இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இப்போது மாறிவரும் வாழ்க்கைமுறையால் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம்தலைமுறையினர் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பாலியல் குற்றங்கள், கடத்தல், கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இப்போது பள்ளி செல்லும் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பதே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதனை உறுதிசெய்யும்விதமாக, பல்வேறு சமூக ஊடக குற்றங்களும் தினசரி நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, செல்போன் வாங்குவதற்காக சொந்த வீட்டிலேயே பள்ளி சிறார்கள் பணம் மற்றும் நகைகளை திருடும் குற்றங்களில் ஈடுபடுவதை அடிக்கடி செய்திகளில் பார்க்கமுடிகிறது. அப்படியொரு சம்பவம்தான் சமீபத்தில் நடந்திருக்கிறது. தனது காதலியை ஈர்க்க, தனது வீட்டிலிருந்தே நகைகளை திருடி விற்று ஐபோன் வாங்கியுள்ளான் டெல்லியைச் சேர்ந்த ஒரு சிறுவன். அதேபோல் இன்ஸ்டாவில் அறிமுகமான காதலனுடன் ஊர் சுற்ற தாயின் நகையை திருடி விற்றுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த மற்றொரு சிறுமி. இந்த சம்பவங்களுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும், குற்றங்களின் பின்னணி குறித்தும் விரிவாக காணலாம்.

டெல்லி சிறுவன் பிடிபட்டது எப்படி?

டெல்லியிலுள்ள நஜாஃப்கர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், ஆகஸ்ட் 2ஆம் தேதி தனது வீட்டிலிருந்து இரண்டு தங்க செயின்கள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரத்தை அடையாளம் தெரியாத நபர் யாரோ திருடிச்சென்றுவிட்டதாக அடுத்த நாள் போலீஸில் புகாரளித்தார். அவருடைய புகாரின்பேரில் போலீசார் வீட்டில் சோதனையிட்டபோது அங்கு திருடர்கள் வந்துபோனதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. உடனே அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். ஆனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு யாரும் வந்துபோனதற்கான தடயம் எதுவும் இல்லாததால் போலீசாரின் சந்தேகம் வீட்டிலிருப்பவர்கள்மீது திரும்பியது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அந்த பெண்ணின் மகனான 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், நகை திருட்டுப்போனதிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என தெரியவரவே, அவனை தேடும் முயற்சியில் இறங்கினர். சிறுவன் அதே பகுதியிலிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படித்துவந்துள்ளார். அங்கு சென்று சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்ததில், அந்த சிறுவன் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை புதிதாக வாங்கியது தெரியவந்திருக்கிறது. இதனால் சிறுவனை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என நினைத்த போலீசார், அவனை தேடியபோது, தரம்புரா, கக்ரோலா மற்றும் நஜாஃப்கர் என அவன் வெவ்வேறு இடங்களுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. கடைசியாக, ஆக்ஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிறுவன் தனது வீட்டிற்கு செல்லவிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, அவனது வீட்டின் அருகிலேயே பதுங்கியிருந்தனர். போலீசார் அங்கு இருப்பதை பார்த்து சிறுவன் தப்பிக்க முயன்றுள்ளான். இருப்பினும் அவனை மடக்கிப் பிடித்த போலீசார், அவனிடம் விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் தான் திருடவில்லை என மறுத்த சிறுவன், பின்பு தான் நகையை திருடியதையும் அதற்கான காரணத்தையும் போலீசாரிடம் கூறியிருக்கிறான்.


காதலியை சர்ப்ரைஸ் செய்ய தாயின் நகைகளை திருடி ஐபோன் வாங்கிய டெல்லி பள்ளி மாணவன் கைது

சிறுவன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் கமிஷ்னர் சிங் கூறுகையில், “சிறுவன் சிறுவயதாக இருந்தபோதே உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவனது தந்தை உயிரிழந்துவிட்டார். இப்போது சிறுவனின் தாயார் அவனை கவனித்து வருவதுடன் அங்குள்ள தனியார் பள்ளியிலும் படிக்கவைத்து வருகிறார். 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனுக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாததால் சராசரி மதிப்பெண்களையே எடுத்துவந்திருக்கிறான். இந்நிலையில் சிறுவனுக்கும் அவனது வகுப்பில் படிக்கும் மற்றொரு சிறுமிக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. தனது காதலியின் பிறந்தநாளில் அவளை சர்ப்ரைஸ் செய்வதற்காக அம்மாவிடம் பணம் கேட்டிருக்கிறான் சிறுவன். ஆனால் பணம் கொடுக்க மறுத்த தாயார். ஒழுங்காக படிக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டிலிருந்து நகையை திருடிச்சென்று அதை இரண்டு பொற்கொல்லர்களிடம் விற்றும் இருக்கிறான்” என்று கூறினார். சிறுவனால் அடையாளம் காணப்பட்ட 40 வயதான கமல் வர்மா என்ற பொற்கொல்லரிடமிருந்து ஒரு தங்க மோதிரம் மற்றும் காதணியை மீட்ட போலீசார் அவரை கைதுசெய்திருக்கின்றனர். மேலும் சிறுவனையும் கைதுசெய்து இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்ஸ்டா காதலனுக்காக... - திருப்பூர் சம்பவம்

டெல்லியில் இப்போது நடந்ததை போலவே கடந்த மாதம் தமிழ்நாட்டின் திருப்பூரிலும் ஒரு சம்பவம் நடந்தது. அதில் சற்று மாறாக, காதலனுக்காக சிறுமி தனது வீட்டிலிருந்து நகையை திருடிச் சென்றிருக்கிறார். திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடுத்தடுத்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து பேசி பழகி பின்னாளில் அது காதலாக மாறியிருக்கிறது. இப்படி இருவரும் ஒருநாள் சந்தித்தபோது, அந்த சிறுமி தனக்கு விலையுயர்ந்த செல்போன் வேண்டுமென்று காதலனிடம் கேட்டிருக்கிறார்.


இன்ஸ்டா காதலனுக்கு ஐபோன் வாங்க தாயின் நகைகளை திருடி விற்ற திருப்பூர் சிறுமி

உடனே அவனும் தன்னிடம் பணமில்லை என்றும், நீ பணம் கொண்டுவந்தால் உனக்கு செல்போன் வாங்கித் தருகிறேன் என்றும் சிறுமியிடம் கூறியிருக்கிறான். தனது காதலனும் பழைய செல்போன்தான் பயன்படுத்துகிறார் என்பதால் இருவருக்குமே புது போன் வாங்கிவிடலாம் என திட்டமிட்டிருக்கின்றனர். காதலனின் பேச்சை கேட்டு, வீட்டிலிருந்து தனது தாயின் 7 சவரன் நகையை திருடிய சிறுமி, திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு காதலனை வரச்சொல்லி அதை அவனிடம் கொடுத்திருக்கிறாள். பிறகு இருவரும் சேர்ந்து நகைகளை விற்று இருவருக்கும் தலா 1 லட்சம் மதிப்புள்ள ஐபோன்களை வாங்கியிருக்கின்றனர். மீதமுள்ள பணத்தை வைத்து இருவரும் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். இதற்கிடையே வீட்டிலிருந்த நகைகள் காணாமல்போனது தெரிந்து பதறிப்போன சிறுமியின் பெற்றோர் போலீஸில் இதுகுறித்து புகாரளித்திருக்கின்றனர். மேலும் தனது மகளிடம் புது செல்போன் இருப்பதை பார்த்து அவரிடம் விசாரித்ததில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீஸில் அளித்த புகாரின்பேரில் சிறுமி அடையாளம் காட்டிய சிறுவனிடமிருந்து ஐபோனை பறிமுதல் செய்த போலீசார், ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றிய குற்றத்திற்காக சிறுவனை போக்சோ வழக்கில் கைதுசெய்தனர்.

சிறுவர்களிடையே குற்றங்கள் அதிகரிக்க என்ன காரணம்?

இதுபோன்று வெளிச்சத்திற்கு வந்த குற்றங்கள் ஒன்றிரண்டு என்றால், வெளிவராத குற்றங்கள் பல தினசரி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு டெக்னாலஜி வளர்ச்சி மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடையே செல்போன் புழக்கம் மிகவும் அதிகரித்திருக்கிறது. படிப்பிற்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கிகொடுக்கும் நிலையில் அதைவைத்து பல்வேறு தவறான விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.


சமூக ஊடக பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர். மேலும் சமூக ஊடகங்களின் வாயிலாக தொடங்கும் நட்பு மற்றும் காதலின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் சட்டமும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டாலும் ஆண்டுதோறும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டத்தைவிட, சிறப்பு சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அதில், வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களில் 50 சதவீதத்திற்கும்மேல் இளம் சிறார்களும், இளைஞர்களும் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாசார மாற்றம், பொருளாதார சிக்கல்கள் போன்றவையும் இதுபோன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் ஒரு சமூகத்தில் வளர்ச்சி ஏற்படும்போது குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கின்றன சர்வதேச ஆய்வுகள். வேலை வாய்ப்பின்மை, இளம் தலைமுறையினரிடையே அதிகரிக்கும் சமூக பொறுப்பின்மை, வாழ்க்கைமுறை மாற்றம், அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு, பணப்புழக்க குறைவு, இன்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பு போன்றவையும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Updated On 19 Aug 2024 11:37 PM IST
ராணி

ராணி

Next Story