இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் ஜூடோ கே.கே.ரத்தினம் தொடங்கி எத்தனையோ சண்டை பயிற்சியாளர்கள் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். இவர்களின் வரிசையில், மிகவும் முக்கியமான ஒருவராக இருந்து வருபவர்தான் ஜாகுவார் தங்கம். மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆசியோடு சண்டை பயிற்சியாளராக தனது கலை பயணத்தை தொடங்கிய இவர், நடிகர், தயாரிப்பளார், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் என சினிமாவில் சகலகலா வல்லவராகவும் திகழ்ந்து வருகிறார். 52-ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்துவரும் ஜாகுவார் இன்று 72 வயதிலும், 20 வயது இளைஞரை போல சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அதற்கு உதாரணமாகத்தான் தற்போது தனது பெயரிலேயே ‘ஜாகுவார்’ என்ற படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படியான நிலையில், ராணி ஆன்லைன் நேயர்களுக்காக தனது திரை அனுபவம், தனிப்பட்ட வாழ்க்கை, அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள், பெற்ற விருதுகள், தற்போதும் தன்னை எப்படி இளமையாக வைத்து கொள்கிறார் போன்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியை இந்த கட்டுரையில் காணலாம் .

திரையுலகிற்கு வந்து 52-ஆண்டுகளை கடந்திருக்கும் நீங்கள் 15 மொழிப்படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள்? அப்படி இருக்கும்போது உங்களுக்கான சினிமா பயணம் என்பது எங்கிருந்து ஆரம்பித்தது?

நான் தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் பிறந்தவன். அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்று சம்பாதித்து வந்த பணத்தில் மாட, மாளிகைகள் கட்டி வசதியாக வாழ்பவர்கள். அந்த கிராமத்தில்தான் நானும் வசித்தேன். எங்களுக்கென்று வீட்டோடு சேர்த்து ஒரு ஏக்கரில் நிலம் இருந்தது. அதில் விவசாயம் செய்வதோடு, அந்த நிலத்தில் எங்களுக்கு 6 பனைமரங்களும் இருந்தன. அதிலிருந்து பனை இறக்கி, காய்ச்சி பனை வெல்லம், பனங்கற்கண்டு ஆகியவையும் தயாரித்து விற்கவும் செய்வோம். அந்த நேரம் நான் அம்மாவுடன் காட்டிற்கு செல்லும் போது எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பார். அப்படிப்பட்டவர் நான் 6 வயது சிறுவனாக இருக்கும்போதே பாம்பு கடித்து இறந்து விட்டார். அதன் பிறகு அக்கா, அண்ணன்கள் அரவணைப்பில்தான் வளர்ந்தேன். என் அப்பா சிலம்பம் சுற்றுவதில் வல்லவர். அவரை பார்த்துதான் நானும் சிலம்பம் சுற்ற ஆசைப்பட்டேன். எங்கள் வீடு தனியாக ஒரு காட்டுபகுதிக்குள் இருக்கும் என்பதால் தற்காப்புக்காக எப்போதும் சிலம்பு, வேல் கம்பு, சுருள் கம்பு ஆகியவை வீட்டிலேயே இருக்கும். மேலும் அப்பாவுடன் சினிமாவுக்கு சென்றால் மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை விரும்பி பார்ப்பேன்.

அப்படி நான் பார்த்த முதல் படம் எம்ஜிஆரின் ‘பெரிய இடத்து பெண்’ திரைப்படம்தான். அந்த படத்தில் அவர் போடும் சண்டை காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பெரும்பாலான படங்களில் சண்டைக் காட்சிகளில் சிலம்பம், மான்கொம்பு, சுருள் வீச்சு, கத்தி, வாள் சண்டை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அதை பார்த்துதான் இன்னும் அக்கலைகள் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. அதன் பிறகு அதனை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து சென்னை வந்தேன். சென்னை வந்த நான் முதலில் மயிலாப்பூரில் ஒரு கடையில் வேலை பார்த்தேன். அந்த கடையின் உரியமையாளர் என்னை மிகவும் தரக்குறைவாக பேசிவிட்டார் என்பதால் மீண்டும் ஊருக்கு சென்றுவிட்டேன். வீட்டில் என்னுடன் பிறந்த 8 பேரில் நான்தான் கடைக்குட்டி. அக்கா, அண்ணன் அனைவருக்கும் அப்பா, அம்மா இருக்கும்போதே திருமணம் ஆகிவிட்டதால் திருச்சி, சென்னை, தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகள் என்று எல்லோரும் வசித்து வந்தார்கள்.


இளம் வயதில் கராத்தே நெஞ்சாக்கு என்ற தற்காப்பு கலையை கற்றுக்கொண்ட ஜாகுவார் தங்கம்

அதனால் சென்னையில் இருந்து மீண்டும் ஊருக்கு திரும்பிய நான், மறுபடியும் எனது அக்கா வசித்து வந்த திருச்சிராப்பள்ளிக்கு சென்றேன். அங்குதான் எனது சிலம்ப பயிற்சிக்கான முதல் விதையே தொடங்கியது. தட்சிணாமூர்த்தி ஆச்சாரியார் என்பவரிடம் சிலம்ப பயிற்சிக்காக சேர்ந்தேன். நான் வெளியூரை சேர்ந்தவன் என்பதால் அங்கு இருந்தவர்கள் சிலம்பம் கற்றுக்கொடுக்க கூடாது என்று சொல்ல, பிறகு என்னை செருப்பு தூக்க, தண்ணீர் கொடுக்க என்று உதவியாளராக மட்டும் சேர்த்துக் கொண்டார்கள். சிலம்ப கம்பை கையில் தொடக்கூடாது போன்ற நிறைய அவமானங்களை அங்கு சந்திக்க நேர்ந்தது. எப்போதும் அங்கு இருக்கும் ஆஞ்சநேயர் புகைப்படத்தை நான்தான் துடைத்து பூ போட்டு, விளக்கு ஏற்றி, செந்தூரம் எல்லாம் வைப்பேன். அப்படி ஒருநாள் அவருக்கு வேண்டியவற்றை செய்துவிட்டு, அங்கேயே அவர் முன்னாள் அமர்ந்து மிகவும் வேதனைப்பட்டு நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏன் சிலம்பம் கற்று தரக்கூடாது என்கிறார்கள் என்று அழுதேன். அப்போதுதான் அந்த கணமே ஆஞ்சநேயர் ஏதோ ஒன்றை எனக்கு உணர்த்தியது போன்று தோன்றியது. அப்போது இருந்து என் வாத்தியார், அங்கிருந்த மாணவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து அவர்கள் செய்வதை நானே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நேரம் பற்றாக்குறையால் பகல் முழுவதும் ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதை மனதில் ஏற்றிக்கொண்டு, மறுநாள் விடியற்காலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து 5 மணிவரை எல்லாவற்றையும் பயிற்சி செய்வேன்.


கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய ஜாகுவார்

இப்படி கற்றுக்கொண்ட சிலம்பக்கலை ஒருநாள் எனது ஆசிரியரையே காப்பாற்ற உதவும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. திருவிழா ஒன்றிற்கு சென்றிருந்த இடத்தில் எனது ஆசிரியரை ஒருவன் அடித்து விட்டான். அவருக்கு கலைகள் அனைத்தும் அத்துப்படி என்றாலும் யாரையும் அடிக்க மாட்டார். மற்ற மாணவர்களுக்கும் அடிக்க தைரியம் இல்லை. அப்போது அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. சிலம்பத்தை கையில் எடுத்த நான் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆசிரியருக்கு உரிய வணக்கத்தை செலுத்தி ஆட ஆரம்பித்தபோது எனது ஆசிரியரே என்னை பார்த்து ஆச்சரியப்பட்டு போனார். பிறகு ஆசிரியரை அடித்தவனை சிலம்பத்தால் அடித்து துரத்தியவுடன் முதல் முறையாக எனது ஆசிரியர் என்மீது கையை போட்டு “எப்படிடா இப்படி கத்துகிட்ட? யார் உனக்கு சொல்லி கொடுத்தது?” என்று கேட்டபோது நீங்கள்தான் சார் என்று நடந்த அனைத்தையும் கூறினேன். அதற்கு பிறகுதான் அவர் எனக்கு முறையாக பயிற்சியளித்தார். இதன் பிறகு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவர் சொல்லி கொடுத்த வர்ம கலைகள் அத்தனையையும் என்னுடைய 15 வயதிற்குள்ளாக கற்று தேர்ந்து முடித்தேன். இதற்கிடையில், மலேசியாவரை சென்று கராத்தேயிலும் பிளாக் பெல்ட் வாங்கினேன். இதற்கு பிறகுதான் சினிமா என்னும் துறைக்குள் நுழைந்து பல சாதனைகளை நிகழ்த்தினேன்.

எம்ஜிஆருடன் முதல் அறிமுகம் எப்போது ஏற்பட்டது?


மக்கள் திலகம் எம்ஜிஆர் இல்லையென்றால் நான் இல்லை - ஜாகுவார் தங்கம்

என்னுடைய அண்ணன் சென்னை குன்றத்தூரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து நடத்தி வந்தார். அவர் மக்கள் திலகத்தின் தீவிரமான ரசிகர். அவர் ஒருமுறை என்னை அழைத்து சென்று எம்ஜிஆருடன் புகைப்படம் எடுத்தார். சொல்லப்போனால் அதுதான் எனக்கான முதல் அறிமுகம். ஆனால், அப்போது நான் யார் என்றெல்லாம் அவருக்கு தெரியாது. அதற்கு பிறகு மக்கள் திலகம் கட்சி ஆரம்பித்து 1977-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திருச்சி வெல்லமண்டி, மரக்கடை, மெயின் கார்டு கேட் ஆகிய பகுதிகளுக்கு அருகில் இயங்கி வந்த ஜூபிடர் திரையரங்கில் இருந்த பெரிய காலியிடத்தில் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் முன்னிலையில் சிலம்பம் சுற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்து சுற்றிய போதுதான் எம்ஜிஆர் என்னை கவனித்து மேடை ஏற்றி பாராட்டியதுடன் சென்னையில் ராமாவரம் தோட்டத்தில் தன்னை வந்து சந்திக்கும்படி கூறியிருந்தார். அதன்படி நானும் அவரை சென்று சந்தித்தேன். அப்போது என்னை அழைத்து உணவு பரிமாறியது மட்டுமின்றி இங்கேயே தங்கி சிலம்பம் போன்ற கலைகளை மேலும் கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். அதோடு தன்னிடம் பாதுகாவலராக இருந்த ஜம்பு என்பவரிடமும் என்னை அறிமுகப்படுத்தி ஸ்டண்ட் யூனியனிலும் சேர்த்துவிட்டார். அங்கு இருந்துதான் எனக்கான சினிமா பயணம் தொடங்கியது. இன்றைக்கு நான் இந்த நிலையில் இருப்பதற்கு மக்கள் திலகம் மட்டுமே காரணம்.

நீங்கள் ஸ்டண்ட் கலைஞராக முதல் முறையாக பணியாற்றிய திரைப்படம் எது?


சிலம்ப பயிற்சியின்போது

நான் தேவர் தயாரிப்பில் ஒரு படத்திலும், நடிகர் ஜெய்சங்கரின் படத்திலும் பணியாற்றி இருக்கிறேன். ஜெய்சங்கர் எனது பெயரான தங்கப்பழம் என்பதையே சொல்லி அழைக்க மாட்டார். இதயக்கனி என்றுதான் கடைசிவரை அழைத்தார். இப்படி ஒன்றிரண்டு படங்களில் பணியாற்றினாலும் நான் ஸ்டண்ட் கலைஞராக நன்கு தெரியும்படி பணியாற்றியது எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படத்தில் இருந்துதான். அதன் பிறகு அவரின் பல படங்களில் நான் பணியாற்றினேன். என் மீது மிகவும் பாசமாக இருப்பார். பொங்கல் வந்தால் கையில் பணமெல்லாம் வைத்து கொடுப்பார். அப்போது விஜய் மிகவும் குழந்தையாக இருந்தார். கொஞ்சம் வளர்ந்த பிறகு சிலம்ப சண்டைகள் எல்லாம் கற்று கொடுத்தேன். அதேபோல்தான் விஜயகாந்துக்கு நான்தான் சிலம்பம் கற்றுக்கொடுத்தேன். இதனாலேயே இவர்கள் இருவருடனும் மிகவும் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.

தங்கப்பழமாக இருந்த நீங்கள் ஜாகுவார் தங்கமாக மாறியது எப்படி?

ஹிந்தியில் மீனா பஜார் என்றொரு படத்தில் பணியாற்றினேன். அதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அப்போது அப்படத்தின் இயக்குநர்தான் எனக்கு ஜாகுவார் என பெயர் வைத்தார். பிறகு நான் என்னுடைய அப்பா, அம்மா பெயரையும் சேர்க்க சொல்லி கேட்டதால் தங்கத்தையும் சேர்த்து ஜாகுவார் தங்கம் என வைத்தார்கள்.

Updated On 27 Aug 2024 12:14 AM IST
ராணி

ராணி

Next Story