இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சத்தான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். மூன்று வேளையும் சத்தான உணவை எடுத்துக்கொண்டாலும் நிறையப்பேருக்கு ஸ்நாக்ஸ் என்றாலே எண்ணெயில் பொரித்தவை / வறுத்தவைதான் நினைவுக்கு வரும். ஆனால் அது உடலில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் சிந்திப்பதில்லை. இப்போது பல்வேறு புதுப்புது நோய்களின் பாதிப்பு மற்றும் தாக்கம் காரணமாக நிறைய பேர் ஃபாஸ்ட் புட் கலாசாரத்திலிருந்து சற்று ஒதுங்கி சத்தான உணவுகளின் பக்கம் திரும்பியிருக்கின்றனர். குறிப்பாக, சிறுதானியங்களின் பயன்பாடானது இப்போது அதிகரித்து வருகிறது. அப்படி சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகை பயன்படுத்தி ஆரோக்கியமான போளியை செய்துகாட்டுகிறார் சமையல் கலைஞர் சீதாராமன். சிறுதானிய போளியை பொருத்தவரை கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி செய்யலாம். இல்லாவிட்டால் சிவப்பரிசி, கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய அரிசிகளைக்கூட பயன்படுத்தலாம்.


செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாக சேர்த்து அதனுடன் சிறிது உப்பு மற்றும் நிறத்துக்காக ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்வரை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நன்கு பிசைந்து மாவை கொஞ்ச நேரம் மூடிவைத்தால் மாவு மிருதுவாகிவிடும்.


கேழ்வரகு மாவு மற்றும் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைதல்

மாவு மிருதுவாகும் நேரத்திற்குள் ஸ்டஃபிங்கை தயார் செய்யலாம். அதற்கு வறுத்த வேர்க்கடலையை முதலில் தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து எள்ளை தனியாக அரைத்து அதை வேர்க்கடலை மாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். வேர்க்கடலை மற்றும் எள் இரண்டிலுமே சூடு அதிகரித்து எண்ணெய் பிரியும் என்பதால் இவற்றை சேர்த்து அரைக்கக்கூடாது. அதேபோல் அரைக்கும்போதும் மிக்ஸியை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றவிட்டு அரைக்கவேண்டும்.


வறுத்து அரைக்க தயார் நிலையில் வேர்க்கடலை

அரைத்த மாவுடன் நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவேண்டும். இந்த ஸ்டஃபிங்கில் ஈரத்தன்மை இருக்காது என்பதால், அதனுடன் நாட்டுச் சர்க்கரை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து அரைத்த கலவையையும் சேர்த்து பிசைந்தால் போளிக்கு ஏற்ற பதத்தில் ஸ்டஃபிங் ரெடி!

பிசைந்த ஸ்டஃபிங்கை சிறுசிறு உருண்டைகளாக இறுக்கமில்லாமல் பிடிக்கவேண்டும். மேல் மாவிற்கு பிடிக்கும் உருண்டைகளைவிட இந்த ஸ்டஃபிங் உருண்டைகள் பெரிதாக இருக்கவேண்டும்.


போளிக்குத் தேவையான ஸ்டஃப்பிங்

இப்போது கையில் எண்ணெயைத் தொட்டு, பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மற்றும் கேழ்வரகு மாவை உருண்டைகளாக திரட்டி, அதற்கு நடுவில் ஸ்டஃபிங் உருண்டைகளை வைத்து பிடித்து போளிகளாக தேய்த்து சுட்டெடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான சிறுதானிய போளி ரெடி!

இந்த போளியில் பயன்படுத்தப்படும் வேர்க்கடலை ஸ்டஃபிங் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


கேழ்வரகு மாவில் ஸ்டஃபிங் வைத்து திரட்டி போளிகளாக சுட்டெடுத்தல்

கேழ்வரகு உட்பட எந்தவகை சிறுதானியமாக இருந்தாலும் 4 மணிநேரம் ஊறவைத்து அரைத்து மாவாக்கி பயன்படுத்தினால் உடல்சூடு ஏறாது. வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் வராது.

ஸ்டஃபிங்கை பொருத்தவரை மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாசிப்பயறு, நவதானியங்கள், முக்கனி, ட்ரை ஃப்ரூட்ஸ் என ஆரோக்கியமான எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Updated On 24 Jun 2024 6:03 PM GMT
ராணி

ராணி

Next Story