இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) வைத்து பிரியாணி, கிரேவி, மிளகு வறுவல் என நிறைய ஐயிட்டங்கள் செய்து சாப்பிடலாம். சோயாவில் அதிக அளவு புரதம் உள்ளது. அதேநேரம் மீல் மேக்கரை ஒரு நாளைக்கு 20 முதல் 30 கிராம் வரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் எடுத்துக்கொண்டால், ஹார்மோன் பிரச்சினைகள், செரிமான பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்படும். எனவே மீல் மேக்கரை அளவாக எடுத்துக்கொள்வதே நல்லது. அந்த வகையில், மீல் மேக்கரை அளவாக எடுத்து ஆரோக்கியத்தை பெறவும், புரட்டாசிக்கு ஏற்றாற்போல் அதனை பயன்படுத்தி சைவ கோலா உருண்டை செய்யவும் சொல்லிக் கொடுத்து விளக்கமளிக்கிறார் சமையல் கலைஞர் கவிதா.


செய்முறை :

முதலில் 200 கிராம் சோயா சங்க்ஸை எடுத்து சுடு தண்ணீரில் போட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து நீரை நன்கு பிழிந்து எடுத்து சோயா சங்க்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த சோயா சங்க்ஸில் சின்ன வெங்காயம் மற்றும் 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இந்த ரெசிபிக்கு தேவையான உப்பையும் சேர்த்து பிசைய வேண்டும்.


கொரகொரப்பாக அரைத்து எடுத்த சோயா சங்க்ஸ், தேவையான அளவு வெங்காயம், பச்சை மிளகாய்

அதனுடன் கரம் மசாலா 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கடலை மாவு 1 தேக்கரண்டி, சோம்பு சிறிதளவு எடுத்து நுணுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒன்று சேர பிசைந்து எடுத்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் உருட்டி வைத்துள்ள சோயா உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சோயா சங்க்ஸ் கோலா உருண்டை ரெடி!


சோயா சங்க்ஸ் கோலா உருண்டை

சுவையான சோயா சங்க்ஸ் கோலா உருண்டைகளை கெட்ச்சப்புடன் மாலை நேரத்து ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.

Updated On 8 Oct 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story