இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகளவில் இப்போது gender reveal என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து இதை விழாவாகவே கொண்டாடுகின்றனர். குறிப்பாக, சோஷியல் மீடியாக்களின் பயன்பாடு அதிகரித்ததிலிருந்து பலரும் இதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை பொதுவெளிகளில் பகிர்ந்துவருகின்றனர். கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் உரிமை பல நாடுகளில் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியா போன்ற சில நாடுகள் இதற்கு தடை விதித்திருக்கின்றன. இதனால் மருத்துவர்களும் பரிசோதனை செய்து கருவின் பாலினத்தை வெளியே தெரிவிக்கக்கூடாது. இதை செய்யும் மருத்துவருக்கும், பெற்றோருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூபர் இர்ஃபான் வெளிநாட்டுக்குச் சென்று பரிசோதனை செய்து, குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தி வீடியோவையும் பதிவிட்டார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இர்ஃபானின் வழக்கு குறித்த முழுமையான விவரங்களையும், இந்தியாவில் உள்ள பாலின தேர்வு தடைச் சட்டம் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

யூடியூபர் இர்ஃபான் வழக்கு

பிரபல யூடியூபர் இர்ஃபான், Irfan's View என்ற பெயரில் food review-ஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய சேனலுக்கு 4.3 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கின்றனர். கடந்த ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில் இவருடைய மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். முதலாமாண்டு திருமண நாளை கொண்டாட துபாய் சென்ற இர்ஃபான் தம்பதி, அங்கு பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டனர். அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் பரிசோதனை மூலம் கருவின் பாலினத்தை தெரிந்துகொள்வதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதற்கு அனுமதியில்லை. இந்நிலையில் இர்ஃபான் தனது குழந்தையின் பாலினத்தை துபாயில் தெரிந்துகொண்டதுடன், விழா வைத்து அதனை குடும்பத்தினர் முன்னிலையில் ரிவீல் செய்தார். அந்த விழாவை வீடியோவாக கடந்த 19ஆம் தேதியன்று தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். அந்த வீடியோவை சுமார் 2 லட்சம்பேர் பார்த்திருந்தனர்.


கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான் தம்பதி

இதுதான் பெரிய சர்ச்சையை கிளப்பியது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை மூலம் கண்டறிவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும், பாலினத்தை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறி பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இதனையடுத்து தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பாக கடந்த 21ஆம் தேதி இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், “இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை சார்பாக இர்ஃபானுக்கு பாலின தேர்வை தடை செய்தல் விதிகளை மீறியதற்காக சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அடுத்த நாளே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்திலுள்ள இர்ஃபானின் அலுவலகத்திற்கு சென்று நோட்டீஸை நேரிலும் வழங்கினர். இதனையடுத்து உடனடியாக வீடியோவை நீக்கிய இர்ஃபான், மருத்துவத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கமளித்ததுடன், மன்னிப்பு கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வதாகவும் உறுதியளித்திருக்கிறார். இந்த வழக்கு இப்போது இந்திய அளவில் பேசுபொருளானதற்கு காரணம் என்ன? பாலின தேர்வு தடை சட்டம் கொண்டுவரப்பட்டது ஏன்? என்பது குறித்து கொஞ்சம் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.


இந்தியாவில் பெண் குழந்தைகளை பாதுகாக்க 1994ஆம் ஆண்டு பாலின தேர்வு தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது

பாலின தேர்வு தடைச் சட்டம்

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் பெருமளவில் இல்லாதபோது குழந்தை பிறந்தவுடன் அது ஆணா அல்லது பெண்ணா என பார்த்து, அது பெண் குழந்தையாக இருக்கும்பட்சத்தில் அதற்கு நெல்மணி அல்லது கள்ளிப்பாலை கொடுத்து குடும்பத்தினரே கொலைசெய்யும் அவலநிலை இருந்தது. இதனால் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை அப்போது நாளுக்குநாள் அதிகரித்தது. அதுவே நாட்கள் செல்ல செல்ல, அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருத்துவ வசதிகள் இந்தியாவில் வளர்ந்துகொண்டிருந்த காலம் அது. அப்போது கரு வயிற்றிலிருக்கும்போதே குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்து தெரிந்துகொண்டு பெண் குழந்தையாக இருப்பின் அதை கருவிலேயே கலைத்தனர். இதனால் இந்தியாவில் ஆண் - பெண் பாலின விகிதாசார பாகுபாடு அதிகளவில் இருந்தது. அந்த சமயத்தில் கருக்கலைப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அதனை தடுக்கவும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், 1994ஆம் ஆண்டு இந்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டுவந்தது. அதுதான் பாலின தேர்வு தடைச் சட்டம். இந்த சட்டத்தின் நோக்கமே தமிழ்நாடு மட்டுமில்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதுதான். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. கருவின் பாலினத்தை அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்தால் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி கடுமையான தண்டனை உண்டு

தண்டனை என்ன?

இந்தியாவில் பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளில் முக்கியமானது பாலின தேர்வு தடை சட்டம். இச்சட்டத்தின்படி பெற்றோராக இருந்தாலும் சிசுவின் பாலினத்தை பொதுவெளியில் அறிவிப்பது குற்றமாகவே கருதப்படும். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள்வரை அபராதத்துடன்கூடிய சிறைதண்டனை விதிக்கப்படலாம். இதனால் யூடியூபர் இர்ஃபானுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பரிசோதனை செய்தது வெளிநாட்டில் என்பதால் அவரை தண்டிக்கும் உரிமை நமது சட்டத்தில் இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். இருப்பினும் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கலாமே தவிர, அவர்மீது வழக்கு தொடரவோ அல்லது தண்டிக்கவோ முடியாது என்கின்றனர். மேலும் பிரபலமாக இருக்கும் ஒரு நபர் இத்தகைய செயலை செய்தது தவறு என்பதால் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் தொடர்கிறதா பெண் சிசுக்கொலை?

உலகளவில் அபரிமிதமான வளர்ச்சியும் முன்னேற்றங்களும் ஏற்பட்டாலும், இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் கிராம மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான நாகரிக இடைவெளி இன்றுவரை அதிகமாகத்தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்கமுடியாது. கடந்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களிலும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனால் அன்றாட நாட்டு நடப்புகள் அனைவரையும் சென்றடைகின்றன. இருப்பினும் இன்றுவரை ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படுகிறார்களா என்றால் உண்மையில் இல்லை.


இன்றும் தொடரும் பெண்சிசுக் கொலைகள் (உ.ம்)

இன்றும், ஆண் குழந்தைதான் வேண்டும் என ஆன்மிகத்தை தேடிச் செல்கிற பெற்றோர் இருக்கின்றனர். அதாவது வெளிநாட்டில் இருக்கிற ஆண் - பெண் சமத்துவத்திற்கும், இந்தியாவில் இருக்கிற ஆண் - பெண் சமத்துவத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். 1994ஆம் ஆண்டு பாலின தேர்வு தடை சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்றுவரை பெண் சிசுக்கொலை குறித்த செய்திகளை நாம் பார்க்கிறோம். குறிப்பாக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் ஒரு சில வட மாநிலங்களில் பெண் சிசுக்கொலை இன்றும் நடக்கிறது. ஏன், கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலையில்கூட ஒரு தனியார் மருத்துவமனை சில ஸ்கேன் சென்டர்களுடன் தொடர்புவைத்து, கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கருக்கலைப்பில் ஈடுபட்ட செய்தி வெளியாகி நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் அந்த மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் டெக்னாலஜி பயன்பாடு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் இங்கும் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் மேம்பாடு மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் சட்டத்தின் வெளிச்சத்திற்கு வராத இதுபோன்ற குற்றங்கள் பல இருக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இன்று சமூகத்தின் பிரதிபலிப்பாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. அதில் இர்ஃபான் போன்று பிரபலமாக இருக்கும் நபர்கள் இதுபோன்ற கடுமையான தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அது மற்றவர்களும் தவறு செய்வதற்கு வழி அமைத்து கொடுப்பதுபோன்று இருக்கும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

Updated On 3 Jun 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story