இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த சில நாட்களாகவே நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் கொடூர கொலை. ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை நடந்த இந்த சம்பவத்தை ஒரு சாதாரண செய்தியாக்க பார்த்த நிலையில், அங்கிருந்த மாணவர்கள் ஒன்றுதிரண்டு குற்றத்தை வெளிக்கொண்டு வந்தனர். அதன்பிறகுதான் நாடு முழுவதுமிருந்து இந்த கொடூர சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துவருகின்றன. குற்றவாளி கைது, வெடித்த வன்முறை, களத்தில் இறங்கிய மருத்துவர்கள் என போராட்டம் பெரிதாகியுள்ளது. மேலும் மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த அறிக்கையானது 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட நிர்பயா வழக்கை மீண்டும் நம் கண்முன் கொண்டுவந்திருக்கிறது. இதனிடையே வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அன்று அதிகாலை நடந்தது என்ன? ஒருவரை மட்டுமே குற்றவாளி என கைது செய்திருக்கும் நிலையில் பிரேத பரிசோதனையில் வெளியாகி இருக்கும் தகவல்கள் அதற்கு முரணாக இருப்பது ஏன்? இந்த கொலைக்கு பின்னாலிருக்கும் நபர்களை சிபிஐ கண்டறிந்து கைது செய்யுமா? இந்த வழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நிலைப்பாடு என்ன? என்பதுபோன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை நடந்தது என்ன?

மேற்குவங்க மாநிலத்தில் பெயர் சொல்லும் மருத்துவமனைகளில் ஒன்று கொல்கத்தாவிலிருக்கும் ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை. ஆக்ஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் கல்லூரியில் மூன்றாவது தளத்திலிருக்கும் செமினார் ஹாலில் ஒரு மாணவியின் இறந்த சடலத்தை கண்டறிந்துள்ளனர். அதில் கண்கள், வாய், அந்தரங்க உறுப்புகளிலிருந்து ரத்தம் வழிந்ததுடன், கழுத்து, இடது கால், வலது கை மற்றும் உதட்டில் ஆழமான காயங்கள் இருந்தன. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு விரைந்துவந்த போலீசார் சடலத்தின் அருகில் கிடந்த ப்ளூடூத் ஒன்றை கைப்பற்றினர். குற்றவாளியை கண்டுபிடிக்க 7 பேர்கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சிசிடிவியை ஆராய்ந்தபோது அதிகாலை 3 மணியளவில் அந்த செமினார் ஹாலுக்கு ப்ளூடூத் அணிந்த ஒரு நபர் நுழைவதும் பின்பு 5 மணியளவில் வெளியே செல்லும்போது கழுத்தில் ப்ளூடூத் இல்லாததும் அந்த சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றிருந்தன. அதை வைத்து அந்த நபர் யார் என விசாரித்ததில், மருத்துவ கல்லூரி அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் பணிபுரியும் 33 வயதான தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவன் என தெரியவரவே, அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவனை பரிசோதித்ததில் அவனுடைய செல்போனுடன் ப்ளூடூத் இணைக்கப்பட்டிருந்ததை கண்டு அவன்தான் குற்றவாளி என்பதை உறுதிசெய்தனர். மேலும் கொலை சம்பவத்தை தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற சஞ்சய், ரத்தக்கறை படிந்த தனது துணிகளை துவைத்து தடயங்களை அழிக்க முற்பட்டும், ஷூவில் படிந்திருந்த ரத்தக் கறைகளை அகற்ற மறந்துவிட்டான். அந்த ரத்தத்தில் இருந்த மாதிரிகளை பரிசோதித்த காவல்துறை, அது இறந்த பெண்ணின் ரத்தமாதிரியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்து அவனை குற்றம் நடந்த 6 மணிநேரத்துக்குள் கைதுசெய்தனர்.


கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை - மருத்துவரை கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய்

இதற்கிடையே அந்த மாணவி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்றுவந்த 31 வயதான பயிற்சி மருத்துவர் என்பதும், இரவு பணியில் ஈடுபட்டிருந்ததால் தோழிகளுடன் செமினார் ஹாலில் அமர்ந்து டின்னர் சாப்பிட்டுவிட்டு, தோழிகள் அங்கிருந்து சென்றுவிட அந்த மாணவி மட்டும் சற்று ஓய்வெடுப்பதற்காக அங்கேயே படுத்து உறங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவி நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் போதையுடன் உள்ளே நுழைந்த சஞ்சய், மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன் அவரை கொலையும் செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்குள்ள பயிற்சி மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்புமிக்க, அதுவும் காவல் நிலையம் எதிரிலேயே அமைந்திருக்கும் மருத்துவமனைக்குள் ஒரு நபர் எப்படி நுழைந்து இப்படிப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும்? அதுவரை கல்லூரி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? என்பதுபோன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்கள் தரப்பில் எழுப்பப்பட்டன. இதற்கிடையே, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் அதிகரித்த நிலையில், ஒரு வாரத்திற்குள் விசாரணை முடியாவிட்டால் 17ஆம் தேதிக்குள் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் எனக்கூறிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பயிற்சி மருத்துவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை போராட்டம் தொடரும் என மருத்துவ மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


கொலைசெய்யப்பட்ட மருத்துவர் மற்றும் கொலைகாரன் என கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி

யார் இந்த சஞ்சய் ராய்?

கைதுசெய்யப்பட்ட குற்றவாளியான சஞ்சய் ராய் அங்குள்ள காவல்நிலையத்தில் 2019ஆம் ஆண்டிலிருந்து தன்னார்வலராக பணிபுரிந்து வந்துள்ளான். அதனால் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு நன்கு பரிச்சயமான நபராகவும் இருந்திருக்கிறான். சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு முன்புதான் காவல்துறையால் நடத்தப்பட்ட கேம்பிற்கு சென்று வந்துள்ளான். மேலும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இவனுக்கு தங்கும் அறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் எந்தவித தடையுமின்றி சென்றுவந்திருக்கிறான். இவன் குறித்து மேலும் நடைபெற்ற விசாரணையில், திருமணமாகி மனைவியை பிரிந்துவாழும் சஞ்சய், மருத்துவமனைக்கு வருபவர்களிடம், தான் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தல், பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களிடமிருந்து பணம் வசூலித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்திருக்கிறது. 2022-ல் தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதால்தான் அந்த பெண் சஞ்சயைவிட்டு பிரிந்துசென்றதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சஞ்சய் பயன்படுத்திவந்த போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவனது செல்போனில் நிறைய ஆபாசப் படங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இவன் மருத்துவ மாணவியை எப்படி கொலை செய்தான் என விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருக்கின்றன.


குற்றவாளியிடம் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணை

ஷாக் கொடுத்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்!

முதலில் தற்கொலை என கூறப்பட்ட பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாகக் கூறி பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இதை விசாரித்த மேற்குவங்க உயர் நீதிமன்றம், மருத்துவர் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில்தான் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையானது வெளியாகி நாட்டையே உறைய வைத்திருக்கிறது. இறந்த மாணவியின் முகத்தில் காயம், மாணவி அணிந்திருந்த கண்ணாடி உடைந்து கண்களில் குத்தி ரத்தம் வழிந்திருப்பது, முகம் முதல் உடலின் பல்வேறு பகுதிகளில் நகக் கீறல்கள், அந்தரங்க உறுப்பில் ரத்தக்கசிவு, கழுத்திலிருக்கும் தைராய்டு எலும்பு உடைந்திருப்பது, மேலும் கழுத்தில் கடிக்கப்பட்ட அடையாளம், உதடு, வயிறு, வலது கை மற்றும் விரல்களில் ஆழமான காயங்கள், கால் எலும்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவு போன்றவை கண்டறியப்பட்டன. அத்துடன் கடைசி நிமிடம்வரை அந்த பெண் போராடியதில், சத்தம் போடாமல் இருக்க, வாய் மற்றும் தொண்டையை அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக அப்பெண்ணின் அந்தரங்க உறுப்பிலிருந்து 150 மி.கி அளவிலான விந்தணுக்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. சாதாரணமாக ஒரு ஆணிடமிருந்து ஒரே நேரத்தில் 15 மி.கி விந்தணுக்கள் மட்டுமே வெளியேறும் என்ற நிலையில், 150 மி.கி என்பது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும், அதனால் இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 9 பேர்வரை ஈடுபட்டிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் தரப்பில் ஊகிக்கப்பட்டிருக்கிறது.


குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாணவிகள் போராட்டம்

வெடித்த வன்முறை

பயிற்சி மருத்துவரின் கொடூர கொலையை கண்டித்து ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்பு மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில், கலவரக்காரர்கள் அந்த பகுதிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதுடன், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தையும் அடித்து நொறுக்கியதாகக் கூறப்பட்டது. இது தடயங்களை அழிப்பதற்காக ஆளும் கட்சியின் செயல் என எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இதனை மறுத்த கொல்கத்தா காவல்துறை, மாணவி கொல்லப்பட்ட செமினார் ஹால் பாதுகாப்பாகவும், கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இதனிடையே 16ஆம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பொதுவாக தான் தூக்கு தண்டனைக்கு எதிரானவள் என்றும், ஆனால் இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பேசினார். மேற்குவங்கத்தின் மருத்துவத்துறை மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவருக்கு எதிரான கண்டனங்கள் வலுத்துவருகின்றன. இச்சம்பவத்தால் மேற்குவங்கத்தில் மருத்துவப் பணிகள் முற்றிலும் முடங்கியிருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் சிபிஐ தீவிர விசாரணையை நடத்திவருகிறது. குறிப்பாக, அன்று பணியிலிருந்த மருத்துவமனையின் 5 அதிகாரிகளிடமும், 4 மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை எனக் கூறப்படும் நிலையில் வேறு யாரெல்லாம் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் சிபிஐ விசாரணையை முடுக்கியிருக்கிறது. அதிகாலை 3 மணியிலிருந்து காலை 5 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. காலை 5.30 மணிக்கெல்லாம் அப்பெண்ணின் சடலத்தை அங்குள்ள ஊழியர்கள் பார்த்த நிலையில், உயரதிகாரிகளும், காவல்துறையினரும் காலை 10 மணியளவில்தான் சம்பவ இடத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கல்லூரியின் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனால் போலீஸுக்கு தகவல் தாமதமாக கொடுக்கப்பட்டதா அல்லது தகவலறிந்தும் உயரதிகாரிகள் அங்கு தாமதமாக வந்தார்களா? என்பது போன்ற கேள்விகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பிரச்சினையை ஒரு மாநில பிரச்சினையாக பார்க்கக்கூடாது என்றும், ஒட்டுமொத்த இந்திய பெண்களின் பாதுகாப்பு பிரச்சினையாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

Updated On 26 Aug 2024 6:45 PM GMT
ராணி

ராணி

Next Story