இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட முயன்ற செய்தி வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்பே ஏப்ரல் மாதம் பாந்த்ராவிலுள்ள அவருடைய வீட்டின் முன்பு மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனிடையே சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் அரசியல்வாதியுமான பாப சித்திக், மும்பையில் கடந்த 12ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த அனைத்து சம்பவத்திற்கு பின்னாலும் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்த நிலையில், இந்த கொலையை தொடர்ந்து ரூ. 5 கோடி தராவிட்டால் சல்மான் கானும் இதேபோன்று கொலை செய்யப்படுவார் என்று பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருக்கிறது. இதனிடையே ஜூன் மாதம் சல்மான் கானை கொல்ல முயன்றதாக பதியப்பட்ட வழக்கில் ஹரியானாவை சேர்ந்த சுகா என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். யார் இந்த பிஷ்னோய்? இவர்களுக்கும் சல்மான் கானுக்கும் பகை உருவானது எப்படி? இதில் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது ஏன்? பிஷ்னோய் கும்பலுக்கு தலைமையாக செயல்படும் லாரன்ஸ் பிஷ்னோய் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

சல்மான் கானும் கொலை சதிகளும்

2024ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே சல்மான் கானுக்கு நேரம் சரியில்லை என்றே சொல்லலாம். காரணம், ஜனவரி மாதமே தனது பண்ணை வீட்டிற்கு அடையாளம் தெரியாத 2 நபர்கள் போலி ஐடி கார்டை பயன்படுத்தி புகுந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நவி மும்பை பாந்த்ராவிலிருக்கும் சல்மான் கானின் வீட்டுக்கு முன்பு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே அவர் போலீசில் புகாரும் அளித்திருந்தார். மேலும் குறிப்பிட்ட ரவுடி கும்பலைச் சேர்ந்த 60 முதல் 70 பேர் தனது ஷூட்டிங் ஸ்பாட்களிலும் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஜூன் மாதம் பான்வேல்லில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்கு சல்மான் கான் காரில் சென்றபோது அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், அந்த சதி முறியடிக்கப்பட்டதாகவும் போலீசாரே தெரிவித்திருந்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் நடப்பதற்கு முன்பே ஜனவரி மாதத்திலேயே பிரபல ரவுடி கும்பலான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்ய முயற்சிப்பதாக சல்மான் கான் ஏற்கனவே போலீசாரிடம் புகாரும் அளித்திருந்தார். அந்த புகாரைத் தொடர்ந்து மார்ச் மாதம் பிஷ்னோய் கும்பல் இமெயில் மூலம் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தது. அதன்பிறகுதான் சல்மான் கானின் நடமாட்டத்தை கவனிக்க அடியாட்கள் நிறுத்தப்பட்டனர். மேலும் சல்மான் கானை கொலை செய்ய அந்த கும்பலுக்கு ரூ. 25 லட்சம் தர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இப்படி சல்மான் கான் மீது குறி வைத்த பிஷ்னோய் கும்பலை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக வேறொரு கொலை சம்பவம் அரங்கேறியது.


நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்

பாபா சித்திக் கொலை ஏன்?

சல்மானின் நெருங்கிய நண்பரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்மீது, மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்திருக்கும் அவருடைய மகனும் எம்.எல்.ஏவுமான ஸீஷான் சித்திக் அலுவலகத்தின் முன்பு அக்டோபர் 12ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். பாபா சித்திக்கிற்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இப்படி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டது மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்றுக்கொள்வதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டது போலீசாருக்கு ஷாக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பிஷ்னோய் கும்பல் பரவியிருக்கும் ராய்காட், பான்வெல், கர்ஜத் ஆகிய பகுதிகளில் குற்றப்பிரிவு போலீசாரால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதியானதாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாபா சித்திக்கின் கொலைக்கு பின்பு, ஜூன் மாதம் சல்மான் கானை கொல்லமுயன்றதாக ஹரியானாவைச் சேர்ந்த சுகா என்கிற சுக்பிர் பால்பிர் சிங்கை பானிபட்டில் வைத்து அக்டோபர் 16ஆம் தேதி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.


சுட்டுக்கொல்லப்பட்ட பாபா சித்திக் சல்மான் கானின் நெருங்கிய நண்பர்

சல்மான் கானுக்கும் பிஷ்னோய் கும்பலுக்கும் என்ன தொடர்பு?

1998ஆம் ஆண்டு ‘ஹம் சாத் சாத் ஹைன்’ திரைப்பட படபிடிப்பின்போது சல்மான் கான் மற்றும் அவருடன் படபிடிப்பில் இருந்த சில நடிகர்கள் சிங்காரா வகை மானை வேட்டையாடி கொன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து சல்மான் கான் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டு இன்றுவரை அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த சம்பவத்தால் சல்மான் கான் மீது ஒரு சமூகத்தினருக்கு வெறுப்பு எழுந்தது அவர்கள்தான் பிஷ்னோய். ‘பிஷ்’ என்றால் இருபது ‘னோய்’ என்றால் 9 என அர்த்தம்கொண்ட மொத்தம் 29 வகை நற்கொள்கைகளை கடைபிடிப்பதால் இந்த சமூகத்திற்கு பிஷ்னோய் என்னும் பேர் வந்தது. ராஜஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஹரியானா எல்லைகளில் பரவி வாழும் இச்சமூகத்தினர் மரங்கள் மற்றும் வன விலங்குகளை தெய்வமாக கருதுகின்றனர். குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் கண்களில் வேட்டையாடிகள் தப்பமுடியாது. வசதிபடைத்தவர்கள் தங்களுடைய காடுகளில் மான்களை வேட்டையாடும்போது அதை தடுக்கச் சென்று இந்த சமூகத்தை சேர்ந்த பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் பஞ்சாபைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கானை கொல்லப்போவதாக 2018ஆம் ஆண்டு வெளிப்படையாகவே அறிவித்தார். தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தாலும் அங்கிருந்தே தனது கும்பலை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. சல்மான் கானும் பாபா சித்திக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலேயே முதலில் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பாடகர் சித்து மூஸவாலா

யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

லாரன்ஸ் பிஷ்னோய். இந்த பெயர் வட இந்தியாவில் மிகவும் பிரபலம். மும்பையில் தாதாவாக வலம்வரும் தாவூத் இப்ராஹிமை போன்றே சட்டத்துக்கு கட்டுப்படாமல் துணிச்சலாக குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு இளைஞன். சல்மான் கானை கொலைசெய்ய முயன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட போதிலும், ‘சல்மான் கானுக்கு உதவி செய்ய நினைத்தால் பாபா சித்திக்கின் நிலைதான் அவர்களுக்கும் ஏற்படும்’ என்று வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருக்கிறது பிஷ்னோய் கும்பல். சிறையில் இருக்கும் ஒரு நபருக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது? என்பது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் 700க்கும் மேற்பட்ட அடியாட்களையும் ஏ.கே 47எஸ், எம்16எஸ், மற்றும் ஏ.கே 92எஸ் போன்ற பவர்ஃபுல் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களையும் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையில் இந்த கும்பல் இயங்கிவருகிறது. 31 வயதேயான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் பிறந்தவன். இவனுடைய இயற்பெயர் சத்விந்தர் சிங். லாரன்ஸ் என குடும்பத்தாரால் செல்லமாக அழைக்கப்பட்ட சத்விந்தர் சிங்கின் அப்பா லவீந்தர் சிங் முதலில் ஹரியானா காவல்துறையில் பணியாற்றி பின்பு வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டார். இப்படி பஞ்சாபை பூர்விகமாக கொண்டிருந்தாலும் ஹரியானாவில் பள்ளிப்படிப்பு, சண்டிகரில் மேற்படிப்பு என மூன்று மாவட்டங்களில் தனக்கான ஆதரவை சம்பாதித்தான். கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டே பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவரான லாரன்ஸ், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 2010 ஆம் ஆண்டு அவன்மீது முதல் வழக்குப்பதியப்பட்டது. மாணவர் அரசியலில் ஈடுபட்டபோதே அவன்மீது சுமார் 7 வழக்குகள் பதியப்பட்டன. தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கைது, விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பியோட்டம், மீண்டும் 2016ல் கைது என சிறைச்சாலையிலேயே பெரும்பாலான நாட்களை கழித்த லாரன்ஸ் அங்கு வைத்தே தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். 2022ஆம் ஆண்டு பிரபல பஞ்சாப் பாடகரான சித்து மூஸவாலா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் வைத்தே கைது செய்யப்பட்ட லாரன்ஸ்மீது டஜன் கணக்கில் குற்ற வழக்குகள் இருக்கின்றன.


சல்மான் கான் மீது பிஷ்னோய் சமூகம் வெறுப்புகாட்ட காரணம்

சித்துவின் கொலை நடந்த சில நாட்களிலேயே மீண்டும் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது வெறும் 31 வயதேயான லாரன்ஸ், முதன்முதலில் சிறைக்கு சென்றபோது தான் ஒரு மாணவன்தான் எனவும், அங்கு வைத்துதான் கேங்க்ஸ்டர் ஆனதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தான். அந்த பேட்டி சிறைச்சாலையில் வைத்து எடுக்கப்பட்டதால், எந்தெந்த சிறைகளிலெல்லாம் லாரன்ஸ் அடைக்கப்பட்டிருந்தானோ அவை அனைத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் எந்த சிறையில் வைத்து அந்த பேட்டி எடுக்கப்பட்டது என்ற விவரம் இதுவரை கிடைக்கவில்லை. சிறைச்சாலையில் வைத்து பிரபல ரவுடியான கோல்டி பிராரின் நட்பை சம்பாதித்த பிஷ்னோய், கோல்டியின் உதவியாலேயே காலிஸ்தான் அமைப்புகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. சித்து மூஸவாலாவின் கொலைக்கு பிறகு 2023ஆம் அண்டு காலிஸ்தான் பிரிவினைவாதி சுக்தூல் சிங் கில் கொலைக்கும் பிஷ்னோய் தாமாக முன்வந்து பொறுப்பேற்றான். இப்படி எந்த குற்றங்கள் செய்தாலும் தைரியமாக அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருக்கும் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

சல்மான் கான் மீது கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துகொண்டு அவரை கொலைசெய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திட்டமிடும் அதே வேளையில், ‘சல்மான் கான் மன்னிப்பு கேட்டால் அவரை பிஷ்னோய் சமூகம் மன்னித்துவிடும்’ என்று பிஷ்னோய் சமூகத்தின் தேசிய தலைவரான மகாசபா தேவேந்திர பூடியா தெரிவித்திருக்கிறார். மேலும் பிஷ்னோய் சமூகத்தின் புனித தலமான முக்கம்க்கு வந்து சல்மான் கான் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால், தனது சமூக மக்கள் ஒன்றாக அமர்ந்து அவர்களுடைய 29 விதிகளின்கீழ் அவர்களை மன்னிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஒருவேளை சல்மான் கான் மன்னிப்பு கேட்டால் 27 வருடங்களாக வளர்ந்துவரும் பகை முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 21 Oct 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story