இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் அன்றாட வாழ்க்கையில், உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் தினமும் உடற்பயிற்சி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். இதில் ஆண், பெண் என எந்த பாகுபாடும் இன்றி, இன்று அனைவரும் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சரியான வழிகாட்டுதல்களுடன்தான் ஒவ்வொருவரும் தங்களது உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்களா? என்றால் சந்தேகம்தான். அந்த வகையில் உடற்பயிற்சி குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு நமக்கு பதில் அளித்து பேசியிருக்கிறார் ஆணழகன் போட்டிகளில் மூன்று முறை உலக சாம்பியன், மூன்று முறை ஆசிய சாம்பியன், 9 முறை மிஸ்டர் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றவரும், தற்போது ஃபிட்னஸ் பயிற்சியாளராக வலம்வருபவருமான ஜெயபிரகாஷ். ராணி நேயர்களுக்காக அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

பாடி பில்டிங் பிரிவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறீர்கள்? இதற்கான முதல் முயற்சி எங்கிருந்து எப்படி ஆரம்பித்தது?

என்னுடைய 19-வது வயதில் சென்னை ஆலந்தூரில் செயல்பட்டு வந்த ஒரு சிறிய உடற்பயிற்சி கூடத்தில்தான் என்னுடைய உடற்பயிற்சிக்கான முதல் படியை தொடங்கினேன். அங்குதான் என்னுடைய அண்ணன் அதவாது பெரியம்மா பையன் வாசுதேவனும் பயிற்சி பெற்று வந்தார். அவரை பார்த்துதான் நானும் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தேன். இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர்தான் என்னுடைய ரோல் மாடல், குருநாதர் எல்லாமே. ஐ.சி.எஃப்பில் பணியாற்றிவரும் அரசு மௌன குரு என்பவரும் என்னுடைய இன்னொரு குருநாதர் ஆவார். இவர்கள் இருவரும் இல்லையென்றால் இந்த துறையில் நான் இல்லை. அவர்களின் வழிகாட்டுதல்களால்தான் இவ்வளவு உயரங்களை அடைந்த நான் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக இதே துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.


ஆணழகன் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஜெயபிரகாஷ்

பெரும்பாலானவர்களுக்கு பாடி பில்டிங் துறையில் உங்களை போன்றே பெரிய ஆளாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மோட்டிவேஷனாக நீங்கள் சொல்ல நினைப்பது என்னவாக இருக்கும்?

முதலில் ஒவ்வொருவருக்கும் செல்ஃப் மோட்டிவேஷன் என்பது மிகவும் முக்கியம். அதன் பிறகு சிறந்த கோச் அதாவது பயிற்சியாளர் அவசியம். இன்றைக்கும் நான் இவ்வளவு சாதனைகளை செய்திருந்தாலும், எனெக்கென்று பயிற்சியாளர் இருக்கிறார். அவர் காட்டும் வழியை, அவர் சொல்லும் அறிவுரைகளைத்தான் பின்பற்றி வருகிறேன். அதன்படிதான் என்னை நானே மோட்டிவேட் செய்துகொள்வேன்.

முதல் முதலாக நீங்கள் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று விருதை பெரும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

கடந்த 2017-ஆம் ஆண்டு கிழக்காசியாவில் உள்ள மங்கோலியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டிதான் நான் கலந்துகொண்ட முதல் போட்டி. அதில் வெற்றிபெற்று முதல் முறையாக இந்தியாவிற்காக பட்டத்தை வென்ற அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. மிகவும் சந்தோஷமான ஒரு தருணம் அது. அதுதான் நான் பெற்ற முதல் வெற்றி, முதல் விருது. அந்த வெற்றியை நான் மட்டுமல்லாமல் எனது குடும்பத்தினரும், பயிற்சியாளர்களும், நண்பர்களும், உறவினர்களும் மட்டுமின்றி தமிழ் நாட்டை சேர்ந்தவர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஏனென்றால் தமிழ்நாட்டில் அந்த பட்டத்தினை வென்ற இரண்டாவது தமிழன் நான்தான். அதற்கு முன்னதாக சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் மணி என்பவர் உலக சாம்பியன் பட்டத்தினை வென்று முதலிடத்தில் இருந்தார்.

இந்த துறையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

எல்லோரையும் போல் நாமும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதார்த்தமாகத்தான் இந்த துறைக்குள் நுழைந்தேன். பிறகு இதற்குள் இருக்கும் நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் தெளிவாக தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும் போதுதான் இதில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினால் மத்திய, மாநிலங்களில் உள்ள அரசு துறைகளில் கூட பணியில் அமர முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். பிறகுதான் இதில் முழு மூச்சாக இறங்கி பயணிக்க ஆரம்பித்து பல விருதுகளையும் குவித்துள்ளேன்.

இந்த துறையை தேர்ந்தெடுத்து வர நினைப்பவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

ரெகுலர் உடற்பயிற்சிகள் என்பது மிகவும் அவசியம். அத்லெட், நடைப்பயிற்சி தவிர ஜிம் ஆக்டிவிட்டீஸ் மிக முக்கியம். முந்தைய தலைமுறை பெற்றோர்களுக்கு ஜிம் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. ஃபிட்னஸ் தொடர்பான விழிப்புணர்வு எல்லோருக்குமே வந்துவிட்டது. அதிலும் இப்போதுள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி அவசியம் என்பதை உணர்ந்து அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்களை கலந்துகொள்ள வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய மகளே குத்துச்சண்டையில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு கோல்ட் மெடல் வின் பண்ணியிருக்காங்க. அப்படியிருக்கும் போது இதுகுறித்த விழிப்புணர்வு இன்று எல்லோரிடமும் இருக்கிறது.


ராணி ஆன்லைனுக்கு ஜெயபிரகாஷ் பேட்டி அளித்த தருணம்

ஒருவர் பார்க்க ஸ்லிம் அண்ட் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்?

தினசரி நடைப்பயிற்சி, பாடி வெயிட் தொடர்பான உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது. அதாவது ஸ்குவாட்ஸ், புஷ் அப்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. இவை எல்லாவற்றையும் தாண்டி டயட் மிகவும் முக்கியம்.

டயட் பிளான் பற்றி உங்கள் அட்வைஸ் என்னவாக இருக்கும்?

நாம் தினமும் சாதம், காய்கறிகள், முட்டை, சிக்கன் என்று சாப்பிடுவோம். அதில் சைடு டிஷ்ஷாக இருப்பதை மெயின் டிஷ்ஷாகவும், மெயின் டிஷ்ஷாக இருப்பதை சைடு டிஷ்ஷாகவும் மாத்திக்கிட்டா நல்லது. உதாரணத்திற்கு சொல்லணும்னா முட்டை, சிக்கன், பச்சை காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொண்டு அரசி, வீட் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாகவும், புரோட்டீன் சத்துள்ள உணவுகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படியான உணவு முறைகளை பின்பற்றும்போது ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம்.

நீங்கள் இதுவரை எத்தனை பேருக்கு பயிற்சி அளித்து இருக்கிறீர்கள்?

கணக்கு கிடையாது. இதுவரை நிறைய பேருக்கு பயிற்சி அளித்து இருக்கிறேன். அவர்கள் அனைவருமே மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் ஒரு சிலர் தங்களது உடலை குறுகிய நாட்களிலேயே கட்டுக்கோப்பாக கொண்டுவர வேண்டும் என்று ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். அதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

நம்முடைய உடலில் உள்ள தோல்களும் ஒரு குழந்தை போன்றதுதான். எப்படி ஒரு குழந்தையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறோமோ அப்படித்தான் நமது மசில்களையும் சரியான உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றின்மூலம் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். ஸ்டீராய்டு எடுத்துக்கொண்ட உடனே நமது மசில்ஸ் வளராது. இன்று நிறையபேர் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், கோச் அதாவது நமது பயிற்சியாளரின் சரியான வழிகாட்டுதல்களுடன் எடுத்துக்கொள்வது நல்லது. அதையும் மீறி சரியான வழிகாட்டுதல் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் முடி உதிர்தல், female ஹார்மோன் வளர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

உங்களுக்கு பிடித்த பாடி பில்டர் என்றால் யாரை சொல்லுவீங்க?

எனக்கு பிடித்த பாடி பில்டர் என்றால் அது தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை வென்ற ரோனி கோல்மன்( Ronnie Coleman) மற்றும் அமெரிக்க பாடி பில்டிங் வீரரான ஃப்ளெக்ஸ் வீலர் ஆகியோர்தான். இவர்கள் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள்.

காலை, மாலை என உடற்பயிற்சி செய்தால்தான் மசில்ஸ் வளர்ச்சியடையுமா?

காலை, மாலை அப்படியென்று எதுவும் கிடையாது. நாங்கள் இரண்டு வேளையுமே உடற்பயிற்சி மேற்கொள்வோம். காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். அதனால் நீண்ட நேரம் பயிற்சி செய்ய முடியும். அப்படி செய்யும்பொழுது நமது உடல் கொஞ்சம் கட்டமைப்பு பெறும். ஆனால் அன்றைய வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மாலையில் வந்து உடற்பயிற்சி செய்யும்பொழுது சிலருக்கு வெகுநேரம் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருக்கும். இதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.


பாடி பில்டராக ஜெயபிரகாஷ் தன் உடற்தகுதியை வெளிப்படுத்திய தருணம்

உடற்பயிற்சி செய்பவர்கள் புரோட்டீன் பவுடர் எதற்காக எடுத்துக் கொள்கிறார்கள்? அதன் நோக்கம் என்ன?

புரோட்டீனில் நிறைய வகைகள் உள்ளன. முட்டை, சிக்கன், ரெட் மீட் போன்றவற்றில் எல்லாம் ஒரு வகையான புரோட்டீன்கள் உள்ளன. மில்க் அதாவது பாலிலும் ஸ்டாபெரி, சாக்லேட் போன்ற ஃபிளேவர்களில் நிறைய புரோட்டீன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் ஸ்டீராய்டு புரோட்டீன்ஸ் கிடையாது. அதனால் எடுத்துக்கொள்ளலாம். தவறேதும் இல்லை. ஆனால், புரோட்டீன் எடுத்துக் கொள்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானது.

‘ஐ’ படத்தில் நடிக்கும்போது விக்ரம் நல்ல உடற்கட்டை வைத்திருந்தார்? பிறகு ஒரே மாதத்தில் உடலை இளைத்து ஸ்லிம்மாக காணப்பட்டார். அப்படி உடனே உடல் எடையை குறைக்க முடியுமா?

கண்டிப்பாக குறைக்கலாம். நாம் சாப்பிடும் புரோட்டீன், கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து நமக்கு என்ன எடை வேண்டுமோ அதற்கு தகுந்தாற்போன்று குறைத்துக்கொள்ளலாம். இன்னொன்று குறைவான புரோட்டீன் உணவோடு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை நடைப்பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அப்படி ரெகுலராக நாம் செய்யும்போது எதிர்பார்த்த ரிசல்ட் கண்டிப்பாக கிடைத்துவிடும்.

உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே ஒருவர் இறந்துவிடும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. அதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் சரி, சராசரி மனிதர்களாக இருந்தாலும் சரி உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்படி பரிசோதனை செய்து கொள்ளாமல் ஒருவர் அதிகமான எடை கொண்ட பொருட்களை தூக்கி பயிற்சி மேற்கொள்ளும்போது இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் உடற்பயிற்சி செய்யும்போது ஹார்ட் ரேட் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது. அப்படி இல்லாமல் எடுத்த உடனேயே 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவது, அதனால் பல்ஸ் ரேட் அதிகமாகி கார்டியாக் அரெஸ்ட் போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுகின்றன. இதுமாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தி உடற்பயிற்சி செய்தாலே உயிரிழப்பு பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

ஜிம்முக்கு செல்பவர்களால் சரியாக நடனம் ஆட முடியாது என்று சொல்லப்படுகிறதே அது உண்மையா?

ஆமாம். உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் நடனம் ஆடும்பொழுது தோள்பட்டை பெரிதாகி மூவ்மென்ட் அரெஸ்ட் ஆகும். நடன கலைஞர்களுக்கு ஏற்ற மாதிரியான பயிற்சிகள் எல்லாம் இருக்கிறது. அதை பின்பற்றித்தான் ஒரு சில நடன கலைஞர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து நடனம் ஆடுகிறார்கள். இல்லையென்றால் நிச்சயம் அவர்களால் நடனம் ஆட முடியாது. நடன கலைஞர் ஸ்ரீதருக்குக்கூட நான்தான் ஜிம் கோச் கொடுத்தேன்.

போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்தி கொள்வீர்கள்?

போட்டிகளில் கலந்துகொள்ளப்போகிறோம் என்றால் காலையில் மூன்று மசில்ஸ், மாலையில் மூன்று மசில்ஸ் என்று சர்க்யூட் எக்சர்சைஸ் செய்வோம். இரண்டு முறை நடைப்பயிற்சி மேற்கொள்வோம். டயட் பிளான் என்ன என்பதை சரியாக பின்பற்றுவோம். குறிப்பாக, கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து புரோட்டீன் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வோம். அதிலும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவே உணவில் உப்பை தவிர்த்து விடுவோம். போட்டிகள் முடிந்த பிறகு பழச்சாறுகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுக்க ஆரம்பித்து பிறகு நார்மல் உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிப்போம்.

Updated On 7 May 2024 3:51 AM GMT
ராணி

ராணி

Next Story