இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொதுவாகவே ஒவ்வொரு வீடுகளிலும் இன்று பெற்றோர்கள் சந்திக்கும் தலையாய பிரச்சினை, பிள்ளைகள் பெரியவர்களை மதிப்பதில்லை. ஒன்று சொல்லிவிட்டால்போதும் இந்த வயதிலேயே கோபமும், ஆத்திரமும் எப்படி வருகிறது பாருங்கள் என்று பலரும் பலவிதமாக குறைபட்டுக் கொள்வதை பார்த்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். இது ஒரு ரகம் என்றால் இன்னொரு புறம் எனது பிள்ளை மிகவும் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தையாக, அதாவது மிக மிக சுறுசுறுப்பான குழந்தையாக இருக்கிறது. இதனால் வீட்டில் மட்டுமல்ல பள்ளிகூடம் போன்ற பொது இடங்களில் அதிக பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது என்று புலம்புவார்கள். குழந்தைகளால் வரும் இப்படியான பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது குறித்த தெளிவு இன்று பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. இந்த நிலையில், இப்படியான குழந்தைகளை எப்படி கையாள்வது என்பது குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசியிருக்கிறார் ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி. அதுகுறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

குழந்தைகள் வளரும் சமயத்தில் சிலர் இடது கை பழக்கம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். இதனை பல பெற்றோர்கள் தடுத்து நிறுத்தி மாற்றவும் முயல்கிறார்கள். அவ்வாறு செய்யலாமா?


இடது கை பழக்கம் உடையவர்களிடம் கேள்வி கேட்கும் திறன் அதிகம் இருக்கும்!

சொல்லப்போனால் எல்லா குழந்தைகளுமே துவக்க காலத்தில் இடது கை பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதன் அடையாளமாகத்தான் பல கேள்விகளை கேட்கும் பழக்கமும் அவர்களுக்கு அந்த சமயம் இருக்கிறது. காரணம் இடது கை பழக்கம் உடையவர்கள் அப்படித்தான் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். இருந்தாலும் பல பெற்றோர்கள் அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தடுத்து நிறுத்தி, 'பேசாம அமைதியா இரு' என சொல்லி விடுகிறார்கள். இதனால் அவர்களது கேள்விகேட்கும் பழக்கமும் திறனும் தடைபடுவதோட, அது தவறான ஒன்றாக அவர்களது மனதில் பதிகிறது. இந்த சூழலை நாம் ஏற்படுத்தக் கூடாது. அதே போல் இடது கை பழக்கம் என்பது தவறான ஒன்று கிடையாது. இருப்பினும், உண்மையாகவே அவர்கள் இடது கை பழக்கம் உடையவர்களா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களிடம் ஏதேனும் குழப்பம் இருந்தால் வலது கை பழக்கத்தை கொண்டு வர முயலலாம். ஆனால் நிஜமாகவே அந்த குழந்தைக்கு இடது கை பழக்கம் மட்டுமே இருந்தால், அதை கண்டிப்பாக மாற்ற முயலக் கூடாது. அப்படி முயன்றால் அவர்களது வலது மூளையின் செயல் திறன் குறையலாம், சில பாதிப்புகளையும் தரலாம்.

இன்றைய சூழலில் எல்லா குழந்தைகளுமே ஹைப்பர் ஆக்டிவ் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை வளர்ப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இத்தகைய குழந்தைகளை எப்படி கையாள்வது?


குழந்தைகளின் நடவடிக்கையை ஒழுங்குப்படுத்த பெற்றோர்களே முதலில் முயற்சிக்க வேண்டும்

இன்றைய குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவிட்டியாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமே சமூகம்தான். அதோடு மொபைல், டிவி போன்ற விஷயங்களும் அவர்களை அந்த மனநிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடுகிறது. இதனை மாற்றுவது முழுக்க முழுக்க பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும்பொழுதே சில கட்டுப்பாடுகளை விதித்து சுய ஒழுக்கத்தோடு நடந்துக்கொள்ள அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். காரணம் குழந்தைகள் நாளைய சமூகத்தின் ஒரு அங்கம். அப்படிப்பட்டவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டியது ஒவ்வொரு தாய் மற்றும் ஆசிரியரின் கடமை. குறிப்பாக அவர்கள் செய்கிற தவறுகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் பொது இடத்திற்கு செல்லும்போது எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறிவுரையாகக் கூற வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை மீண்டும் எந்த தவறையும் அவர்கள் செய்ய மாட்டர்கள். குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என விட்டுவிட்டால் வளர வளர இன்னமும் மோசமாக மாறி விடுவார்கள். இந்த விஷயத்தில் நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

இப்போது இருக்கும் குழந்தைகள் நாம் சொல்லும் ஒரு கருத்திற்கு எதிர் வாதம் வைப்பதையே பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம், தான் ஒரு அறிவாளி என்பதையும் நிரூபிக்க முயல்கின்றார்கள். இத்தகைய மனநிலையை எப்படி மாற்றுவது?


பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுவது அவர்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்

கண்டிப்பாக இந்த பழக்கத்தையும் நாம் நிச்சயமாக குழந்தைகள் இடத்தில் மாற்ற வேண்டும். அந்த பொறுப்பும் முழுக்க முழுக்க பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது. சொல்லப்போனால் துவக்கத்தில் குழந்தைகள் இப்படி பேசுவதை ரசித்து பல பெற்றோர்கள் வரவேற்பார்கள். ஆனால் நாளடைவில் அதுவே அவர்களுக்கு துன்பத்தையும் தந்துவிடும். இப்படியான வயதிற்கு மீறிய பேச்சு வழக்கம் வந்ததற்கான மிக முக்கிய காரணமே இன்றைய ஊடகங்கள்தான். அவர்களே அதனை பெரிய அளவில் வளர்த்து வருகிறார்கள். இந்த சிக்கலை தடுக்க பெற்றோர்கள்தான் முறைப்படி குழந்தைகளை கண்காணித்து வழி நடத்த வேண்டும். எந்த ஒரு விஷயத்தையுமே துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தினால் எல்லோருக்குமே நல்லது. 2 வயது குழந்தை என்றால் அந்த வயதிற்கு ஏற்ற பேச்சுதான் இருக்க வேண்டும். இப்போது உள்ள குழந்தைகள் எல்லாம்... அப்பா, அம்மாவை வா போ என்றுதான் அழைக்கிறார்கள். இது தவறான ஒன்று. பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும்? போன்ற விஷயங்களை சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டியது நமது கடமை. மொபைல் ஃபோன் பார்க்கும் வழக்கத்தை முடிந்தவரை குறைத்து, நல்ல விஷயங்களை சொல்லித்தர வேண்டும். இப்போதே இப்படி வழி நடத்தினால்தான் நாளை ஆரோக்கியமான சமுதாயத்தை நாம் வளர்த்தெடுக்க முடியும்.

இன்றைய பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?


ராணி நேர்காணலின்போது ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி

பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கே பல விஷயங்கள் தெரியும். இருப்பினும் ஏற்கனவே கூறியதுபோல ஆரம்பகால கட்டத்திலேயே குழந்தைகளை நல்ல விதமாக வளர்த்து, அவர்களை வழி நடத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என நான் கூறுவேன். காரணம் நாளைய சமூதாயத்தின் தூண்களே அவர்கள்தான், எந்த ஒரு நிலைக்கும் அவர்கள் வருவார்கள். மருத்துவம் துவங்கி அரசியல்வரை எங்கு அங்கம் வகித்தாலும், ஏன் ஒரு கடைநிலை ஊழியராகவே இருந்தாலும், நல்ல குணம் கொண்ட நபராக இருந்தால்தான் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நல்லது. அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு பெற்றோர்களும் இன்று தங்கள் குழந்தைகள் மேல் கவனம் செலுத்தினால்தான், நாளை நல்ல குடிமகனை இந்த சமுதாயத்திற்கு கொடுக்க முடியும். அதனை எப்போதுமே மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்.

Updated On 28 May 2024 12:07 AM IST
ராணி

ராணி

Next Story