‘ராட்சசன்’ மற்றும் ‘போர்த்தொழில்’ தமிழ்ப்படங்களை பார்த்து திகிலடையாதவர்களே இருக்கமுடியாது. அதேபோல் உலகளவில் 'silence of lambs', 'memories of murder' போன்ற ஆங்கிலப்படங்களையும், ‘அஞ்சம் பதிரா’, ‘ஃபாரன்சிக்’ போன்ற மலையாளப்படங்களையும் உயிரை நடுங்கசெய்யும் வகையில் எடுத்திருப்பார்கள். இந்த படங்கள் வெவ்வேறு கதையம்சங்களை கொண்டிருந்தாலும் அவற்றில் கொலைகாரன், தான் செய்யும் அனைத்து கொலைகளையும் ஒரே பாணியில் அரங்கேற்றியிருப்பான் என்பதுதான் அனைத்துக்குமான ஒற்றுமை. இதுபோன்ற திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் உண்மை சம்பவங்களையே தழுவி எடுக்கப்பட்டவையாக இருக்கும். இதுபோன்ற பல கொலைகளையும் நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம். அப்படி சமீபத்தில் உலகையே நடுங்கச்செய்த கொலைகாரன்தான் காலின்ஸ். 33 வயதில் 42 கொலைகளை ஒரே பாணியில் அரங்கேற்றி இருக்கும் இவன் யார்? எதற்காக தொடர் கொலைகளை செய்தான்? இப்படி மனிதன் அல்லது பிற உயிரினத்தை ஈவு இரக்கமின்றி கொலைசெய்யும் மனநிலை எப்படி உருவாகிறது? இதற்கு பின்னாலிருக்கும் மனநல பிரச்சினை என்ன? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் சற்று விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த காலின்ஸ்?
கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள பெரிய குப்பைக்கிடங்கு ஒன்றில் ஜூலை 11ஆம் தேதி, மர்மமான முறையில் பெரிய பிளாஸ்டிக் பைகள் கிடப்பதையும், அவற்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதையும் கவனித்த பொதுமக்கள் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலின்பேரில் அங்கு சோதனையிட்ட போலீசார் அந்த பிளாஸ்டிக் பைகளில், வெட்டப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நிலையில் 9 பெண்களின் உடல்களை கண்டறிந்தனர். இந்த சம்பவம் கென்யா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தினர் போலீசார். இறந்துபோன ஒரு பெண்ணின் செல்போன் கிடைத்த நிலையில், அதை ஆராய்ந்து பார்த்தபோது, காலின்ஸ் ஜூமைசி கலூஷா என்ற 33 வயது நபர்மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த நபரைத் தேடிய போலீசாருக்கு மதுபான க்ளப் ஒன்றில் அவன் இருப்பது தெரியவரவே ஜூலை 15ஆம் தேதி அதிகாலையில் அவனை கைதுசெய்தனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டதில் குப்பைக்கிடங்குகளில் கண்டெடுக்கப்பட்ட 9 பெண்களையும் கொலைசெய்தது தான்தான் என்பதை அவன் ஒப்புக்கொண்டான்.
சீரியல் கில்லர் காலின்ஸ் ஜூமைசி கலூஷா - சாக்குமூட்டைகளில் கட்டப்பட்டுள்ள பெண்களின் உடல்கள்
மேலும் அவனிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 42 பெண்களை இதுபோல் கொலைசெய்திருப்பதாகவும், அதில் முதலாவது கொலையே தனது மனைவிதான் என்றும் தெரிவித்திருக்கிறான். இதுகுறித்து அவன் அளித்த வாக்குமூலத்தில், டஜன் கணக்கில் பெண்களை கடத்தி அவர்களை கொலைசெய்து பின்னர் முக்குரு சேரிப்பகுதிக்கு அருகிலிருக்கும் உள்ளூர்வாசிகளின் குப்பைக்கிடங்கான நைபோரி குவாரியில் தூக்கி வீசுவதை வழக்கமாக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளான். காலின்ஸ் வீட்டை போலீசார் சோதனையிட்டதில் செல்போன்கள், ஐடி கார்டுகள், கத்தி, ரப்பர் கையுறைகள், செல்லோடேப்கள் மற்றும் குப்பைக்கிடங்குகளில் உடல்கள் கட்டப்பட்டிருந்ததைப் போன்ற நைலான் சாக்குப்பைகளை கைப்பற்றியிருக்கின்றனர். காலின்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதை குற்றப்புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் அமீன் முகமது உறுதி செய்ததுடன், குவாரியிலிருந்து உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் காலின்ஸ் முதலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவன் தரப்பு வழக்கறிஞர் ஜான் மைனா டேக்வா, போலீசாரால் காலின்ஸ் தவறாக நடத்தப்பட்டதாகவும், அதனால் அவன் அளித்த வாக்குமூலம் உண்மையானது இல்லை எனவும் வாதாடினார். அதனையடுத்து காலின்ஸை மேலும் 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கொந்தளித்த கென்யா மக்கள்
இரண்டு ஆண்டுகளில் 42 கொலைகள் செய்த சீரியல் கில்லர் குறித்த செய்தியானது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, ‘மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத ஒரு மனநோய் தொடர் கொலையாளி’ என காலின்ஸை சித்தரிக்கின்றனர் கென்ய மக்கள். ஏற்கனவே கென்யாவில் பல அரசியல் சிக்கல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியிருக்கிறது.
காலின்ஸுக்கு எதிரான கென்ய மக்களின் போராட்டம்
சீரியல் கில்லரால் கொலைசெய்யப்பட்டு வீசப்பட்டதாக கூறப்படும் உடல்கள், சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது காணாமல் போனவர்களின் உடல்களாக இருக்கலாம் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர் ஜனநாயக சார்பு கட்சியின் ஆதரவாளர்கள். ஏனென்றால் வரி உயர்வுக்கு எதிராக மக்கள் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் அமைதியான முறையில் தொடங்கிய பேரணியானது ஆர்ப்பாட்டத்தில் முடிந்தது. அது ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவுக்கு எதிரான பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. போராட்டத்தின்போது போலீசார் கடுமையான பலத்தை பிரயோகப்படுத்தியதில் டஜன் கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்தனர். அப்படி இறந்தவர்களின் உடல்கள் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் விசாரணையை முடுக்கி, உடல்களை துரிதமாக கண்டுபிடித்து தருமாறு மனித உரிமை குழுக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. ஆனால் சீரியல் கில்லரால் கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை போராட்டத்தில் இறந்தவர்களின் உடல்கள் என பரப்பப்படும் வதந்திகள் குறித்து உள்ளூர்வாசிகள் கோபமடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும் அரசியல் பிரச்சினைகள் பெரிதாக உருவெடுத்திருக்கும் இந்த சமயத்தில் குவாரியில் உடல்கள் கண்டறியப்பட்ட மூன்றே நாட்களில் எப்படி குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர்? அப்படி மூன்று நாட்களில் கைது செய்ய முடியுமானால் 2 வருடங்களாக நடந்த கொலைகள் குறித்து எப்படி சந்தேகங்கள் எழாமல் இருந்திருக்கும் என்பது போன்ற கேள்விகளையும் பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட காலின்ஸிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
இதனிடையே இந்த தொடர் கொலைகளில் போலீசாரின் பங்களிப்பு ஏதேனும் இருக்கிறதா? இதுபோன்ற கொலைகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? போன்ற கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே காணாமல்போன பெண்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்களை போலீசார் முறையாக விசாரித்திருந்தால் நிலைமை இந்த அளவிற்கு மோசமாகியிருக்காது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இறந்த சடலங்கள் அனைத்துமே சிதைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனைமூலம் அவற்றை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சைக்கோபேத் கொலையாளிகள் என்று யாரை சொல்கின்றனர்?
பொதுவாக தொடர் கொலைகள் மற்றும் கொடூரமான கொலைகளை செய்வோரை அல்லது மோசமான நடத்தை கொண்டோரை சைக்கோ என்று அழைப்பார்கள். ஆனால் சைக்கோ என்ற சொல்லுக்கு, பெரும்பாலும் எந்தவித நோக்கமும் இன்றி அல்லது குறிப்பிட்ட காரணத்தால் ஏற்பட்ட பாதிப்பாலோ மற்றவரை புண்படுத்தும் ஒரு மனநல ஆக்கிரமிப்பு என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. குறுகிய மனப்பான்மை, மோசமான/ கொடூரமான எண்ணங்கள் ஆட்கொண்ட நபரை சைக்கோ என்கின்றனர். அதனால் இந்த வார்த்தை மன சிதைவு நோயையோ அல்லது ஆளுமைக் கோளாறையோ குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தை அல்ல என்கின்றனர் மனநல மருத்துவர்கள். பெரும்பாலும் இதுபோன்ற தொடர் கொலைகளில் ஈடுபடுவோரை முதலில் மனநல காப்பகத்திற்குத்தான் அனுப்புவார்கள் என்றும் கூறுகின்றனர்.
காலின்ஸ் போன்ற குற்றவாளிகளுக்கு ‘3’ படத்தில் வருவதைப் போன்று மனநோய் இருக்கலாம் - மருத்துவர்கள் கருத்து
இதுபோன்ற கொடூர கொலைகளில் ஈடுபடுவோரை Psychiatric illness, insane மற்றும் Antisocial Personality என பல்வேறு மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோராக வகைப்படுத்துகின்றனர். சிலருக்கு தனுஷின் ‘3’ படத்தில் வருவதைப் போன்று காதில் யாரேனும் எதோ பேசுவதைப் போன்றோ அல்லது கண்களுக்கு உருவங்கள் தென்படுவது போன்றோ தோன்றும். அந்த குரல் என்ன சொல்கிறதோ அதை கேட்டு கொலை செய்துவிடுவார்கள். சிலர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக, இதுபோன்ற மனநல நோயாளிகள் செய்யும் கொலைகள் பெரும்பாலும் திட்டமிட்டவையாக இருக்காது, அதனால் தனக்கு யாரென்றே தெரியாத நபரைக்கூட எந்தவித ஆதாயமுமின்றி கொடூரமாக பலமுறை கத்தியால் குத்தியோ அல்லது ஆயுதங்களை பயன்படுத்தி துன்புறுத்தியோ கொலைசெய்வார்கள் என விவரிக்கின்றனர் மருத்துவர்கள். மேலும் சிலரோ அதீத போதைப் பொருட்களின் பயன்பட்டால் சுயக்கட்டுப்பாடும் நிதானமும் இழந்து, என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று முடிவெடுக்கும் திறனை இழந்துவிடுவார்கள். இவர்களும் கொலையாளிகளாக உருவாகலாம். ஆனால் Antisocial Personality என்று சொல்லப்படுகிற சமூக விரோத ஆளுமை குணம் கொண்டவர்களுக்கு மனநோய், போதைப்பழக்கம் போன்றவை இல்லாவிட்டாலும் இயல்பாகவே மூர்க்கத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இதுபோன்றோர் சிறுவயதிலிருந்தே பூச்சிகள், சிறிய உயிரினங்களை பிடித்து கொடூரமாக கொல்லும் நபராக இருந்திருப்பர். இவர்கள் பின்னாளில் சீரியல் கொலையாளியாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது என விவரிக்கின்றனர். கென்யாவில் பெண்களை மட்டுமே குறிவைத்து கடத்தி, ஒரே பாணியில் அவர்களை கொலைசெய்து சிதைத்து, சாக்குமூட்டையில் கட்டிவீசும் பழக்கத்தை கொண்டிருந்த காலின்ஸுக்கும் சமூக விரோத ஆளுமை குணம் இருக்க வாய்ப்பிருக்கிறது. எந்த நோக்கத்திற்காக கொலை செய்தார்? கடத்தப்பட்ட பெண்களுக்கும் இவருக்குமான தொடர்பு என்ன? என்பதுபோன்ற விவரங்கள் தெரியவந்தால்தான் காலின்ஸ் வழக்கில் குற்றத்திற்கு உரிய தண்டனை வழங்கப்படும்.