போதைப்பொருட்களின் பழக்கமானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக போதைப்பொருட்களை பயன்படுத்துதல், விற்றல் போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நம்மால் கண்கூடாக காணமுடிகிறது. அப்படி சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம்தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம். ஒரே ஊரைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி அதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையை ஊக்குவிப்பதாக அரசின்மீது பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வலுத்துவரும் நிலையில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து மூன்று மாதங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ‘டாஸ்மாக் இல்லா தமிழகத்தை உருவாக்குங்கள்’ என பொதுமக்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன? கள்ளச்சாராயம் அங்கு அதிகம் விநியோகம் செய்யப்படுவதாக வெளிவரும் செய்திகள் உண்மையா? இந்த பிரச்சினையின்மீது இதுவரை அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து சற்று விரிவாக அலசலாம்.
கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி மரண வீட்டில் விநியோகிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை 200க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்திருக்கின்றனர். அதனால் கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபோக கள்ளச்சாராயத்தால் சிலருக்கு கண்பார்வை பறிபோயிருக்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதான கோவிந்தராஜன், அவருடைய மனைவி மற்றும் தாமோதரன்
குறிப்பாக கருணாபுரம் பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலுமே யாரோ ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி நாட்டையே உலுக்கியிருக்கிறது. கருணாபுரம் பகுதியில் பழங்குடியின மக்களும், பட்டியலினத்தவரும் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உடலுழைப்பு சார்ந்த தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். அதனால் சில வீடுகளில் கணவன் - மனைவி இருவரும்கூட மது குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் ஒருசில வீடுகளில் கணவன் - மனைவி இருவரும் இந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்திருக்கின்றனர். நகரின் முக்கியப்பகுதியான இங்கு கடந்த 3 ஆண்டுகளாகவே கள்ளச்சாராய விற்பனையானது 24 மணிநேரமும் வெளிப்படையாகவே நடந்துவந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும் இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் முக்கியக் குற்றவாளிகளை அடையாளம் காட்ட பெரும்பாலானோர் பயப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜன் மற்றும் அவருடைய தம்பி தாமோதரன் ஆகியோரை அடையாளம் காட்டினார். அவர்கள் இருவரும் கொரோனா காலத்தில்கூட அந்த பகுதியில் சாராயத்தை விற்றதாக அதற்கு பிறகு சிலர் தெரிவித்தனர். இவர்களுக்கு சின்னதுரை என்பவர்தான் மலைப்பகுதிகளில் சாராயத்தை காய்ச்சி கொண்டுவந்து விற்பனைக்கு கொடுப்பதாகவும் கூறுகின்றனர். இவர்கள் தவிர வேறு சிலரும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
திருட்டுத்தனமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் ரசாயனம்
தெலங்கானாவிலிருந்து கடத்திவரப்பட்ட மெத்தனால்?
இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் திடீரென அதில் மெத்தனாலை கலந்தது ஏன்? என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியில் காவல்துறை இறங்கியிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக விசாரணைக்குப் பிறகு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் புதுச்சேரியில் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை. சரி புதுச்சேரிக்கு எங்கிருந்து மெத்தனால் கிடைக்கிறது? என விசாரித்ததில், ரயில் வழியாக தெலங்கானாவிலிருந்து கடத்தி வரப்பட்டு புதுச்சேரியில் பதுக்கிவைக்கப்படுவதும், அங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதும் பல்வேறு கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றன. சரி, இந்த பகுதியில் கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சப்படுகிறது? என போலீசாரும், தனியார் தொலைக்காட்சிகளும் கள ஆய்வில் ஈடுபட்டன. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் பகுதிகளைச் சுற்றி மலைப்பகுதிகள் அமைந்திருக்கின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து பல கிலோமீட்டர்கள் உள்ளே நீரோடைகள் அதிகமிருக்கும், அதேசமயம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளைத் தேடி கண்டுபிடித்து அங்கு அடுப்பு மூட்டி, பெரிய பெரிய பேரல்களை வைத்து சாராயம் காய்ச்சி இருப்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட கடுக்காய்களையும், அத்துடன் சில தடயங்களையும் போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர். அங்குள்ள மக்களை விசாரித்தபோது, ஒவ்வொரு ஆண்டும் யார் சாராயம் காய்ச்சுவது, விற்பது என்பது போன்ற ஏலங்கள் ஊர்த்தலைவர் முன்பு நடத்தப்பட்டு முடிவு செய்யப்படுவதாக அதிர்ச்சியூட்டுகின்றனர். இப்படி சாராயம் காய்ச்சுதல், விற்றல் போன்ற தொழில்கள் வெளிப்படையாக நடந்தும், அரசும், அதிகாரிகளும் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என்ற கேள்வி அனைத்து தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து காவல்துறை நேரில் விசாரித்து வருகிறது - காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்
அரசின் நடவடிக்கைகள்
கள்ளச்சாராயம் அருந்தி ஒரேநாளில் (ஜூன் 19ஆம் தேதி) 16 பேர் உயிரிழந்தபோதே மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் அவருக்கு பதிலாக எம்.எஸ் பிரசாந்த் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் மாவட்ட எஸ்.பி சமய்சிங்மீனா மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள்தவிர, மதுவிலக்குப்பிரிவைச் சேர்ந்த பாண்டி செல்வி, கவிதா, ஷிவ்சந்திரன், பாரதி ஆனந்தன் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர்களான மனோஜ், பாஸ்கரன் உட்பட ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு. மெத்தனால் கலந்த சாராயத்தை விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன் மற்றும் அவரது சகோதரன் தாமோதரன், சின்னத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் கன்னுக்குட்டி என்பவரிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் மெத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து காவல்துறை நேரில் சென்று விசாரித்து வருவதாகவும், சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் கள்ளக்குறிச்சிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை
சம்பவம் நடந்த இடத்தில் உதவுவதற்காக 4 சிறப்பு மருத்துவக் குழுக்களையும், மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 38 சிறப்பு மருத்துவக் குழுக்களையும் தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும் 12 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோக, அவசர சிகிச்சைக்குத் தேவையான வெண்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் போன்றவையும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதல்வர், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் இறந்த செய்தி கேட்டு வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றத்தை தடுக்க தவறிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் மற்றும் கமல்ஹாசன்
பல்வேறு தரப்பிலிருந்தும் எழும் கண்டனங்கள்
இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது மாவட்ட நீதிமன்றம் மற்றும் காவல்நிலையம் அமைந்திருக்கும் நகரின் முக்கியப்பகுதியின் பின்புறம்தான். மேலும் இந்த பகுதியிலிருந்து வெறும் 3 கி.மீ தொலைவில்தான் மாவட்ட மதுவிலக்கு காவல்நிலையமும் அமைந்திருக்கிறது. இதனால் இந்த சம்பவம் நடப்பதற்கு காவல்துறையின் மெத்தனம்தான் காரணம் என அரசியல் தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக நிர்வாகிகள்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் சொல்வதாகவும், அதனால் முதல்வர் உடனடியாக பதவி விலகவேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காததற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர்தான் முழு பொறுப்பேற்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். மேலும் கள்ளச்சாராய இறப்புகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமெனவும், இதற்கு உதவியவர்கள் கட்டாயம் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கொதித்தெழுந்த திரைப் பிரபலங்கள்
நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்ததுடன், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு தனது கட்சித்தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து ஜி.வி பிரகாஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றாத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம், இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது, இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமென தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக்குகள் இருந்தும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் அவலங்கள்
கமல்ஹாசன் அறிக்கையில், தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொருமுறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் எனவும், இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷால், இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர்கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். நடிகர் சூர்யா, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம் என்ன?
தமிழ்நாட்டின் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக்குகள் இருந்தாலும் கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இன்றளவும் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களுக்கு ஊதியம் ரூ. 300 முதல் ரூ.500 வரைதான் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக்குகளின் ஆரம்பவிலையே நூறுக்கும் மேல்தான் என்பதாலேயே பெரும்பாலானோர் கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். ஏனெனில் ஒரு பாக்கெட் சாராயத்தின் விலை ரூ.50 மட்டுமே. இதனால் மூட்டை தூக்குபவர்கள், கட்டட வேலை செய்பவர்கள், வண்டி இழுப்பவர்கள் போன்ற உடலுழைப்பு அதிகம் இருப்பவர்கள் கள்ளச்சாராயத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் தமிழ்நாடு மதுவிலக்குத்துறையின் நடவடிக்கையால் கடந்த ஓரிரு ஆண்டுகளில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம் என்பது கள்ளக்குறிச்சி விவகாரம் தெளிவாக உணர்த்துகிறது.