இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வீட்டைவிட்டு வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் மெட்ரோ சிட்டிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பெண்கள் விடுதிகள் பல இயங்கி வருகின்றன. பெண்கள் விடுதி செயல்பட வேண்டும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பது போன்ற வரையறைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி விதிமுறைகள் இருந்தாலும் அங்கும் குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் பெண்கள் விடுதிகளுக்குள் அத்துமீறி ஆண்கள் நுழைவது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற குற்றச்செயல்கள் குறித்த செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அதைவிட கொடூரமான ஒருசெயல்தான் சமீபத்தில் பெங்களூருவில் அரங்கேறி இருக்கிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் தங்கும் விடுதிக்குள் நுழைந்து, ஒரு பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்த அந்த இளைஞன் யார்? எதற்காக இளம்பெண்ணை கொலை செய்தான்? குற்றத்தின் பின்னணி என்ன? என்பது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

பெங்களூரு குற்றச்சம்பவமும் பின்னணியும்

பெங்களூருவிலுள்ள கோரமங்களா என்ற இடத்தில் அமைந்திருக்கும் வி.ஆர் லேஅவுட்டில் பிஜி பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி என்ற 24 வயது பெண் அந்த விடுதியின் 3வது மாடியிலுள்ள ஒரு அறையில் தங்கி அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். ஜூலை 23ஆம் தேதி இரவு 11 மணியளவில் கையில் ஒரு கவருடன் அந்த விடுதிக்குள் நுழைந்த இளைஞன் ஒருவன் மூன்றாம் மாடிவரை சென்று கிருத்தி குமாரி தங்கியிருந்த அறையின் கதவை தட்டியிருக்கிறான். கதவை திறந்த கிருத்தியை தரதரவென இழுத்துவந்த அந்த இளைஞன் சுவரின் ஓரத்தில் வைத்து கழுத்தை நெறித்து, தப்பிக்க முடியாதவண்ணம் முடியை இழுத்துபிடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக பலமுறை குத்தியுள்ளான். விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஒரு பெண்ணை தாக்குவதை பார்த்த மற்ற பெண்கள் பயந்துபோய் அவரவர் அறைக்குள் ஒளிந்துகொண்டனர். இதனால் அந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பலத்த காயங்களுடன் முதலில் அமர்ந்திருந்த கிருத்தி உதவிக்கு யாரும் வராததால் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.


பெண்கள் விடுதிக்குள் புகுந்து கொலை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அடுத்து விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அந்த நபரின் முகம் தெளிவாக பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரணை மேற்கொண்டபோது அந்த நபரின் பெயர் அபிஷேக் எனவும், அவருக்கும் கிருத்திக்கும் நேரடி தொடர்பு இல்லை எனவும், மேலும் அபிஷேக், கிருத்தியின் நெருங்கிய தோழியான கரிமா ரத்தோட் என்பவரின் காதலன் எனவும் தெரியவந்திருக்கிறது.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்

பீகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரியும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கரிமா ரத்தோடும் கல்லூரியிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். பெங்களூருவில் ஒரே இடத்தில் வேலை கிடைத்ததால் இருவரும் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர். அப்போதுதான் மத்திய பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த அபிஷேக்கிற்கும் கரிமாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த காதலுக்கு ஆரம்பத்தில் கிருத்தியும் உதவியிருக்கிறார். இந்நிலையில்தான் அபிஷேக்கிற்கு வேலை போய்விட்டதாக தெரிகிறது. அடுத்த வேலை எப்போது தேடப்போகிறாய்? என கரிமா தொடர்ந்து அபிஷேக்கிடம் கேட்டு வந்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த அபிஷேக், தனக்கு போபாலில் வேலை கிடைத்துவிட்டதாகவும் அதனால் அங்கு செல்வதாகவும் கூறிவிட்டார்.


கிருத்தியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற அபிஷேக்கின் சிசிடிவி காட்சிகள்

ஆனால் அபிஷேக்கிற்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்ற விஷயம் ஒரு கட்டத்தில் கரிமாவுக்கு தெரியவர, அவருடன் சண்டை போட்டு, பேசுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரமடைந்த அபிஷேக், பெங்களூருவுக்கு வந்து கரிமா தங்கியிருந்த விடுதியின்முன்பு நின்று சத்தம்போடுவது, அங்குள்ள பெண்களிடம் அவரைப் பற்றி அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் மனமுடைந்த கரிமா தனது நெருங்கிய தோழியான கிருத்தியிடம், இதிலிருந்து தப்பிக்க உதவி கேட்டிருக்கிறார். அவர் கொடுத்த ஐடியாவின் பேரில்தான் இருவரும் கோரமங்களாவிலிருக்கும் பிஜி பெண்கள் விடுதிக்கு மாறியிருக்கின்றனர்.

ஆனால் இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்த கரிமாவை, அபிஷேக் விடுவதாக இல்லை. பழைய ஹாஸ்டலுக்குச் சென்று பலரிடம் இவர்கள் குறித்து விசாரித்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற அபிஷேக், எப்படியோ கரிமா தங்கியிருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்திருக்கிறான். ஒருவழியாக அவர்கள் தங்கியிருந்த அறையையும் கேட்டு தெரிந்துகொண்ட அபிஷேக், கரிமாவை கொலைசெய்யும் நோக்கத்தில்தான் கையில் கத்தியுடன் ஜூலை 23ஆம் தேதி இரவு விடுதிக்கும் சென்றிருக்கிறான். ஆனால் அங்கு கிருத்தி கதவை திறக்கவே, அனைத்து பிரச்சினைக்கும் நீதான் காரணம் என்று கூறி அவரை குத்தி கொலை செய்திருக்கிறான். இதற்கு முன்பிருந்த விடுதிக்கு அபிஷேக் வரும்போதெல்லாம் கரிமாவுக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக அபிஷேக்கை தனது அண்ணன் என்று அனைவரிடம் சொல்லியிருக்கிறார் கிருத்தி. ஆனால் கிருத்தியே தங்களுடைய காதல் முறிவுக்கு காரணமாக இருந்ததாக நினைத்து அவர்மீது தனது முழு கோபத்தையும் அபிஷேக் காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.


ரத்தக் காயங்களோடு உதவி கேட்ட கிருத்தி (சிசிடிவி காட்சி)

கொலைசெய்த கையோடு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்த அபிஷேக்கை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைத்த போலீசார், சிசிடிவி கேமரா ஆதாரங்களின் அடிப்படையில் அவரை தேடிவந்துள்ளனர். தனது சொந்த ஊரான போபாலில் பதுங்கியிருந்த அபிஷேக்கை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், தனது காதலி தன்னைவிட்டு பிரிந்ததற்கு கிருத்தி குமாரிதான் காரணம் என்பதால்தான் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான் அபிஷேக். மேலும் அவனிடம் தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சரின் விளக்கம்

பெங்களூருவில் நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுக்க பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு வேலை மற்றும் படிப்பிற்காக செல்லும் இளம்பெண்கள் அங்குள்ள விடுதிகளில்தான் தங்குகின்றனர். அனைத்து விடுதிகளிலுமே பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டாலும் இதுபோன்ற ஒருசில சம்பவங்களை தடுக்க முடிவதில்லை என்கிறார் கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா. கிருத்தி குமாரி கொலை குறித்து அவர் பேசியபோது, “டெல்லியில் நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, அதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்தது. அதற்காக அனைத்து மாநிலங்களுக்குமே பெரும் தொகையை ஒதுக்கியது. அதன்படி கர்நாடகாவிற்கு சுமார் 650 கோடி கிடைத்தது. அதை வைத்து நகரத்தில் அனைத்து பகுதிகளிலுமே 7000 சிசிடிவி கேமராக்கள், போலீஸ் கண்காணிப்பு போன்றவற்றை அதிகரித்து இருக்கிறோம். ஆனால் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக நடக்கும் இதுபோன்ற கொலைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் பெண்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். பெங்களூரு மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு படிக்கவும், வேலை பார்க்கவும் பலர் வருகின்றனர். பெங்களூருவை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருக்கிறார்.


காதல் பிரச்சினையால் நடக்கும் கொலைகளை கண்டுபிடிப்பது கடினம் -.கிருத்தி கொலை குறித்து கர்நாடக அமைச்சர் கருத்து

பொதுமக்கள் அச்சம்

இருப்பினும் இளம்பெண்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் இந்த சம்பவத்தால் மிகுந்த அச்சமடைந்திருப்பதாக கூறியிருக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் தாயார் இதுகுறித்து பேசுகையில், “நான் கல்லூரி செல்லும் பெண்ணின் அம்மா. இந்த சம்பவம் குறித்து நான் மிகவும் பயப்படுகிறேன். எனது மகள் அடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும். சுதந்திரமாக வெளியே சுற்றவேண்டும். எல்லா நேரமும் என்னால் அவளை கண்காணித்துக்கொண்டே இருக்கமுடியாது. கடந்த 10 -15 வருடங்களில் பெரிதாக எதுவும் மாறவில்லை. நிறைய மாற்றங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டாலும் அதில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. அதனால் தவறுகளும் நடக்கின்றன. மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய மகன்களுக்கு, பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கட்டாயம் சொல்லித்தர வேண்டும்” என்கிறார்.

“இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் ஓரிரு நாட்களுக்கு அதுகுறித்து பரபரப்பாக பேசுகிறோம். அதன்பிறகு அதனை கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற சம்பவங்களுக்கு சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் கொடுக்கப்படுவது போன்ற தண்டனைகள் எதுவும் இங்கு கிடைப்பது இல்லை. அதனால் இங்கு குற்றம்புரிபவர்களுக்கு பயம் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதித்து உடனடியாக கேஸை முடிக்கவேண்டும். அப்போதுதான் மாற்றத்தை பார்க்க முடியும்” என்கிறார் மற்றொரு இளம்பெண்.

இவர்கள் சொல்வதைப் போன்று ஒவ்வொருவருமே காதல் மட்டுமல்ல; எந்தவிதமான தோல்வியாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தவறான முடிவுகளை தவிர்க்கமுடியும். மேலும், அரசு இதுபோன்ற குற்றங்களுக்கு விதிக்கும் தண்டனையை கடுமையாக்கினால் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.

Updated On 12 Aug 2024 6:34 PM GMT
ராணி

ராணி

Next Story