுக்களை வலிமையாக்கும் கருப்பு உளுந்தங்களியை எப்படி செய்வது என விளக்குகிறார் சமையல் கலைஞர் சசி ரேகா.


செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கருப்பு உளுந்தை முதலில் சேர்த்து அடுப்பை மீடியமாக வைத்து, வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும்.

அடுத்து அதே கடாயில் பச்சரிசி மற்றும் பாதாம், முந்திரி, ஏலக்காய், வேர்க்கடலையை லேசாக சேர்த்து வறுக்கவும். எண்ணெய் அல்லது நெய் சேர்க்கக்கூடாது.

களி சாப்பிடும்போது கொஞ்சம் கிரிஸ்பியாக இருக்கத்தான் பச்சரிசி சேர்க்கிறோம்.

சூடு ஆறியபின் அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவை கடாயில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்தபின்பு அடுப்பை பற்றவைக்கவும்.

மாவை நன்றாக கரைத்ததும் அடுப்பை ஆன் செய்து நன்றாக கிளறவும். மாவு வெந்ததும் அதில் நாட்டுச் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

கிளறும்போது நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை சற்று கெட்டியாகி அடிபிடிக்கும்போது நெய் சேர்க்கவும். தேவைப்பட்டால் நெய்யுடன் சிறிது எண்ணெயும் சேர்க்கலாம்.

மாவு வேகும்வரை இறுக இறுக இடையிடையே எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக்கொண்டே கிளறவும்.

கலவை முழுவதும் வெந்து அல்வா பதம் வந்ததும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கவும். சுவையான கருப்பு உளுந்தங்களி தயார்!

பெண்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு வலி வருவதை இந்தக் களி சாப்பிடுவதன்மூலம் தடுக்கலாம்.

டீனேஜ் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கருப்பு உளுந்தங்களி சாப்பிட்டால் வலி வராது.

Updated On 18 March 2024 11:55 PM IST
ராணி

ராணி

Next Story