இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

24, மார்க் ஆண்டனி போன்ற படங்களை பார்த்த பலருக்கும் டைம் மெஷின்மீது கண்டிப்பாக ஆசை வந்திருக்கும். நம் கையிலும் ஒரு டைம் மெஷின் கிடைத்தால் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றியமைக்கலாம் என பலரும் தங்களுடைய விருப்பத்தை தெரியப்படுத்தியதை சோஷியல் மீடியாக்களில் பார்க்கமுடிந்தது. இந்நிலையில் டைம் மெஷின் மீது ஆசைகொண்ட ஒரு தம்பதி அதை வைத்தே மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. எத்தனையோ வகையான நூதன மோசடிகள் மற்றும் கொள்ளைகள் குறித்து நாம் தினசரி கேள்விப்படுகிறோம். ஆனால் அவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இந்த மாடர்ன் மோசடியை அரங்கேற்றி கோடிகளை சம்பாதித்திருக்கிறது கான்பூரைச் சேர்ந்த இந்த தம்பதி. கோடிகளில் பணம் சம்பாதிக்கும் அளவிற்கு அப்படி என்ன மோசடி என்று கேட்க தோன்றுகிறதல்லவா? தெரபி சென்டர் ஒன்றை தொடங்கி, அதில் இஸ்ரேலிலிருந்து கொண்டுவந்த அரியவகை டைம் மெஷின் எனக்கூறி ஒரு மெஷினை வைத்து வயதானவர்களை இளமையாக்குவதாக சிகிச்சை அளித்து கிட்டத்தட்ட 25 பேரிடம் ரூ. 35 கோடி பணத்தை சுருட்டியிருக்கின்றனர். லட்சங்களில் பணத்தை செலவழித்தும் இளமை திரும்பாததால் சந்தேகமடைந்த சிலர் முதலில் அந்த தம்பதியிடம் இதுகுறித்து கேட்க, பல்வேறு காரணங்களை சொல்லி தப்பிக்க முயன்றனர். இதனை புரிந்துகொண்ட ஒரு மூதாட்டி உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க, அதற்குள் தலைமறைவாகிவிட்டது அந்த இளம் தம்பதி. பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பியோடிய ஜோடியை வலைவீசி தேடிவருகின்றனர் போலீசார். கான்பூரில் நடந்தது என்ன? பார்க்கலாம்.

இளமையை திருப்பும் ‘டைம் மெஷின்’

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருக்கும் கித்வை நகரில் அமைந்திருக்கிறது ரிவைவல் வேர்ல்டு என்ற தெரபி சென்டர். இதை ராஜீவ் துபே மற்றும் ராஷ்மி தம்பதியர் நிர்வகித்து வந்துள்ளனர். அங்குவரும் வாடிக்கையாளர்களை ஈர்க்க, தங்களிடம் இளமையை திரும்ப வரவைக்கும் டைம் மெஷின் இருப்பதாகக் கூறி விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக, வயதானவர்களை குறிவைத்த இவர்கள், கான்பூரில் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகுந்திருப்பதாகவும், அதனால் இளம்வயதிலேயே பலர் முதுமை தோற்றத்தை அடைந்துவிட்டதாகவும் கூறியிருக்கின்றனர். இதுபோன்றோருக்கு உதவ, இஸ்ரேலிலிருந்து டைம் மெஷின் ஒன்றை வாங்கி வந்திருப்பதாகவும், அதன்மூலம் ஆக்சிஜன் தெரபி அளித்தால் வயதான தோற்றம் மறைந்து, மிகக்குறுகிய காலத்திலேயே இளமைதோற்றத்தை அடையமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர். குறிப்பாக, 60 வயது நபர் 25 வயதுபோன்று தோற்றமளிப்பார் என்றும், சிகிச்சைக்கு ஆள் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஆசைவார்த்தைகளை கூறி விளம்பரம் செய்துள்ளனர்.


இளமைத்தோற்ற ஆசைகாட்டி கோடிகளை ஏமாற்றிய ராஜீவ் துபே - ராஷ்மி தம்பதி

இதனை நம்பிய பல வயதானவர்கள் ரிவைவல் வேர்ல்டு சென்டருக்கு ஆக்சிஜன் தெரபி சிகிச்சைக்காக சென்றிருக்கின்றனர். ஒரு செஷனுக்கு ரூ.6 ஆயிரம் எனவும், 10 செஷன்ஸ் எடுத்துக்கொண்டால்தான் முழுமையான ரிசல்ட் தெரியும் எனவும், அதற்கு ரூ. 90 ஆயிரம் ஆகும் என்றும் கூறியிருக்கின்றனர். இப்படி ரூ.90 ஆயிரம் செலவு செய்தும் ஒரு ரில்சட்டும் தெரியாததால் சந்தேகமடைந்த சிலர் இதுகுறித்து ராஷ்மி மற்றும் ராஜீவிடம் கேட்க, மழுப்பலாக பதில் சொல்லி தப்பித்து வந்துள்ளனர். ஒருசிலர் இலவச செஷனுக்கு ஆசைப்பட்டு தங்களுக்கு தெரிந்தவர்களை இங்கு கூட்டியும் வந்துள்ளனர். அங்கு சிகிச்சைபெற்ற ரேணு சிங் என்ற பெண் ஒரு கட்டத்தில் இது ஏமாற்றுவேலை என்பதை புரிந்துகொண்டு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்க, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

லட்சங்களை ஏமாந்த முதியோர்

ரிவைவல் வேர்ல்டு சென்டரில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. புகாரளித்த ரேணு சிங் என்ற பெண் தான் ஏமாற்றப்பட்டது பற்றி கூறுகையில், இந்த சிகிச்சைக்கு தான் ரூ. 10.75 லட்சம் செலவழித்ததாகவும், ஆனாலும் இதுவரை தனது முதுமைத் தோற்றம் மாறவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு தெரிந்தவர்களையும் இங்கு கூட்டிவந்து அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஏசிபி அஞ்சலி விஸ்வகர்மா கூறுகையில், “இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறிய டைம் மெஷினில் சிகிச்சைபெற ரூ.90,000 வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதில் பிரமிடு முறை சலுகைகளையும் அறிவித்திருக்கின்றனர். அதாவது, அங்கு சிகிச்சைபெறுபவர் ஒருவரை கூட்டிவந்து அறிமுகப்படுத்தினால், அவருக்கு ஒரு செஷன் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். இப்படி தொடர் சங்கிலிமுறையில் பலர் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், கிட்டத்தட்ட 25 பேர் ஏமாற்றப்பட்டிருப்பது இதுவரை தெரியவந்திருக்கிறது. அவர்களிடமிருந்து சுமார் ரூ. 35 கோடியை சுருட்டிய அந்த தம்பதி தலைமறைவாகிவிட்டனர்.


ரிவைவல் வேர்ல்டு தெரபி சென்டருக்கு சென்று ஏமாந்தவர்கள்

மேலும் பலர் இந்த சிகிச்சைமுறையின் பேரில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தலைமறைவாகியிருக்கும் ராஷ்மி - ராஜீவ் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் விமான நிலையங்களில் தேடும்பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலர் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறுவதால் தொடர்ந்து அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ஏமாற்றி எடுத்துச்சென்ற பணத்தை மீட்டு விரைவில் முதியவர்களுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

பண மோசடி குற்றங்கள் அதிகரிப்பு

நவீன தொழில்நுட்பங்கள், போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற பல வழிகளில் மோசடிகள் மற்றும் கொள்ளைகள் நடைபெறுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், கான்பூரில் நடந்திருக்கும் இந்த மோசடி இதுவரை யாரும் கேட்டிராதது. திட்டமிட்டு சதி வேலையில் ஈடுபடுதல், பண மோசடி மற்றும் ஏமாற்றி பணம் பறித்தல் போன்ற குற்றங்களுக்காக ராஜீவ் - ராஷ்மி தம்பதிக்கு சட்டப்படி தண்டனை அளிக்கப்படும். இந்தியாவில் செல்போன் மற்றும் இணையப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதன்மூலம் நடக்கும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், பண மோசடி தடுப்புச் சட்டம், சைபர் சட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டு, தண்டனையும் கடுமையாக்கப்பட்டன. குறிப்பாக, பல்வேறு முறைகளில் பண மோசடிகள் நடைபெறுவதை தடுக்க, 2002ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது பண மோசடி தடுப்பு சட்டம். இது 2005 முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் 2009 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்டது. இதன்மூலம் ஏமாற்றி பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவரிடம் அளிக்கப்படும்.


பண மோசடி தடுப்பு சட்டம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை

பண மோசடிகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் புதிய யுக்திகளை பயன்படுத்துகின்றனர் என்றும், குறிப்பாக, போலி சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வதை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் என்றும், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் தாமதிக்காமல், உடனடியாக காவல்நிலையத்துக்குச் சென்று வழக்குப்பதிவு செய்யலாம் அல்லது சம்பந்தப்பட்ட துறை / நிறுவனத்தின் தலைமையிடம் புகாரளிக்கலாம் என்றும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பணத்தை இழந்திருந்தால் உடனடியாக UPI, SMS, இமெயில் போன்ற அந்த கணக்கு குறித்த விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து காவல்நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகாரளிக்க அறிவுறுத்தப்படுகிறது. கான்பூர் வழக்கில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெற, ராஜீவ் - ராஷ்மி தம்பதியர் பயன்படுத்திய UPI அல்லது வங்கிக்கணக்கு விவரங்களை பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு தெரிவிப்பதன்மூலம் அவர்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைக்கலாம். மேலும் குற்றவாளிகளை கண்டறிந்து விசாரணை நடத்தினால் மட்டுமே, எவ்வளவு தொகை ஏமாற்றப்பட்டிருக்கிறது? வேறு யாரேனும் இவர்களுக்கு உதவியுள்ளனரா? இந்த வழக்கில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும்.

Updated On 14 Oct 2024 4:25 PM GMT
ராணி

ராணி

Next Story