இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் சம்பவங்களில் ஒன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு. சென்னை பெரம்பூரில், காவல் நிலையத்திற்கு அருகிலிருக்கும் அவருடைய கட்டுமான வீட்டின் வாசலிலேயே வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். வட சென்னை பகுதியில் மட்டுமே பிரபலமாக அறியப்பட்ட ஆம்ஸ்ட்ராங், மரணத்திற்கு பிறகு இந்தியா முழுக்க பரவலாக பேசப்பட்டு வருகிறார். ஒருபுறம் அவரை நல்ல தலைவர் என்றும், மக்களுக்கு உதவுபவர் என்றும் ஒருசாரார் கூறினாலும், மற்றொருசாரார் அவரை சமூக விரோதி என்றும், இதற்கு முன்பு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த கொலையில் ஈடுபட்டதாகக் கூறி இரவோடு இரவாக 8 பேரை கைதுசெய்தது காவல்துறை. அத்துடன் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரையும் இடமாற்றம் செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரின் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த கொலைக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக அரசியல்வாதிகள் முதல் திரை பிரபலங்கள்வரை கடுமையாக விவாதித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சொல்லப்படும் காரணங்கள் என்னென்ன? அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது? இது குறித்து அரசியல் வல்லுநர்களின் கருத்து என்ன? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக விவாதிக்கலாம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை - முழு விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்துவந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான இவர், தனது பழைய வீட்டை இடித்துவிட்டு அதே பகுதியில் ஒரு புதிய வீட்டை கட்டி வந்துள்ளார். தினமும் மாலை, வீடு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் ஆம்ஸ்ட்ராங். அதேபோல் ஜூலை 5ஆம் தேதி மாலை அந்த இடத்திற்குச் சென்றுவிட்டு சுமார் 7 மணியளவில் அங்கு நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த சிலர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் அதை தடுக்கச் சென்ற இரண்டு பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையிலிருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில் போலீசார் விரைந்துசென்று விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.


வெட்டி கொலை செய்யப்பட்ட பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்

இதற்கிடையே அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் இரவோடு இரவாக குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி 8 பேரை கைதுசெய்தனர். அதற்குள் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. ஜூலை 6ஆம் தேதி மாலை உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவரது உடல் பெரம்பூரிலிருக்கும் பள்ளி மைதானம் ஒன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கட்சி அலுவலகம் குடியிருப்பு பகுதிக்கு நடுவே இருப்பதாகக் கூறி, அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து பெரம்பூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலிருக்கும் பொத்தூருக்கு, 8 மணி நேரத்திற்கும் மேலாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல், அவர் பின்பற்றிய பௌத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், அரசுமீது குற்றச்சாட்டுகளும் எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, வடசென்னைவாசிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு எதிராக பேசிவருகின்றனர். இத்தனை ஆதரவு ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் ஆம்ஸ்ட்ராங் குறித்து தவறான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ‘கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்று சமூக ஊடகங்களில் கடுமையாக சாடிவருகின்றனர்.


மனைவி மற்றும் குழந்தையுடன் ஆம்ஸ்ட்ராங்

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஆம்ஸ்ட்ராங். இந்த பெயர் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரபலம். பகுஜன் சமாஜ் பார்ட்டி என்ற தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பதவிவகித்து வந்தார். இந்த கட்சியில் சேர்வதற்கு முன்பே, வடசென்னை பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதிலும், குறிப்பாக இளைஞர்களை படிக்கவைப்பதிலும் ஆர்வம்காட்டி வந்துள்ளார். குத்துச்சண்டை வீரரான இவர், தன்னுடைய இளமைகாலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய பூவை மூர்த்தியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தானும் அதே அடிச்சுவடுகளை பின்பற்றினார். பூவை மூர்த்தியாரின் இறப்புக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து விலகி ‘அம்பேத்கர் தலித் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கி நடத்திவந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் வழிகாட்டுதலின்பேரில் வடசென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் உருவாகியிருக்கின்றனர். அதனாலேயே வடசென்னை வாசிகளுக்கு விருப்பமான ஒரு நபராக திகழ்ந்தார்.

முதலில் ஒரு வார்டு கவுன்சிலராக அரசியலில் தலைகாட்டிய இவர், பின்னர் 2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அக்கட்சியின் தேசிய தலைவரான மாயாவதியை தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து மிகப்பெரிய மாநாடு ஒன்றை சிறப்பாக நடத்தியதற்கு பெரிதும் பாராட்டப்பட்டார். இப்படி 17 ஆண்டுகள் தொடர்ந்து மாநில தலைவர் பொறுப்பில் இருந்துவந்தார். இப்படி ஒருபுறம் மக்கள் இவரை புகழ்ந்தாலும், மற்றொரு புறம் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபராக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, 2008ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கிடையே சாதி கலவரத்தை தூண்டிவிட்டதாக இவர்பேரில் பல புகார்கள் எழுந்தன. அந்த கலவரம் தொடர்பாக இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஒரேநாளில் ஜாமின் பெற்று சிறையிலிருந்து வெளிவந்தார். பிறகு 2016ஆம் ஆண்டு அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே உழைத்துவந்ததாகக் கூறப்படும் இவர், கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். 52 வயதான இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.


பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் - ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள்

கொலைக்கு காரணம் என்ன? - அரசின் நடவடிக்கை என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு. தனது அண்ணனின் இறப்புக்கு காரணமாக இருந்ததால்தான், அவரின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை, திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த முன்னாள் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறினார். மேலும் குற்றவாளிகள் வந்த வாகனங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரித்து வருவதாகவும், இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை பயன்படுத்தி, கொலை நடந்த 3 மணிநேரத்துக்குள் 8 பேரை கைதுசெய்ததாகவும் தெரிவித்தார். மேலும் சென்னையை கலக்கிய பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் இறப்புக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இதனையடுத்து, சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண், புதிய கமிஷ்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் எதிரொலியாகத்தான் சந்தீப் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த பிஎஸ்பி தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக கூறியதுடன், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தினார். மேலும் திமுகவுடன் கூட்டணியிலிருக்கும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவனும், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் கிடையாது என்று கூறியதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சித்தார். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, கொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என ரத்தோர் கூறியதும், அவருடைய இடமாற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் புதிய கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள அருண்

புதிய கமிஷ்னரின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

புதிய கமிஷ்னராக பதவியேற்ற அருண், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், “சென்னை மாநகரம் எனக்கு புதிதல்ல; சென்னையிலிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது, காவல்துறையில் நடக்கும் கட்டபஞ்சாயத்து, குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது முன்னுரிமையாக இருக்கும்” என்றார். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக கூறப்படுவது பற்றி கேட்டபோது, அதுபற்றி முழு விவரங்களையும் சேகரித்து, பாதுகாப்பு அளிக்காத காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது குறித்து கேட்டபோது, முதலில் குற்றம் நடப்பதை தடுக்கவேண்டும், அடுத்து நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவேண்டும், அடுத்து ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லிகொடுக்கவேண்டும் என்று கூறினார். இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய கொலைகளும், வலுக்கும் எதிர்ப்புகளும்

ஏற்கனவே கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அரசியல் தலைவர்கள் சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த மே 2ஆம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் என்பவர் காணாமல் போனதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. அடுத்த இரண்டே நாட்களில் அவருடைய தோட்டத்தில் வைத்தே கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அங்கு சில பெயர்கள் எழுதப்பட்ட குறிப்புகளும் கிடைத்தன. 10 தனிப்படைகள் அமைத்து இந்த கொலை குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட போதிலும் இதுவரை குற்றவாளிகள் யார் என்பது கண்டறியப்படவில்லை. தற்போது சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.


ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் - ஆம்ஸ்ட்ராங் மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அடுத்து மே 20ஆம் தேதி, திருநெல்வேலியில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா என்பவர் ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது அங்குவந்த மர்ம நபர்களால் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜூலை 3ஆம் தேதி சேலத்தில் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி முன்னாள் தலைவருமான சண்முகம் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பலால் தாக்கி கொலைசெய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய கொலைக்கு திருமாவளவன், சீமான், வாசன், அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஆளும் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆருத்ரா மோசடி விவகாரத்தால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் ஏன் விசாரிக்கவில்லை? என இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியதையடுத்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என அரசு உறுதியளித்திருக்கிறது. மேலும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து உறுதியளித்திருக்கிறார். இதனால் இந்த வழக்கில் அடுத்தடுத்த பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 22 July 2024 5:15 PM GMT
ராணி

ராணி

Next Story