2010ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் சீனிவாசன். இவர் நடிகர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், படைப்பு இயக்குநர், பின்னணிக் கலைஞர் என பல துறைகளிலும் தனது திறமையால் அசத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டில் ‘கிளிச்சுந்தன் மாம்பழம்’ படத்தில் இடம்பெற்ற “கசவிண்டே தட்டமிட்டு” என்ற பாடலைப் பாடி முதன்முதலில் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சைக்கிள்’ திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் அறிமுகமானார். தற்போது "வருஷங்களுக்கு ஷேஷம்" என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. வினீத் சீனிவாசன் இயக்கிய திரைப்படங்கள் பற்றியும்,"வருஷங்களுக்கு ஷேஷம்" படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பற்றியும் விரிவாக காணலாம்.
'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்'
'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்தில் நிவின் பாலி, அஜு வர்கீஸ், பகத் மானுவல் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம்
பல தலைமுறைகள் தங்கள் வாழ்க்கையில் மனதை தொடும் காட்சிகளைக் கொண்ட திரைப்படம்தான் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்'. மிடில் கிளாஸ் குடும்பங்களில் இருந்து வரும் ஐந்து இளைஞர்களை மய்யமாக வைத்தே இப்படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் வினீத். பிரகாஷ் (நிவின் பாலி), குட்டு (அஜு வர்கீஸ்), புருசு (பகத் மானுவல்), சந்தோஷ் (ஷ்ரவன்) மற்றும் பிரவீன் (ஹரிகிருஷ்ணன்) ஆகியோர் கேரளாவின் வடக்கே உள்ள மணசேரி என்ற சிறிய கிராமத்தில் இருக்கிறார்கள். படிப்பை முடித்த ஐவரும், தங்கள் வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். மணசேரியில் ஹோட்டல் நடத்தும் குமரேட்டன் இவர்களது வாழ்க்கையை நல்வழி படுத்துகிறார். அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே மீதி கதை. படத்தில் நடித்த நாயகர்கள் அனைவரும் புதுமுகம் என்பதால் படம் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. குறிப்பாக இந்த படத்தில்தான் நிவின் பாலி அறிமுகமாகினார். அதுபோல் அஜூ வர்கீசின் காமெடி படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கும். அதேபோல் நெடுமுடி வேணுவும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் நம் மனதை கவர்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். அதேபோல ஷான் ரஹ்மானின் பின்னணி இசையும் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. தமிழில், சென்னை-600028 திரைப்படம் எந்த பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே பாதிப்பை 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' மலையாளத்தில் ஏற்படுத்தியது.
தட்டத்தின் மறையாது
இயக்குநர் வினீத் சீனிவாசன் மற்றும் 'தட்டத்தின் மறையாது' படத்தின் ஒரு காட்சி
'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்திற்குப் பிறகு வினீத் சீனிவாசன் இயக்கிய படம் 'தட்டத்தின் மறையாது'. இதை மூத்த நடிகர்கள் முகேஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான லூமியர் ஃபிலிம் கம்பெனி தயாரித்தது. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை எடுத்தது இந்த படம்தான். தலச்சேரியை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. ஹிந்து மதத்தை சேர்ந்த வினோத் ( நிவின் பாலி ) முஸ்லீம் பெண்ணான ஆயிஷாவை ( ஈஷா தக்வார் ) காதலிக்கிறார். இருவரும் கடைசியில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை. தனது விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் நம்மை கவர்கிறார் இயக்குநர் வினீத். ஜோமோனின் ஒளிப்பதிவு தலசேரி நகரத்தை மேலும் அழகாக காட்டுகிறது. ஷான் ரஹ்மான் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம். 3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 20 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.
ஜாக்கோபின்டே ஸ்வர்கராஜ்யம்
துபாயில் இரும்புத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் திருவனந்தபுரத்து NRI ரஞ்சி பணிக்கர். மனைவி லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மூன்று மகன்கள், ஒரு மகள் என்று மொத்தக் குடும்பமும் துபாயில் செட்டில் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சி சமயத்தில், 13 கோடி ஏமாற்றப்பட்டு பண நெருக்கடிக்கு ஆளாகி, குடும்பத்தை துபாயில் விட்டுவிட்டு பணம் புரட்டும் பொருட்டு, வேறொரு நாட்டுக்குப் போய்விட, மூத்த மகனான நிவின் பாலி, தன் அம்மா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் துணையுடன் கடன்காரர்களை சமாளித்து போராடி மீண்டும் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்தாரா என்பதே இப்படத்தின் கதை. வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான இந்த படம், நிவின் பாலியின் சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது. துபாயின் பாலைவன அழகுகளையும், சாலைகளையும் கண்குளிரக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோமோன். ஷான் ரெஹ்மானின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. நம்பிக்கை அள்ளித் தெளிக்கிற விதமான படம்தான். மலையாளி எங்க போனாலும் பொழச்சுக்குவான், மலையாளி பெரிய உழைப்பாளி என்றெல்லாம் படத்தில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மலையாளப் படங்களில் வருவது போலவே இதிலும், நிவின்பாலி குடும்பத்தை மிரட்டிக் கொண்டே இருக்கும் முரளிமோகனை ‘சென்னைவாசி மலையாளியாக' தமிழ் பேச வைத்திருப்பது நெருடலாகவே இருக்கிறது.
ஹிருதயம்
'ஹிருதயம்' படத்தில் வித்தியாசமான காட்சிகளில் பிரணவ் மோகன்லால்
வாழ்க்கையின் மூன்று படிநிலைகளை சொல்லும் ‘ஆட்டோகிராஃப்’, ‘பிரேமம்’, ‘அட்டக்கத்தி’ பாணி கதை. எனினும் அதனை வினீத் சீனிவாசன் தனக்கே உரிய எமோஷனல் டச்சுடன் அழகாக கொடுத்துள்ளார். +2 முடித்துவிட்டு கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் அருண் நீலகண்டன் (பிரணவ் மோகன்லால்). கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே தர்ஷனா (தர்ஷனா ராஜேந்திரன்) என்ற பெண்ணிடம் காதலில் விழுகிறார். சீனியர்களுடனான மோதல், புதிய நண்பர்கள், காதல் என போய்க் கொண்டிருந்த அவரது வாழ்க்கை எதிர்பாராத சூழலில் ஏற்படும் திடீர் காதல் முறிவால் மாறுகிறது. விரக்தியின் உச்சிக்கு செல்லும் ப்ரணவின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறத் தொடங்குகின்றன. ஜூனியர்களை ராகிங் செய்கிறார், தர்ஷனாவை வெறுப்பேற்ற வேண்டாவெறுப்பாக வேறொரு பெண்ணை காதலிக்கிறார், குடிக்கிறார். இப்படியாக செல்லும் ப்ரணவின் வாழ்க்கை, செல்வா என்ற சக மாணவனால் புத்துயிர் பெறுகிறது. இதன் பின்னர் அவரது வாழ்க்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதே ‘ஹிருதயம்’ படத்தின் கதை. நாயகன் பிரணவ் மோகன்லாலின் நடிப்புக்குத் தீனி போடும் ஒரு கதாபாத்திரம். படம் முழுக்க தன்னுடைய நடிப்பால் பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். வழக்கமாக வினீத் சீனிவாசன் படங்களில் சென்னை ஒரு பகுதியாக இடம்பெறுவது வழக்கம். அது இப்படத்தில் ஒரு படி மேலாக சென்று சென்னை ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறது. அந்த அளவுக்கு சென்னையையும் அதன் மனிதர்களையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் வினீத் சீனிவாசன். ஹேசம் வஹாபின் இசை, படம் முழுக்க நம்மை ரசிக்க வைக்கிறது.
வருஷங்களுக்கு ஷேஷம் - மீண்டும் ஹிருதயம் பட கூட்டணி
'வருஷங்களுக்கு ஷேஷம்' படத்தில் பிரணவ் மோகன்லால் இடம்பெற்றுள்ள காட்சிகள்
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஹிருதயம்’ பட கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ஹிருதயம். இந்தப் படத்தை வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை ஈட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வருஷங்களுக்கு ஷேஷம் என்கிற படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். வினீத் சீனிவாசன், அவரது தம்பி தியான் சீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ், கல்யாணி பிரியதர்ஷன், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மோகன்லால் மற்றும் வினீத்தின் தந்தை சீனிவாசன் இடையேயான நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரணவும், அவரது தந்தை சீனிவாசன் கதாபாத்திரத்தில் தியனும் நடித்துள்ளதாக தெரிகிறது. மெர்ரிலேண்ட் சினிமாஸ் பேனரில் விசாக் சுப்ரமணியம் வருஷங்களுக்கு ஷேஷம் படத்தை தயாரித்துள்ளார். ஏப்ரல் 11-ஆம் தேதி (11.4.24) அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.