இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆண்கள் காதலித்துவிட்டு திருமணம் செய்யாமல் பல பெண்களை ஏமாற்றிய சம்பவங்கள் குறித்தும், அந்த குற்றாவளிகளின் மீது காவல்துறையினர் எடுத்த சட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதற்கு எதிர்மாறாக 50-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு காதல் வலை வீசி அதில் பலரை திருமணமும் செய்துகொண்டு, இரண்டு மூன்று மாதங்களில் அவர்களிடமிருந்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன பெண் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ‘கல்யாண ராணி’ என அழைக்கப்படும் சத்யா என்ற பெண், எத்தனை பேரை எப்படி ஏமாற்றினார்? ஏன் ஏமாற்றினார்? இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? என்பது குறித்தெல்லாம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

நம்பி ஏமாந்த அரவிந்த்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருக்கும் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் விதை விற்பனை நிலையம் வைத்து நடத்திவருபவர் மகேஷ் அரவிந்த். இவருக்கு 30 வயதுக்கு மேலாகியும் திருமணத்திற்கு சரியான வரன் கிடைக்காததால் இடைத்தரகர்களை வைத்தும், மேட்ரிமோனியலில் பதிவுசெய்தும் பெண் தேடிவந்துள்ளனர். இந்நிலையில்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆன்லைன் செயலிமூலம் சத்யா என்பவரின் அறிமுகம் அரவிந்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த சத்யா ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகிலிருக்கும் ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்த இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. இதற்கிடையே தனது உறவினர் எனக்கூறி தமிழ்ச்செல்வி என்பவரை அரவிந்துக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் சத்யா. மேலும் அவர்தான் தனக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறார் எனவும் கூறியிருக்கிறார். இடையிடையே தமிழ்ச்செல்வியும், சத்யாவும் சேர்ந்து அரவிந்திடம் பணம் கேட்டிருக்கின்றனர். அவரும், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்தானே கேட்கிறார் என நம்பி கேட்ட பணத்தை கொடுத்திருக்கிறார். இந்நிலையில்தான் சத்யாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவசரமாக தனக்கு திருமண ஏற்பாடு செய்துவருவதாகவும், எனவே உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் அரவிந்தை வற்புறுத்தியிருக்கிறார் சத்யா. அதை ஏற்றுக்கொண்ட அரவிந்தும் தமிழ்ச்செல்வி தலைமையில், பழனி செல்லும் வழியிலிருக்கும் தொப்பம்பட்டி என்ற பகுதியில் அமைந்திருக்கும் வீரமாட்சி அம்மன் கோயிலில் வைத்து கடந்த ஜூன் மாதம் சத்யாவை திருமணம் முடித்திருக்கிறார்.


பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய குற்றவழக்கில் சிக்கிய சத்யா

திருமணத்திற்கு பிறகு சத்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அரவிந்த். அவரது பெற்றோரும் உறவினர்களும் அந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல், சத்யாவை ஏற்றுக்கொண்டதுடன், அவருக்கு தாலிச்செயின் உட்பட 12 பவுன் நகையையும் போட்டிருக்கின்றனர். இப்படி ஒருவழியாக திருமணம் முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் வாழ்க்கையைத் தொடங்கிய அரவிந்துக்கு கொஞ்ச நாட்களிலேயே தனது மனைவியின் நடத்தையில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அடிக்கடி தனியாக போன் பேசுவதை கவனித்த அரவிந்த் அதுகுறித்து கேட்கவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே திருமணத்தை பதிவுசெய்ய சத்யாவின் ஆதார் கார்டை கேட்டிருக்கிறார் அரவிந்த். அதில் சத்யா சொன்னதைப்போல் அவருக்கு 30 வயது இல்லை எனவும், ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் அவருக்கு திருமணமாகி இருந்ததும் அரவிந்துக்கு தெரியவந்திருக்கிறது. மேலும் சத்யாவின் செல்போனை ஆராய்ந்ததில், அதில் பல ஆண்களுடன் சத்யா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார். இதுகுறித்து அரவிந்த் சத்யாவிடம் கேட்க, அரவிந்தையும் அவர் குடும்பத்தையும் சத்யா மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன அவர், சத்யாவை சமாதானம் செய்துவதுபோல் பேசி, உடனடியாக தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தான் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை தெரிந்துகொண்ட சத்யா, விசாரணையின்போதே அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், சத்யா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து தன்னிடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் 12 சவரன் நகையை மோசடி செய்ததாகவும், இதுபோல் பலரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தன்னைபோல் கிட்டத்தட்ட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாகவும் அரவிந்த் குறிப்பிட்டிருந்தார். அதுபோக மேலும் ஏராளமான ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.


அரவிந்தை திருமணம் செய்துகொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

அரவிந்தின் புகாரின்பேரில் விசாரணையை முடுக்கிய காவல்துறை, தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கீதா தலைமையில் தனிப்படை அமைத்து சத்யாவை தீவிரமாக தேடிவந்தனர். அவருடைய செல்போன் சிக்னலை கண்காணித்ததில் அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. ஜூலை 14ஆம் தேதி அங்குசென்ற தனிப்படை போலீசார் சத்யாவின் தோழியின் வீட்டில் வைத்து மடக்கி கைது செய்தனர். தாராபுரம் அழைத்துவந்து சத்யாவிடம் விசாரணை நடத்தியதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, அடுத்து கரூரைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் கார்த்திக் என்பவரையும் அதேபோல் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். பின்பு அவரையும் ஏமாற்றிவிட்டு, அடுத்து மாடு வியாபாரி ஒருவரின் மகனை ஏமாற்றி பணம் பறித்திருக்கிறார். தொடர்ந்து 2012ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டு அவருடன் ஒரு பெண் குழந்தையையும் பெற்றிருக்கிறார். இப்படி தொடர்ந்து பல ஆண்களை ஏமாற்றிவந்த சத்யா கடைசியாக தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்திடம் தனது கைவரிசையை காட்டபோய் வசமாக மாட்டிக்கொண்டார்.


போலீசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு சத்யா அழைத்துச் செல்லப்பட்டபோது

அதிர்ச்சியளித்த சத்யாவின் வாக்குமூலம்

சத்யா பல ஆண்டுகளாக ஆண்களை ஏமாற்றுவதைத்தான் தனது தொழிலாகவே வைத்திருந்திருக்கிறார். முதலில் மேட்ரிமோனியலில் பதிவு செய்திருக்கும் எண்ணுக்கு தொடர்புகொள்ளும் ஆண்களிடம் பேச ஆரம்பித்ததும், சிறிது நாட்களிலேயே அவர்களை தனியாக சந்திப்பதையும், அவர்களுடன் உல்லாசமாக இருப்பதையும், அதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். பிறகு தான் எடுத்த வீடியோவையே ஆயுதமாக பயன்படுத்தி, மிரட்டி பணம், நகை போன்றவற்றை பறித்திருக்கிறார். இதனால் பயந்துபோன பலரும் ரூ. 10,000, ரூ. 20,000 என வீட்டிற்கு தெரியாமல் பணம் கொடுத்திருக்கின்றனர். சத்யாவின் கைதிற்கு பிறகு, அவரால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஆண்கள் தாராபுரம் போலீஸுக்கு ஆன்லைன்மூலம் புகாரளித்திருக்கின்றனர். அந்த புகார்களில் சத்யா மீது நடவடிக்கை எடுக்குமாறும், தங்களுடைய பணம் மற்றும் நகையை மீட்டுத்தருமாறும் கோரிக்கையும் விடுத்திருக்கின்றனர். புகார்களின் அடிப்படையில் விசாரணையை முடுக்கியிருக்கும் போலீசார், சத்யாமீது, ஏமாற்றி பணம் பறித்தல், கொலை முயற்சி, திருமணமானதை மறைத்து பல திருமணங்களை செய்தல், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். மேலும் அவருடைய செல்போனில் ஆபாச காட்சிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இந்த குற்றத்திற்கு துணைபோன தமிழ்ச்செல்வி தற்போது தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அவரையும் கைதுசெய்து விசாரித்தால் இந்த சம்பவம் குறித்து இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாமல் இருந்த தனது பேரனுக்கு இப்படியொரு பெண்ணுடன் திருமணம் ஆனதை தாங்கிக்கொள்ள முடியாத அரவிந்தின் 85 வயது தாத்தா, அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து புலம்பி அழுதுவந்ததாகவும், துக்கம் தாங்காமல் 15 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்துவந்த சத்யாவை போலீசார், தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On 29 July 2024 11:43 PM IST
ராணி

ராணி

Next Story