இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபகாலமாகவே ஆன்லைன் ஆப்ஸ் மற்றும் டிஜிட்டல் தளங்கள்மூலம் லோன் தருவதும் அதனால் மோசடிகள் நடைபெறுவதும் அதிகரித்துவிட்டன. ஆன்லைனில் பல்வேறு ஆப்கள்மூலம் லோன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தமுடியாமல் போகும்போது அந்த நபர்களுக்கு கொலைமிரட்டல் விடுவதும், அவர்களுடைய புகைப்படங்களை வைத்து மார்ஃபிங் செய்து அந்த நபருடன் தொடர்பிலுள்ளவர்களுக்கு அனுப்பி மிரட்டுவதும், அதனால் பயந்து தற்கொலை செய்துகொள்வதும் இப்போது மிகவும் அதிகரித்துவிட்டன. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுபோன்ற லோன் ஆப் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற லோன் ஆப்கள் மீது பெருமளவில் புகார்கள் வந்தாலும் அவற்றை இன்றுவரை முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த கோபிநாத் என்றஇளைஞரின் தற்கொலைக்கு முழுமையான காரணம் என்ன? இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நடைபெறுவது ஏன்? அரசு இதனை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக காணலாம்.

சென்னை இளைஞருக்கு நேர்ந்த அவலம்

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கோபிநாத். 33 வயதான இவர் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு எழும்பூரிலுள்ள ட்ராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ரஜினி ரசிகரான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டு வந்ததன்மூலம், அப்பகுதி மக்களிடையே பிரபலமாக இருந்துள்ளார். வெளியே செல்லவும், பிற தேவைகளுக்காகவும் கோபிநாத்திற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் நண்பர்கள் மற்றும் ஆன்லைன் செயலிகளில் பணம் பெற்றிருக்கிறார். இப்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ‘quick cash app’ என்ற செயலிமூலம் ரூ.40 ஆயிரத்தை கடனாகப் பெற்றிருக்கிறார். அந்த பணத்தை அவர் திரும்ப செலுத்திய பின்னரும் கடனை திருப்பி செலுத்தவில்லை, வட்டி மீதமிருக்கிறது என்று கூறி மீண்டும் மீண்டும் பணம் செலுத்துமாறு மிரட்டியுள்ளனர். இல்லாவிட்டால் கோபிநாத்துடன் தொடர்பிலிருக்கும் அனைவருக்கும் அவர் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டதாக தெரிவிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் பயந்துபோன கோபி, அந்த செயலியை தனது செல்போனிலிருந்து நீக்கியிருக்கிறார். இருப்பினும் கோபிநாத்தின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அவருடன் வாட்ஸ்அப்பில் தொடர்பிலிருக்கும் அனைவருக்கும் அனுப்பியிருக்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோபி, மே 8ஆம் தேதி தனது தாயிடம் இதுகுறித்து அழுதிருக்கிறார்.


ஆன்லைன் லோன் செயலி தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட கோபிநாத்

பின்னர் தனது அறைக்கு தூங்கச்சென்ற அவர் மறுநாள் காலை வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது அப்பா - அம்மாவின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து ‘மிஸ் யூ அம்மா அப்பா. கேஷ் ப்ராப்ளம்னால போறேன். quick cash appகாரன் என்னுடைய போட்டோவை எல்லாருக்கும் அனுப்பிட்டான்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். கோபிநாத்தின் தாயார் தனலட்சுமி தனது மகனின் மரணம் குறித்து கூறுகையில், “எனது மகனின் போட்டோவை ஆடைகள் இல்லாமல் சித்தரித்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதால்தான் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டான். எனது மகனை நம்பித்தான் எங்களுடைய குடும்பமே இருந்தது. இப்போது நாங்கள் நிர்கதியாக நிற்கிறோம். நல்ல வேலை, பேர், புகழ் என்று இருந்தான். ஆன்லைன் ஆப் மூலம் வாங்கிய கடனால் தனது நண்பர்கள் மத்தியில் அவமானம் நேர்ந்துவிட்டதாக அவன் அழுதுகொண்டிருந்தான். அது தாங்கமுடியாமல்தான் இப்போது இந்த முடிவை எடுத்திருக்கிறான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட எனது நகையை அடமானம் வைத்து ரூ.30 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் ‘கடன் கட்ட சொல்லி உயிரை எடுக்கிறார்கள். நான் செத்துவிடுகிறேன். இன்னும் இதைவிடக்கூட அசிங்கப்படுத்துவார்கள்’ என்று கூறி அழுதான். மூன்று மாதங்களாக மன உளைச்சலில் இருந்தான். இப்படி உயிர்போகும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது” என்று கூறி அழுகிறார். ஏற்கனவே பல இளைஞர்கள் இதுபோன்ற ஆன்லைன் செயலிகளால் மோசம்போய் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இதுபோன்ற செயலிகள்மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோபிநாத்தின் அப்பாவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


சட்டவிரோதமாக இயங்கும் ஆன்லைன் கடன் செயலிகளால் அதிகரிக்கும் தற்கொலைகள்

அதிகரிக்கும் ஆன்லைன் ஆப் கடன் மோசடிகள்

திடீரென வேலை இழந்தவர்கள், நிதி நெருக்கடியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக ஆயிரக்கணக்கானோர் இதுபோன்ற ஆன்லைன் செயலிகள்மூலம் தினமும் கடன்பெறுகின்றனர். மேலும் இதுபோன்ற கடன்கள் வாங்க அதிகமான ஆவணங்கள் தேவைப்படுவதில்லை. இன்ஸ்டண்ட் லோன் செயலிகளை டவுன்லோடு செய்து அடிப்படை விவரங்களை கொடுத்தாலே உடனடியாக பணமானது அக்கவுண்டில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அரசால் அங்கீகரிக்கப்படாத சில மோசடி செயலிகள் பயனர்களின் விவரங்களை திருடி, அதை சீனா மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலிருக்கும் சர்வருக்கு சட்டவிரோதமாக அனுப்பிவிடுகின்றன. இதுபோன்ற ஆன்லைன் கடன் செயலிகளை பொருத்தவரை சிபில் ஸ்கோரை வைத்து அதற்கேற்றபடிதான் கடன்கொடுக்க வேண்டும். ஆனால் சட்டவிரோதமாக செயல்படும் செயலிகள் சிபில் ஸ்கோரை எடுத்துக்கொள்வதில்லை. எந்த விவரங்களும் இல்லாமல் உடனடியாக பணம் கிடைப்பதால் அவசரத் தேவைக்காக கடன் வாங்குவோர் பின்னர் அவர்களுடைய வலையில் சிக்கிக்கொள்கின்றனர். இப்படி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திவிட்டாலும்கூட கடன் பெற்றவர்களை போலி சிம்கார்டுகளை பயன்படுத்தி மிரட்டுவது, மேலும் பணம் கேட்பது, அவர்களை ஆபாசமாக சித்தரித்து தொடர்பிலிருப்பவர்களுக்கு அனுப்புவது போன்ற பல மோசடிகளில் ஈடுபடுகின்றன. தொடர்ந்து பணம் செலுத்தமுடியாத ஒருசிலர் இதுகுறித்து தைரியமாக புகாரளித்தாலும் சிலர் பயந்துபோய் தவறான முடிவை எடுத்துவிடுகின்றனர்.


ஆன்லைன் லோன் ஆப்களை நம்பி ஏமார்ந்து போவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பு

கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் கடன் செயலிகள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இதனால் தற்கொலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் சில கடன் செயலிகளை முடக்கினர். மேலும் இந்திய அளவில் இந்த கடன் செயலிகளால் பாதிக்கப்பட்ட பலர் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியிடம் புகாரளித்திருக்கின்றனர். இருப்பினும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்ததையடுத்து, நீண்டகாலமாகவே ஆன்லைன் செயலிகள் குறித்து புகார்கள் வருவதாகவும், இதுகுறித்து விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் சைபர் க்ரைம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகளுக்கு குறிப்பிட்ட அலுவலகம் இல்லாததாலும், கடன் வாங்குபவர்கள் பல்வேறு புதிய எண்களிலிருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதாலும் அவர்களுடைய இடத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுபோன்ற மோசடி கும்பல்கள் ரூ. 10 ஆயிரம் - ரூ.20 ஆயிரம்வரை கடன் கொடுத்துவிட்டு லட்சக்கணக்கில் பணம் பறிப்பதால் கடன் பெற்றவர்களால் அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற நெட்வொர்க்குகள் பரவியிருப்பது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாகிஸ்தான், நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன.


ஆன்லைன் கடன் மோசடிகளை கட்டுப்படுத்த ஆர்.பி.ஐயின் புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்

நீங்கள் பயன்படுத்துவது பாதுகாப்பான செயலியா?

ஆன்லைன் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் முன்பு அவற்றின் வெப்சைட்டுகளை முதலில் பார்க்கவேண்டும். அவை ‘https’-இல் துவங்காமல் ‘http’ என்று இருந்தால் அது பாதுகாப்பான செயலி அல்ல. நம்பமுடியாத அளவில் ஒரு செயலியில் சலுகைகள் வழங்கப்படுவதாக அடிக்கடி விளம்பரங்கள் வந்தால் அதுகுறித்து கட்டாயம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். எந்தவொரு செயலியை டவுன்லோடு செய்யும் முன்பும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை முழுமையாக படிக்கவேண்டும். குறிப்பாக, கடன் செயலிகளில் லோன் எடுப்பதற்கு முன்பு அதிலுள்ள நிபந்தனைகளை கட்டாயம் படித்தபிறகே ஒப்புதல் வழங்கவேண்டும். ஒருசில செயலிகளில் லோனை அப்ரூவ் செய்வதற்கு முன்போ அல்லது அப்ரூவ் செய்தபிறகோ பணம் கேட்டால் அந்த செயலியை பயன்படுத்தவேண்டாம்.

இதுபோன்ற குற்றங்களை தடுக்க மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து Digital India Trust Agency என்னும் புதிய நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்த நிறுவனங்களை பற்றிய அடிப்படை விவரங்களை டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சியே சேகரித்து வைத்துக்கொள்ளும். இது டிஜிட்டல் நிதி குற்றங்களை தடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இனிமேல் எந்தவொரு ஆன்லைன் கடன் செயலிகள் சட்டப்படி இயங்கவேண்டுமென்றாலும் DIGITA-வின் சான்று பெற்றிருக்கவேண்டும். இதனால் கடன் செயலிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு குற்றங்கள் தடுக்கப்படும் என்று இந்திய அரசால் கூறப்பட்டிருக்கிறது.

தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலை தடுப்பு மையங்களை தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். உதவிக்கு சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்புகொள்ளலாம். தமிழக அரசின் 104 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும் தொடர்புகொண்டு உதவிபெறலாம்.

Updated On 8 July 2024 11:43 PM IST
ராணி

ராணி

Next Story