புரோட்டின் ரிச் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். சைவ உணவில் பனீர் அதிக புரோட்டின் நிறைந்த உணவு. பனீரில் புரோட்டின் மட்டுமின்றி கால்சியம், பி 12, இரும்புச் சத்து உள்ளிட்டவை அடங்கியுள்ளன. பனீரை பயன்படுத்தி நிறைய உணவுகளை தயாரிக்கலாம். உதாரணத்திற்கு பனீர் புர்ஜி, பனீர் டிக்கா, பனீர் சாண்ட்விச், பனீர் பான்கேக் என ஏராளமான அயிட்டங்களை செய்து சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் குறைவு மற்றும் புரதம் நிறைந்த உணவு என்பதால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் சைவ பிரியர்கள் பனீரை எடுத்துக் கொள்ளலாம். அந்தவகையில் இட்லி, தோசை, சோறு என அனைத்துக்கும் ஏற்ற பனீர் வெள்ளை கிரேவி எப்படி செய்வது என சொல்லிக் கொடுத்து விளக்கமளிக்கிறார் சமையல் கலைஞர் சுந்தரி ராகவேந்திரன்.
செய்முறை :
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். பிறகு வெட்டி வைத்துள்ள பனீரை நெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
முக்கோண வடிவில் பனீரை கட் செய்து நெய்யில் பொரித்து எடுக்கும் காட்சி
அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில்போட்டு வதக்க வேண்டும். அதனுடன் மிளகு சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, 50 கிராம் முந்திரி ஆகியவற்றை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் சூடு ஆறியதும் மிக்ஸியில் அந்த கலவையை மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம் முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான மசாலா பொருட்களை சேர்க்கும் முறை
இந்த நிலையில் தேவையான மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். கரம் மசாலா 1 தேக்கரண்டி, சீரகப் பொடி 1 தேக்கரண்டி, மல்லி தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு மற்றும் கஸ்தூரி மேத்தியை சிறிதளவு நுணுக்கி சேர்த்து ஒரு கொதி வரும்வரை விட வேண்டும்.
புரோட்டின் ரிச் பனீர் வெள்ளை கிரேவி
இந்தநிலையில், பொரித்து வைத்துள்ள பனீரை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேக வைத்து, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் பனீர் வெள்ளை கிரேவி ரெடி!