இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(04.01.1976 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

அரசாங்க அதிகாரி ஆக ஆசைப்பட்டு, “எம். ஏ." படிக்கப்போன சத்தியவதிக்கு, ஆட்டத்தின் மீது ஆசை அதிகமானது. அதனால் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிகையாகி விட்டார். அவர்தான் புதுமுகம் சத்தியப்பிரியா. "மஞ்சள் முகமே வருக" என்ற படத்தில் விஜயகுமாரோடு, மஞ்சத்தில் ஆட்டம் போடுகிறவர். சத்தியப்பிரியா, முதலில் “ராதா" என்ற பெயரில் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு பெயரும், மார்க்கெட்டும் ராசியாக இல்லாததால், சத்தியப்பிரியா என்ற பெயரோடு தமிழ்த் திரையுலகில் நுழைந்தார்.

தமிழில் சத்தியப்பிரியாவை முதன் முதலில் வரவேற்று வாய்ப்பு அளித்தவர், குகநாதன். “மஞ்சள் முகமே வருக" படத்தில் தனது கட்டழகு மேனியை தட்டாமல் காட்டி காளையர் மனதில் இடம் பிடித்தார் என்றாலும், நடிப்பில் சாவித்திரி, கே.ஆர்.விஜயா போலவே புகழ்பெற துடிக்கிறார், இந்த சத்தியப்பிரியா.

"எம்.ஏ." படிப்புக்குப் போன உங்களுக்கு சினிமா மீது எப்படி ஆசை வந்தது" என்று சத்தியப்பிரியாவிடம் "ராணி” நிருபர் கேட்டார்.

“எனக்கு இளமையிலேயே நடனத்தின் மீது கொள்ளை ஆசை இருந்தது. அதனால் நடனம் கற்று அரங்கேறினேன். எங்கள் பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் எனது நடனம்தான் முக்கிய இடம் பெறும். அப்படி ஒரு முறை என் நடனத்தைப் பார்த்த டி.எல். நாராயணன், என்னிடம் வந்து, நீ சினிமாவில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். அந்த திடீர் அழைப்பை நான் படீர் என்று ஏற்றுக் கொண்டேன்" என்று சொன்னார், சத்தியப்பிரியா.

மஞ்சள் முகமே வருக


"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" திரைப்படத்தில் நடிகை சத்தியப்பிரியா

நிருபர்: தெலுங்கில் இருந்து எப்படி தமிழ் சினிமா உலகிற்கு வந்தீர்கள்?

சத்தியப்பிரியா: என் "போட்டோ" படத்தை யாரோ டைரக்டர் குகநாதனிடம் கொடுத்து இருக்கிறார்கள். நான் நடித்த தெலுங்குப் படம் ஒன்றையும் குகநாதன் பார்த்து இருக்கிறார். அதில் திருப்தி அடைந்த அவர், என்னை அழைத்துப் பேசினார். பிறகு "மஞ்சள் முகமே வருக" படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.

சென்னை புதியது

நிருபர்: உங்களுக்கு ஏற்கனவே தமிழ் நன்றாகத் தெரியுமா?

சத்தியப்பிரியா: நான் சென்னைக்கு வந்து ஓர் ஆண்டுதான் ஆகிறது. அதற்குப் பிறகு தான் தமிழில் பேச கற்றுக் கொண்டேன். சென்னைக்கு வரும் முன், தமிழ்ப் படங்கள் கூட நான் பார்த்தது இல்லை.

நிருபர்: அப்படியென்றால் உங்கள் சொந்த ஊர் எது?

சத்தியப்பிரியா: எங்களுக்கு சொந்த ஊர், ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜய நகரம். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் விஜயநகரத்தில்தான்! என் அப்பா இன்னும் விஜய நகரத்தில்தான் இருக்கிறார். அங்கு ஓட்டல் நடத்துகிறார். அம்மாவும் நானும் சென்னையில் இருக்கிறோம்.

பெரிய குடும்பம்


’மனிதரில் இத்தனை நிறங்களா’ திரைப்படத்தில் தேவகியாக வரும் சத்தியப்பிரியா

நிருபர்: உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் சினிமாவில் இருக்கிறார்களா?

சத்தியப்பிரியா: எங்கள் குடும்பத்தில் நான்தான் மூத்தவள். எனக்கு 3 தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர். எல்லோருமே படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நிருபர்: "மஞ்சள் முகமே வருக" படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து இருக்கிறீர்களே, தொடர்ந்து அப்படி நடிப்பீர்களா?

சத்தியப்பிரியா: அந்தப் படத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வேடம் அப்படி. அதனால் நானும் நடித்தேன். தொடர்ந்து அப்படி நடிப்பதும், நடிக்காததும் எனக்கு கிடைக்கும் பாத்திரத்தைப் பொருத்தது. "மஞ்சள் முகமே வருக" படத்தில் இளமை இருக்கிறது என்பதற்காக நான் எதையும் வெளிப்படுத்தவில்லை. பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறேன்.

முன்னேற வழி

நிருபர்: முதல் படத்திலேயே கவர்ச்சி என்றால், ரசிகர்கள் தொடர்ந்து உங்களிடம் அதைத்தானே எதிர்பார்ப்பார்கள்?

சத்தியப்பிரியா: என் போன்ற புதுமுகங்கள் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்றால், கிடைத்த பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்க வேண்டியதாகத்தான் உள்ளது. ஆனால், நான் கவர்ச்சி நடிகையாகத் திகழ விரும்பவில்லை. சாவித்திரி, கே. ஆர். விஜயாவைப் போல், நடிப்புத் திறமை காட்ட ஆசைப்படுகிறேன்.


“பகடை பனிரெண்டு” திரைப்படத்தில் மாடர்ன் பெண்ணாக வரும் சத்தியப்பிரியாவின் தோற்றம்

நிருபர்: தயாரிப்பாளர்கள் கவர்ச்சி வேடம் தந்தால் என்ன செய்வீர்கள்?

சத்தியப்பிரியா: கே. ஆர். விஜயா கூட தொடக்கத்தில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். அதனால், கே. ஆர்.விஜயாவுக்கு தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கவர்ச்சி பாத்திரமே கொடுக்கவில்லையே! எனவே, என்னிடம் உள்ள நடிப்புத் திறமையையும் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

விரும்பி வந்தேன்

நிருபர்: உங்களுக்கு சினிமா வாழ்க்கை பிடித்து இருக்கிறதா?

சத்தியப்பிரியா: நான் விரும்பித்தான், இந்த தொழிலுக்கு வந்து இருக்கிறேன்.

நிருபர்: ''எம்.ஏ." படிப்பை இடையில் விட்டு வந்தீர்களே, அதை முடிக்கும் எண்ணம் இருக்கிறதா?

சத்தியப்பிரியா: நான் இரண்டு தோணியில் கால் வைக்க விரும்பவில்லை. நடிப்பில் மட்டுமே இப்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.

Updated On 29 July 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story