இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெரும்பாலும் ஜவ்வரிசி வைத்து பாயாசம் மட்டும்தான் நமது வீடுகளில் செய்வதுண்டு. ஆனால் ஜவ்வரிசியை வைத்து வடை, கிச்சடி, தோசை, அல்வா என பல வகையில் செய்து சாப்பிடலாம். கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த ஜவ்வரிசியை அன்றாடம் உட்கொண்டால் உடல் எடை கூடும், எலும்பு உறுதியாகும், மேலும் இரத்த அழுத்தம் சீராகும். அந்த வகையில் பல்வேறு நன்மைகள் நிறைந்த ஜவ்வரிசி தேங்காய் பால் உருண்டை எப்படி செய்வது என சொல்லிக் கொடுத்து விளக்கமளிக்கிறார் சமையல் கலைஞர் கவிதா.


செய்முறை :

முதலில் 200 கிராம் ஜவ்வரிசியை 2 மணி நேரத்திற்கு சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு ஊறிய ஜவ்வரிசியில் சிறிதளவு உப்பு, ஏலக்காய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.


உருட்டி எடுத்த ஜவ்வரிசி உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்தல்

அதன் பிறகு ஜவ்வரிசியை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொழுக்கட்டையில் பூரணம் வைப்பது போல் தேங்காய் துருவலை உள்ளே வைத்து உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் தேங்காய் பால் எடுத்து, வெள்ளை சர்க்கரையை அதில் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வேகவைத்து எடுத்த எல்லா உருண்டைகளையும் தேங்காய் பாலில் போட்டு, தேவைப்பட்டால் கூடுதலாக சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.


சுவையான ஜவ்வரிசி தேங்காய் பால் உருண்டைகள்

மேலே பாதாம்களை பொடியாக நறுக்கி தூவினால் ஜவ்வரிசி தேங்காய் பால் உருண்டை ரெடி!

Updated On 1 Oct 2024 12:23 AM IST
ராணி

ராணி

Next Story