இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர் நடிகைகள்தானே! அவர்களுக்கென்ன? நன்றாகத்தான் இருப்பார்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, நடிகைகள் குறித்து எளிதில் தவறாக செய்திகளை பரப்பிவிடுவார்கள். ஆனால் தினசரி ஷூட்டிங்கிற்கு செல்லும்போது அவர்கள் சந்திக்கும் துன்புறுத்தல்கள் மற்றும் தொல்லைகள் குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், சமீபத்தில் வெளியான ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் 233 பக்க அறிக்கைதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மீ டூ’ இயக்கம் என்ற பெயரில் பெண்கள் தங்களுடைய பணியிடங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் மற்றும் அத்துமீறிய பாலியல் சீண்டல்கள் குறித்து பொதுவெளியில் பேசினர். அப்போது திறமையை வைத்து மட்டும் உயர்வாக பார்த்த பலரின் உண்மை முகங்களும் வெளிவந்தன. இந்தியாவை பொருத்தவரை பல மொழி திரைத்துறைகள் செயல்பட்டுவரும் நிலையில், அதில் மிகச்சிறியதாக பார்க்கப்படுகிறது கேரள திரைத்துறை. இருப்பினும் இங்குதான் மிகச்சிறந்த படைப்புகளும் உருவாக்கப்படுகின்றன. அதேபோல் மிக மோசமான பெயரையும் கேரள திரைத்துறை எடுத்திருக்கிறது. கேரள திரைத்துறையில் நடப்பதாக சொல்லப்படும் குற்றங்கள் என்ன? அதுபோன்ற சம்பவங்கள் மற்ற திரையுலகில் நடப்பதில்லையா? என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஹேமா அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சர்ச்சை குறித்து நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. அந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட பலர் சிக்கினர். அந்த விவகாரத்தைத் தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் எழுந்த பாலியல் புகார்களை அடுத்து 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற கேரள நீதிபதி ஹேமா தலைமையில், நடிகை டி. சாரதா, ஓய்வுபெற்ற கேரள முதன்மைச் செயலாளர் கே.பி வல்சலாகுமாரி ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அந்த குழு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையில் ஆடியோ, வீடியோ உட்பட பல்வேறு ஆவணங்கள் இடம்பெற்றிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், வேறு சில காரணங்களை கருத்தில்கொண்டு அரசு அந்த அறிக்கையை வெளியிடாமல் தவிர்த்துவந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் எழுந்ததால், கடந்த 19ஆம் தேதி அந்த அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது.


நடிகை பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் திலீப் சிக்கியதையடுத்து சமர்பிக்கப்பட்ட ஹேமா குழு அறிக்கை

அறிக்கை வெளியானதிலிருந்து திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், அவர்கள் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘காஸ்டிங் கவுச்’ என்ற பெயரில் திரைத்துறைக்குள் நுழைய விரும்பும் பெண்களை எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் என்பது பற்றியும், சமரசம் மற்றும் ஒத்துப்போதல் போன்ற வார்த்தைகள் அங்கு சகஜமாக பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி வாய்ப்புக்காக இணங்குபவர்களுக்கு, ‘சமரசம் செய்துகொள்ளும் நடிகைகள்’ என்று முத்திரை குத்தப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படப்பிடிப்பிற்கு செல்லும் இடங்களில் ஹோட்டல்களில் தங்கும்போது, நள்ளிரவில் குடிபோதையில் வந்து கதவை தட்டுவது, அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுவதாகவும், அதனாலேயே எங்கு ஷூட்டிங்கிற்கு சென்றாலும் நடிகைகள் தங்களுடன் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஒருசில நடிகைகள் தைரியமாக போலீஸில் புகாரளித்தாலும் பல நடிகைகள் வாய் திறக்காமல் இருப்பதற்கு, அங்கு அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதே காரணம் என்றும், அவர்களை எதிர்க்க முடியாது என்றும் ஒரு முன்னணி நடிகை அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மேலும் தங்களுடைய பிரச்சினை குறித்து தைரியமாக யாராவது பேசிவிட்டாலே அவர்களுடைய வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் திரைத்துறை பெண்கள் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் துணை நடிகர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்றும், அப்படியே அதுபற்றி கூறினாலும் அடக்கிக்கொள்ளுமாறு கூறுவதாலேயே தண்ணீர் குடிக்காமல் இருப்பதாகவும் சிலர் கூறியிருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை - துணை நடிகர்கள்

திரைத்துறைக்கு வரும் பெண்கள் என்றாலே அவர்கள் எதற்கும் இணங்குவார்கள் என்ற கருத்து காலங்காலமாக இருந்துவருகிறது. ஆனால் நடிப்பின்மீதுள்ள ஆர்வம் மற்றும் ஆசையால் இத்துறைக்குள் நுழைய விரும்பும் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்கள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒரு நடிகை அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். அந்த அறிக்கையில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என 15 பேரின் கையில்தான் மலையாள திரையுலகம் இருப்பதாகவும், இவர்கள்தான் யார் எந்த படத்தில் நடிக்கவேண்டும் என தீர்மானிப்பதாகவும் கூறப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். திரைத்துறையில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் பாலியல்ரீதியான பிரச்சினைகளும் ஒன்று என்றுதான் நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததைவிட மலையாள திரையுலகின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் நடிகை பீனா பால். யாராவது தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், தவறிழைத்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நடிகர் டோவினோ தாமஸ் கூறியிருக்கிறார். நடிகை கீர்த்தி ஷெட்டி கூறுகையில், நாம் எந்த அளவிற்கு இதுகுறித்து அதிகமாக பேசுகிறோமோ அந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறியிருக்கிறார். நடிகை சனம் ஷெட்டி பேசுகையில், மலையாள திரையுலகில் மட்டுமல்ல; அனைத்து திரையுலகிலுமே இப்படி நடக்கிறது. நிறையப்பேர் அதுகுறித்து வாய்திறக்கவே பயப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். நடிகை தனுஸ்ரீ தத்தா, இந்த அறிக்கையால் கொஞ்சம்கூட பலன் இருக்காது. இதுபோன்ற பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்க கமிட்டிகள்தான் மாறுகிறதே தவிர, பணியிடங்களில் எந்த மாற்றமும் நடப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.


தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் - டோவினோ தாமஸ் & கீர்த்தி ஷெட்டி

கேரள முதல்வர் பக்கம் திரும்பிய கோபம்

ஹேமா கமிட்டியின் அறிக்கையானது மொத்தம் 290 பக்கம் கொண்டது எனவும், அதில் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களிடம் அத்துமீறிய ஆண்களின் பெயர்களை தெரிவித்ததன் குறிப்பிட்ட பக்கங்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை எனவும் கேரள அரசுமீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் அறிக்கை சமர்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு அதை வெளியிடாமல் வைத்ததன் காரணம் என்ன என்றும்? யாரை காப்பாற்ற முதல்வர் அறிக்கையை மறைத்தார் என்றும் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி அறிக்கையை வெளியிட்டபோதிலும் அதில் சில பக்கங்கள் நீக்கப்பட்டது எதற்காக? என்றும் கேள்வி எழுப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட எந்த பெண்கள் இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்தாலும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, விரிவான திரைத்துறை சட்டம் உருவாக்குதல், திரைத்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தீர்ப்பாயம் அமைத்தல் மற்றும் ஹேமா குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல் போன்றவற்றில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கலாசார விவகாரத்துறை அமைச்சர் சாஜி செரியன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும், அறிக்கையின் எந்த பக்கங்களை வெளியிடவேண்டும் என்பதை உயர் நீதிமன்றமும், தகவல் ஆணயமுமே முடிவெடுக்கும் என்றும், அறிக்கையில் எந்த தனிநபரும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.


ஹேமா குழு அறிக்கையை ஏன் 5 ஆண்டுகளாக வெளியிடவில்லை என கேரள முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் கேள்வி

செரியனின் இந்த கருத்தை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பாதிக்கப்பட்ட பெண்கள் ஹேமா குழுவிடம் புகாரளித்ததற்கு பதிலாக அரசிடம் தெரிவித்திருந்தால் தக்க நடவடிக்கை எடுத்திருப்போம் என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஹேமா தலைமையில் கமிட்டியை நிறுவியதே அரசுதானே என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் 200 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியை நிலைநாட்டிய மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஹேமா குழு சமர்பித்த முழு அறிக்கையையும் வெளியிடுமாறு கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கேரள திரையுலகில் மட்டுமில்லாமல், அனைத்து திரையுலகிலுமே இதுபோன்ற பாலியல்ரீதியான பிரச்சினைகள் பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது என திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாய்திறக்க தொடங்கியிருக்கின்றனர். இதனால் அரசு சார்பில் திரைத்துறை மற்றும் நடிகர்களின் பாதுகாப்புக்காக வரையறுக்கப்பட்ட சட்டங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 2 Sep 2024 6:33 PM GMT
ராணி

ராணி

Next Story