இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கூட்டாஞ்சோறு, ஊன்சோறு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மீன் சோறு பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும்? மீன் என்றாலே, ஃப்ரை அல்லது குழம்புதான் வீட்டில் பெரும்பாலும் செய்வார்கள். இப்போது கடைகளில் மீன் பிரியாணி கிடைக்கிறது. பிரியாணி சுவையுடன் ஆனால் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு ரெசிபிதான் மீன் சோறு. சிம்பிளாக அதேசமயம் சுவையான சீரக சம்பா மீன் சோறு எப்படி செய்வது என செய்துகாட்டுகிறார் சமையல் கலைஞர் சசிரேகா.


செய்முறை

குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். அதில் பட்டை ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அதில் வெட்டி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, அதனுடன் கழுவி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சூடு ஆறவிட்டு அரைத்து எடுக்கவும்.

அடுத்து அதே குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, அதனுடன் தேவையான எண்ணெய் சேர்க்கவும், சூடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்தால் சீக்கிரத்தில் வதங்கிவிடும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

மசாலா நன்கு வதங்கியதும், அதில் கழுவி வைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அதனுடனேயே கழுவி வைத்திருக்கும் மீனையும் சேர்த்து உடையாதவாறு பதமாக கிளறவும். 1 கப் அரிசி எடுத்தால் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். இதனை மெதுவாக கிளறிவிட்டு கொதிவந்ததும், குக்கரை மூடிபோட்டு வேகவிடவும். வேண்டுமானால் ஒரு விசில் விடலாம்.

அதன்பிறகு தம் போட்டு அடுப்பை மிகவும் குறைவாக வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவேண்டும். சுவையான சீரக சம்பா மீன் சோறு தயார்.

Updated On 25 March 2024 11:52 PM IST
ராணி

ராணி

Next Story