இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘இளம் ரத்தம் சூடாகத்தான் இருக்கும்’ என்று சொல்வதற்கேற்ப, கல்லூரி மாணவர்களிடையேயான பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. பொதுவாகவே கல்லூரிகளில், க்ளாஸ் லீடர்ஸ், ஸ்டூடன்ஸ் பிரசிடன்ட், கல்சுரல் லீடர்ஸ், ஸ்போர்ட்ஸ் லீடர்ஸ் என பல பொறுப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதுபோன்ற பதவிகள் மற்றும் அதற்கு நடத்தப்படும் தேர்தல்கள் போன்றவற்றால் கல்லூரிகளுக்குள்ளேயே மாணவர்களிடையே மோதல்போக்கு இருக்கத்தான் செய்கிறது. இது ஒருபுறம் என்றால் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை ‘ரூட்டு தல’. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆண்டாண்டு காலமாக இருக்கும் இந்த பிரச்சினையால் சமீபத்தில் ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். சென்னை பிரசிடன்ஸி கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்குமிடையே ரூட்டு தல விவகாரத்தில் நடந்த மோதலில் 19 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலுக்கு காரணம் என்ன? ரூட்டு தல என்றால் என்ன? இந்த சம்பவத்தின்மீது அரசின் நடவடிக்கை என்ன? என்பது குறித்தெல்லாம் பார்க்கலாம்.

கல்லூரி மாணவன் உயிரிழந்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சுந்தர். 19 வயதான இவர் பிரசிடன்ஸி கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சென்னை புறநகர் ரயிலில் தினமும் கல்லூரிக்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருந்த சுந்தர் எப்போதும்போல அக்டோபர் 4ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பி சென்றிருக்கிறார். ஏற்கனவே சுந்தருக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்குமிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில், மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைத்து பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரை போலீசார் மீட்டு உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே தனது மகனை தாக்கிய மாணவர்கள்மீது சுந்தரின் தந்தை ஆனந்தன் பெரியமேடு காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.


ரூட்டு தல விவகாரத்தில் உயிரிழந்த சுந்தர் மற்றும் கொலைசெய்த மாணவர்கள்

விசாரணையில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சந்துரு(20), கமலேஸ்வரன் (19), யுவராஜ் (20), ஈஸ்வர் (19) மற்றும் ஹரி பிரசாத் என்கிற புஜ்ஜி(20) ஆகிய ஐந்து பேரை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த 5 பேர்மீதும் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து 5 பேர்மீதும் பதியப்பட்ட வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் விசாரணையானது அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு, அக்டோபர் 18ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவனின் இறப்பை தொடர்ந்து பிரசிடன்ஸி கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், மாணவர்களுக்கிடையேயான மோதல்கள் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்க, இந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களின் பேருந்துகள் மற்றும் ரயில் வழித்தடங்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் அரக்கோணம் - சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களிலும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மாணவர்கள் ரயில்களிலோ அல்லது ரயில் நிலையம் முன்போ போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிப்பு விடுக்கப்பட்டது. மாணவனின் இறப்புக்கு மாநில கல்லூரி வளாகத்தில் வைத்தே அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அக்டோபர் 14ஆம் தேதிவரை கல்லூரிக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.


மாணவர் சுந்தர் உடலுக்கு மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி

இந்த சம்பவம் குறித்து இறந்த மாணவன் சுந்தரின் பெற்றோர் கூறுகையில், “தினமும் கூலிவேலைக்கு செல்லும் எங்களை சுந்தர் படித்து பெரிய ஆளாகி பார்த்துக்கொள்வான் என்று நம்பியிருந்தோம். ஆனால் எங்களை நிற்கதியாக விட்டு சென்றுவிட்டான். எங்களுக்கு நடந்ததுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது” என கண்ணீர்விட்டனர். சுந்தரின் அக்கா கூறுகையில், “என் தம்பியின் உயிர் போனது வருமா? சம்பவம் நடந்தப்போ அவ்வளவு போலீசார் கேமராவில் பார்த்துக்கொண்டுதானே இருந்தனர்? உடனே சென்று தடுத்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என் தம்பி ஐடி கார்டு போட்டதால்தான் அடித்ததாக கூறுகின்றனர். ஒரு மாணவனுக்கு அடையாளமே ஐடி கார்டுதான். அதைபோட்டால் அடிப்பார்கள் என்றால் காலேஜ் எதற்காக நடத்தவேண்டும்? ஐடி கார்டு ஏன் கொடுக்கவேண்டும்? இதை கேட்க யாருமே இல்லையா?” என்று கதறி அழுதார். கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணித்தபோது யார் பெரியவர்கள்? எந்த கல்லூரி கெத்து? என ஆரம்பித்த பிரச்சினையானது வாக்குவாதமாக மாறி பின்னர் அடிதடிவரை சென்று கடைசியில் கொலையில் முடிந்த சம்பவம் கல்லூரிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அது என்ன ரூட்டு தல?

கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பயணிக்கும் அரசு பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்கள் போன்றவற்றிற்கு ஒரு மாணவனை தலைவனாக தேர்ந்தெடுத்து அவர் சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடக்கவேண்டும் என்பது இன்றளவும் கல்லூரி மாணவர்களிடையே எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. குறிப்பாக, சென்னையில்தான் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, கொருக்குபேட்டை தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கல்லூரி ஆகியவைதான் ரயில்வே போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றன. ஏனென்றால் இவர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கும்போது அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுடன் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருந்துவருகின்றனர்.


பேருந்து பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் கல்லூரி மாணவர்கள்

இவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எப்போதுமே இருப்பதால் இவர்களுக்குள் ஒரு மாணவனை தலைவனாக தேர்ந்தெடுத்து, கும்பலாக சேர்ந்துகொண்டு அந்த மாணவன் சொல்வதைக் கேட்டு, அடுத்த கல்லூரி மாணவர்களை தாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மாநில கல்லூரிக்கும் பச்சையப்பன் கல்லூரிக்குமிடையே இதுபோன்ற மோதல்போக்கானது நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. அடிக்கடி இந்த கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்கள் மற்றும் கட்டைகளை கொண்டு மாறிமாறி தாக்கிக்கொள்வதும் அவர்களை ரயில்வே போலீசார் தடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்குமுன்பே இதுபோன்ற சம்பவங்களால் சில மாணவர்கள் உயிரிழந்தும் இருக்கின்றனர். சென்னையில் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரங்களில் பொது போக்குவரத்து நிலையங்கலில் போலீஸ் பாதுகாப்பானது சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனாலும் போலீசாரும் கல்லூரிகளும் இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வந்தாலும் ரூட்டு தல விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை. IPC சட்டங்கள் இப்போது BNS ஆக மாற்றங்கள் செய்யப்பட்டு, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், 7 ஆண்டுகள் இருந்த சிறைதண்டனையானது தற்போது 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. காரணமின்றி மாணவர்களிடையே மோதல்போக்கு ஏற்படுவதும், அதன்மூலம் குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களின் படிப்பு தடைபடுவதுடன் அவர்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதால் பெற்றோரும் ஆசியர்களும் தங்களுடைய பிள்ளைகளையும், மாணவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கல்லூரி மாணவர்களிடையே மோதல்களை கட்டுப்படுத்த ‘ரூட்டு தல’ விவகாரத்தில் அரசு கவனத்தை செலுத்தி தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Updated On 21 Oct 2024 3:47 PM GMT
ராணி

ராணி

Next Story