இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை நாளுக்குநாள் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது. சாமானியர்களால் இனிமேல் ஒரு கிராம் தங்க நகையைக்கூட வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கோடிக்கணக்கு மதிப்பிலான தங்கநகை சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரு நகைக்கடையில் நகை வாங்குவதை போன்று புகுந்த மர்ம கும்பல் ஒன்று ரூ. 1.50 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கு நடந்தது இந்த கொள்ளை? பட்டப்பகலில் இந்த சம்பவம் அரங்கேறியது எப்படி? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

கொள்ளை சம்பவம் அரங்கேறியது எப்படி?

சென்னையை அடுத்த ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் உள்ள எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். 33 வயதான இவர் தனது வீட்டின் கீழ்த்தளத்திலேயே கடந்த 4 ஆண்டுகளாக ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதன்பக்கத்திலேயே ‘ரேகா’ என்ற பெயரில் அடகுக்கடை ஒன்றையும் வைத்திருக்கிறார். கடந்த 15ஆம் தேதி காலை வழக்கம் போல் தனது நகைக்கடையை திறந்து வைத்திருந்தார் பிரகாஷ். மதியம் 12 மணியளவில் ‘மாருதி ஸ்விப்ட்’ காரில் 4 பேர் வந்து இறங்கியுள்ளனர். கடையில் நகை வாங்குவதைப்போல உள்ளே வந்து பிரகாஷிடம் பேச்சு கொடுத்ததும், அவரும் நம்பி அவர்களிடம் பேசியிருக்கிறார். திடீரென நகைக்கடை ஷட்டரை மூடிய அக்கும்பல், துப்பாக்கியை காட்டி பிரகாஷை மிரட்டியிருக்கிறது. மேலும் பிரகாஷின் கைகளை ஒருவர் பிடித்துக்கொள்ள மற்ற மூன்று பேர் லாக்கர் அறைக்கு கூட்டி போகுமாறு அடித்து மிரட்டியதுடன், சாவியை வாங்கி லாக்கரை திறந்து தாங்கள் கொண்டுவந்த பையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐபோன் ஆகியவற்றை எடுத்துச்சென்றனர். செல்லும்போது பிரகாஷின் வாயில் துணியை வைத்து அடைத்து கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு தாங்கள் வந்த காரில் ஓட்டுநர் தயாராக இருக்க மற்ற நான்கு பேரும் அதில் ஏறி அங்கிருந்து பறந்து சென்றுவிட்டனர்.


ஆவடியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் திருட்டுப்போன கிருஷ்ணா ஜுவல்லரி

களவு போன நகைகள் யாருடையது?

நகைக்கடையின் ஷட்டர் அரைகுறையாக மூடியிருப்பதை பார்த்த பிரகாஷின் உறவினர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பிரகாஷ் கட்டப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். உறவினரால் மீட்கப்பட்ட பிரகாஷ், ஆவடி முத்தா புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். முதலில் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் காரில் வந்த மர்ம நபர்கள் வட இந்தியர்கள் என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்துசென்ற காரின் எண்ணும் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதை வைத்து கொள்ளைக்காரர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர் போலீசார். நகைகள் மற்றும் பணத்தை பறிகொடுத்த பிரகாஷிடம் நடத்திய விசாரணையில், புதிய நகைகள் மற்றும் 140 பேரின் அடகுவைத்த நகைகள் பறிபோயுள்ளதாகத் தெரிகிறது.


நகை கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள்

சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கொள்ளை சம்பவம் அரங்கேறிய நகைக்கடையில் ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், நகைக்கடையின் உள்ளே 4 பேர் சென்றிருந்தாலும் காரை ஓட்டிவந்த நபர் உட்பட மொத்தம் 5 பேர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் யாரும் முகமூடி அல்லது மாஸ்க் அணியாமல் வந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் அடகு நகைகளும் இருந்ததால் அவை குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை எனவும், மர்ம நபர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் கூறியிருக்கிறார். இந்நிலையில் தனிப்படைகள் ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. அதில் துப்பாக்கி முனையில் பிரகாஷை மிரட்டி லாக்கர் ரூமுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.


ஆவடி நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள்

தமிழகத்தை குறிவைக்கும் வடமாநில கொள்ளையர்கள்?

இந்தியாவை பொருத்தவரை கொல்கத்தா, கோவை, மும்பை போன்ற இடங்கள்தான் தங்க நகைகளின் மொத்த வியாபார முக்கிய சந்தைகளாக செயல்படுகின்றன. இங்கிருந்துதான் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு பெரும்பாலான நகைகள் விநியோகமாகின்றன. மொத்த வியாபாரிகள் இதுபோன்று நகைகளை எடுத்து செல்லும்போது கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகளவில் நடக்கிறது. குறிப்பாக பேருந்து பயணங்களில் வியாபாரிகள் நகைகளை கொண்டுசெல்லும்போது பெட்டிகள் மற்றும் தோல்பைகளை அறுத்து நகைகள் திருடப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுபோன்று நடக்கும் கொள்ளைகளில் அதிகம் ஈடுபடுபவர்கள் வட இந்தியர்கள்தான் என்கின்றனர். அதிலும் குறிப்பாக, உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிகர், மீரட், பரேலி, அம்ஹோரா, புலந்த் ஷெஹர் மற்றும் பிஜ்னோர் பகுதிகளைச் சேர்ந்த கொள்ளையர்கள் தமிழகத்தில் அதிகளவில் நடமாடுவதாகவும், அவர்கள் இங்கிருந்து நகைகளை கொள்ளையடித்து வட இந்தியாவுக்கு கொண்டுசெல்வதாகவும் போலீசார் தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.


ஆவடி நகைக்கடை கொள்ளை குறித்து கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது

2019ஆம் ஆண்டு தரவுப்படி, அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் சுமார் 150 கிலோ தங்க நகைகளை வட இந்திய கொள்ளையர்களிடமிருந்து தமிழக போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைதும் செய்திருக்கின்றனர். அதன்பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கொள்ளையானது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, நகைக்கடைகளில் நடக்கும் கொள்ளையானது மிகவும் அதிகளவில் நடைபெறுகிறது. நகைக்கடை சுவரை ஓட்டைபோட்டு நகைகளை திருடுதல், நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை கத்தி அல்லது துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்தல் போன்றவை மிகவும் அதிகமாகவே நடைபெறுகின்றன. பெரிய அளவிலான கொள்ளை சம்பவங்கள் மட்டுமே வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில் சிறுசிறு கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வராமலே போய்விடுகின்றன. நகைக்கடைகளை தவிர, வீடுபுகுந்து நகைகளை திருடும் திருட்டு எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. இதுதவிர வழிப்பறி, வீட்டின் முன்பு அமர்ந்திருக்கும் பெண்களிடமிருந்து நகைகளை பறிப்பது போன்ற கொள்ளை சம்பவங்களும் தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதாக சொல்லப்படுகிறது.

கொள்ளையர்களை நெருங்கிவிட்டோம் - காவல்துறை

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாகவும், வெகு விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On 29 April 2024 11:50 PM IST
ராணி

ராணி

Next Story