இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமாக்காரர்கள் என்றாலே வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை என்ற புகார் ஆண்டாண்டு காலமாகவே இருந்துவருகிறது. அதற்கு, திடீரென வீட்டை காலி செய்வது, எந்நேரமும் அவர்களைத் தேடி ஆட்கள் வருவது, பார்ட்டிகள் என பல்வேறு காரணங்கள் வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும்விதமாக சிலர் நடந்துகொள்வதால் வீடுதேடி அலைந்து அவதியுறுவதாக நடிகை சினேகா உட்பட பலர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். இப்போது அதுபோன்றதொரு சர்ச்சையில்தான் சிக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. வீட்டை வாடகைக்கு எடுத்து அதை ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்திருக்கிறார். திடீரென அந்த வீட்டிற்கு வாடகை கொடுக்காமல், காலி செய்துவிட்டதாக வீட்டின் உரிமையாளர் குற்றம்சாட்டி போலீஸில் புகாரளித்துடன் ஊடகங்களுக்கும் பேட்டியளித்தார். சிவில் சம்பந்தமான வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றி, தனக்கு அவதூறு ஏற்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி யுவன் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறை யுவன் இன்னும் வாடகை செலுத்தவில்லை என்பதை உறுதி செய்ததை அடுத்து, அப்பாவை போலவே மகனும் இருக்கிறார் என நெட்டிசன்கள் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதேபோலத்தான் யுவனின் அப்பாவான இசைஞானி இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ விஷயத்தில் நடந்துகொண்டார். இப்போது அதேபோன்றதொரு சர்ச்சையில் யுவனும் சிக்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

வாடகை வீட்டை காலி செய்தது ஏன்?

இளையராஜாவின் பாடல்கள் எப்படி 80ஸ் கிட்ஸுக்கு ஃபேவரைட்டோ அதுபோலத்தான் 90ஸ் கிட்ஸுக்கு பிடித்தது யுவனின் மியூசிக். இசையில் எந்த அளவிற்கு பிரசித்தமோ அதே அளவிற்கு சர்ச்சைகளுக்கும் பேர்போனவராக இருக்கிறார் யுவன். காரணம், அடிக்கடி இவர் போடும் ட்வீட்ஸ் இவரை பிரச்சினைகளில் சிக்கவைப்பதுண்டு. முன்பெல்லாம் யுவனின் இசை என்றாலே அதீத எதிர்பார்ப்பை உருவாக்கும் நிலையில், இப்போது ‘தி கோட்’ படத்தில் அவருடைய இசை ரசிக்கும்படியாக இல்லை என்று வருத்தம் தெரிவித்துவருகின்றனர் அவருடைய ரசிகர்கள். இதுவரை வெளியான கோட் படத்தின் மூன்று பாடல்களுமே கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகின்றன. இருப்பினும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்து ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் யுவன்.


தனது ஸ்டுடியோவில் யுவன் சங்கர் ராஜா

சென்னை நுங்கம்பாக்கத்திலிருக்கும் லேக் பகுதியில் அமைந்திருக்கும் அம்ஜத் பேகம் என்பவருக்கு சொந்தமான ஒரு வீட்டை 2021ஆம் ஆண்டிலிருந்து வாடகைக்கு எடுத்து அதை ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்திருக்கிறார் யுவன். இந்த வீட்டின் வாடகையை மாதாந்திர கணக்கில் செலுத்தாமல் ஆண்டுதோறும் சேர்த்து செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இதுவரை ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருக்கும் நிலையில் திடீரென உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை காலி செய்ததாக, அம்ஜத்தின் சகோதரர் முகம்மது ஜாவித் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் இதுகுறித்து ஊடகங்களுக்கும் பேட்டியளித்திருக்கிறார். அந்த புகாரில், “கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவிலிருக்கும் ஒரு வீட்டில் வசித்துவந்தார். அந்த வீடு என் சகோதரிக்கு சொந்தமானது. அந்த வீட்டிற்கு ரூ. 20 லட்சம் வாடகைத் தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் யுவன், என் சகோதரி கேட்கும்போதெல்லாம், பிறகு தருவதாக கூறி முதலில் மறுத்து வந்துள்ளார். அதன்பிறகு, எப்போது அவர் அழைத்தாலும் போனை எடுக்காமல் தவிர்த்திருக்கிறார். இதனிடையே, எனது சகோதரிக்கு எந்த தகவலும் கொடுக்காமல் இரவோடு இரவாக வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து சென்றிருக்கிறார். அவர் வீட்டை காலி செய்வதாக அக்கம்பக்கத்தினர் கூறிய நிலையில் அது உறுதியாகியிருக்கிறது. இதுகுறித்து அவரிடம் விசாரித்து, வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.


வாடகை பாக்கி குறித்து யுவன்மீது குற்றஞ்சாட்டி புகாரளித்த முகம்மது ஜாவித்

நஷ்ட ஈடு கேட்ட யுவன்!

இந்த செய்தி வெளியானதிலிருந்து அப்பாவை போலவே மகனும் இருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில், ‘தி கோட்’ படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு பிறகு வாடகையை செலுத்துவதாக ஏற்கனவே கூறியிருப்பதாகவும், ஆனால் அதற்கிடையே தன்னைப்பற்றி பொய்யான புகாரை அளித்ததுடன் மீடியாக்களில் அளித்திருக்கும் பேட்டியை பார்க்கும்போது தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே தனக்கு ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டுமெனவும் பதிலுக்கு புகாரளித்திருக்கிறார் யுவன். மேலும் வீட்டின் உரிமையாளருக்கு இதுகுறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதனால் மீண்டும் யுவன் ட்ரோல்களுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதுதான் உண்மை. எப்படி இளையராஜா தன்னைப் பற்றி ஏதாவது செய்தி வெளிவந்தாலே உடனே மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பாரோ அதேபோலவே மகனும் இருக்கிறார் என விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆண்டு பிரசாத் ஸ்டுடியோவுடனான இளையராஜாவின் மோதல் குறித்த பிரச்சினையானது பரவலாக பேசப்பட்டது. அங்கு வாடகைக்கு இருந்தாலும், அந்த இடத்தை தனது சொந்த இடம்போல இஷ்டத்திற்கு மாற்றங்கள் செய்வதாக அவர்மீது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் புகாரளித்தது.


தந்தையும் இசையமைப்பாளருமான இளையராஜாவுடன் மகன் யுவன் சங்கர் ராஜா

மேலும் மாற்றங்களை செய்ததற்கான நஷ்டஈடை வழங்கவேண்டுமென்றும் கூறியது. இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’ படத்திலிருந்தே அந்த ஸ்டுடியோவில் வைத்துதான் இசையமைத்து வந்ததாகவும், அதனால் அந்த இடத்தை காலிசெய்ய முடியாது எனவும் இளையராஜா கூறியபோதும், அவரை வெளியேற்றியது பிரசாத் ஸ்டுடியோ. அந்த பிரச்சினை மறைவதற்குள்ளாகவே யுவனும் அதேபோன்றதொரு சர்ச்சையில் சிக்கியிருப்பதால், இப்போது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இப்படி மாறிமாறி வழக்கு தொடர்வதும் நோட்டீஸ் அனுப்புவதுமாக பிரச்சினை முற்றிய நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஒரு வருடமாக யுவன் கணக்கிலிருந்து அஜ்மத்தின் கணக்கிற்கு எந்த பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதனால் வாடகை செலுத்தாமலேயே யுவன், வீட்டின் உரிமையாளர்மீதே வழக்கு தொடர்ந்திருப்பதால் கடுமையான ட்ரோல்களுக்கு ஆளாகி வருகிறார். பல்வேறு முன்னணி நடிகர்களுடனும், தயாரிப்பு நிறுவனங்களுடனும் பணிபுரியும் யுவனுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். இந்நிலையில் இந்த வாடகை எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. அப்படியிருந்தும் யுவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கும் யுவன்

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த யுவன் இப்போது இல்லை என்பது நிறையப்பேரின் ஆதங்கமாகவே இருக்கிறது. ஏனென்றால் நா. முத்துக்குமார் - யுவன் கூட்டணியில் பாடல்கள் என்ற அறிவிப்பு வெளியானாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். எதிர்பார்ப்பைவிட பாடல் அவ்வளவு சூப்பராகவும் வந்திருக்கும். இப்படி தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கும் யுவன், கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துவருகிறார்.


சமூக ஊடகங்களின் வாயிலாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் யுவன்

காரணம், இவருடைய பாடல்கள் அந்த அளவிற்கு இப்போது எடுபடுவதில்லை. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தி கோட்’ படத்திற்கு இசையமைப்பதால் பாடல்கள்மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘விசில் போடு’ என்ற முதல் சிங்கிளே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், ஒரே நாளில் 15 மில்லியன் வியூஸ் பெற்று யுவனின் முந்தைய சாதனைகளை முறியடித்தது. இருந்தாலும் முன்பு நாங்கள் ரசித்த யுவன் எங்கே? என்று சமூக ஊடகங்களில் யுவனை டேக் செய்து கேள்விகளை எழுப்பிய நிலையில், திடீரென அவரது இன்ஸ்டா கணக்கை அவர் முடக்கிவிட்டதாக செய்திகள் பரவின. ட்ரோல்களை தாங்கமுடியாமல்தான் யுவன் இதுபோன்று நடந்துகொள்கிறார் என மேலும் கேலிசெய்த நிலையில், அடுத்த நாளே தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்த யுவன், தொழில்நுட்ப கோளாறு எனவும், விரைவில் கணக்கு சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் அடுத்தடுத்து வெளியான இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் எடுபடாத நிலையில், இப்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் யுவன். பின்னணி இசையில் ஸ்கோர் செய்தால் மட்டுமே இதுபோன்று தன்னை பற்றி வெளியாகும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்கின்றனர் இணையவாசிகள்!

Updated On 2 Sep 2024 6:49 PM GMT
ராணி

ராணி

Next Story