தமிழ் சினிமாவில் கருப்புவெள்ளை காலம் தொடங்கி இன்றைய நவீன யுகம் வரை தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் மிக முக்கியமாக இருப்பது குழந்தை நட்சத்திரங்கள்தான். ஒரு படத்தில் கதாநாயகர், கதாநாயகிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் என்பது இவர்களுக்கு இருக்கும். அப்படி 1960, 70-களில் குழந்தை நட்சத்திரமாக குட்டி பத்மினி, பேபி ஷகிலா, ரோஜா ரமணி, மாஸ்டர் ஸ்ரீதர் என்று எத்தனையோ பேர் திரையில் மிளிர்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், தன் துறுதுறு நடிப்பு, நல்ல எக்ஸ்பிரஷன் என ரசிகர்களை வெகு எளிதில் ஈர்த்து மிகவும் பிசியான நட்சத்திரமாக வலம் வந்து கலக்கியவர்தான் மாஸ்டர் பிரபாகர். இவர் ‘சித்தி’, ‘சாது மிரண்டால்’, ‘மறக்க முடியுமா’, பாமா விஜயம்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘தாமரை நெஞ்சம்’, ‘திருவருட்செல்வர்’ போன்ற பல படங்களில் நடித்துவந்த அதே நேரத்தில் ‘வா ராஜா வா’ படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து அசத்தினார். இப்படி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தொடங்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஷ் என்று அப்போதைய முன்னணி ஹீரோக்களாக இருந்த அனைவருடனும் நடித்து புகழ் பெற்ற மாஸ்டர் பிரபாகர் அண்மையில் நமது ராணி ஆன்லைன் நேயர்களுக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றினை அளித்திருந்தார். அதில் தனது திரை அனுபவம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதுகுறித்த செய்தி தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் பெரிதாக பேச விரும்பாத செல்வி. ஜெயலலிதா, உங்களிடம் மட்டும் மிகவும் அன்புடன் நடந்துகொண்டது எப்படி?
“கல்லும் கனியாகும்” திரைப்படத்தில் மாஸ்டர் பிரபாகர்
மறைந்த முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் தனியாகத்தான் அமர்ந்திருப்பார். அவரிடம் யாரும் சென்று பேச மாட்டார்கள். நான் மட்டும் அவர்களிடம் சென்று எப்போதும் வணக்கம் வைப்பது வழக்கம். அதனாலேயே என்னை பார்த்தவுடன் நன்றாக பேசுவார். நலம் விசாரிப்பார். இப்போது வேறு என்ன படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார். அந்த அளவுக்கு நன்கு பழகக்கூடியவரிடம் நானும் அளவோடுதான் பேசுவேன். நாம் ஒருவரிடம் எப்படி பழகுகிறோமோ அப்படித்தான் எதிரில் இருப்பவர்களும் நம்மிடம் பழகுவார்கள். அப்படித்தான் நான் பழகும் விதம் பிடித்து ஜெயலலிதாவும் என்னை அழைத்து பேசுவார். கிராமத்து பையனாக இருந்தாலும் மிகவும் டீசென்ட்டாக நடந்துகொள்கிறாய் என்றெல்லாம் பாராட்டுவார். என்னுடன் அமர்ந்து ஏதாவது கிண்டல் அடித்து பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் அவரது கவலைகளை மறந்து சிரிப்பார். இப்படி மறக்க முடியாத பல நிகழ்வுகள் இருக்கின்றன.
இரு கோடுகள் படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் நடிக்கும்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருக்கிறதா?
நடிகர் ஜெமினி கணேசனுடன் ‘இரு கோடுகள்’, ‘சாந்தி நிலையம்’, ‘சித்தி’, ‘தாமரை நெஞ்சம்’ என நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். மிகவும் நல்ல மனிதர். அவருடன் நடித்த காலங்களில் அவரின் அறையிலேயே சேர்ந்து தங்கும் பாக்கியமெல்லாம் கிடைத்திருக்கிறது. அதிகாலையிலே எழுந்து யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வார். என்னையும் செய்ய சொல்லி அறிவுறுத்துவார். நான் நீங்கள் செய்யுங்கள், வேடிக்கை மட்டும் பார்க்கிறேன் என்று கூறுவேன். இப்படியான நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவே உங்களின் நடிப்பை பார்த்து மிரண்டுபோனது மட்டுமல்லாமல் பாராட்டவும் செய்திருக்கிறார். அது எப்படி நிகழ்ந்தது?
மாஸ்டர் பிரபாகர் மற்றும் நடிகவேள் எம்.ஆர்.ராதா
கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில், 1966-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சித்தி’ படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்தது. அவரை பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். நான் மட்டும் அவரிடம் தைரியமாக சென்று பேசுவேன். என்னிடம் நன்றாக பேசுவார், சிரிப்பார். அதை பார்த்து மற்றவர்கள் அனைவரும் உன்னிடம் மட்டும் எப்படி அவர் சிரித்து பேசுகிறார் என்றெல்லாம் கேட்பார்கள். அவ்வளவுதானே தவிர வேறொன்றும் இல்லை. பின்னாளில் அவரது மகன் ராதா ரவி என்னுடைய நெருங்கிய நண்பராக மாறினார். அவருடன் சேர்ந்து நிறைய மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். இருவரும் சேர்ந்து வெளியூர்களுக்கு சென்று நாடகங்களும் நடத்தியுள்ளோம்
இன்றைக்கும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு, தேர்தல் போன்ற நேரங்களில் அங்கு செல்வேன். அப்போது அங்கு யாரையாவது பார்க்க நேர்ந்தால் பேசுவேன். அவ்வளவுதானே தவிர யாரையும் நேரில் சென்று பார்த்து பேசுவதோ, தொலைபேசி மூலமாக அழைத்து பேசுவதோ கிடையாது. நான் உண்டு என் வேலையுண்டு என்று இருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் மிகவும் பிஸியான குழந்தை நட்சத்திரமாக, நடிகராக வலம் வந்த உங்களை இப்போது திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லையே ஏன்?
1990-கள் வரை திரைப்படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தேன். பிறகு புதுமுக நடிகர்கள் வரவர பழைய நடிகர்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் நான் நடித்துக்கொண்டிருந்த காலகட்டங்களிலேயே டைப்பிங், செராக்ஸ் என சொந்தமாக தொழிலும் செய்துவந்தேன். இதனாலேயே திரைத்துறையில் இருந்தவர்கள் என்னிடம் நன்றாக பேசினாலும், உங்களுக்கு என்ன சார். கையில் தொழில் இருக்கிறது. சினிமாவிற்கு வந்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நமக்கான மரியாதை மிகவும் முக்கியம். அதை அப்படியே காப்பற்றி கொள்வோம் என்று ஒதுங்கியே இருக்க ஆரம்பித்துவிட்டேன்.
'ராமன் எத்தனை ராமனடி' திரைப்படத்தில் மாஸ்டர் பிரபாகர்
செராக்ஸ் துறையில் கலர் செராக்ஸ் என்ற புதிய ட்ரெண்டை உருவாக்கியவரே நீங்கள்தான் என்று சொல்லப்படுகிறதே.. அது எப்படி?
கலர் செராக்ஸ் என்ற ட்ரெண்ட் வர ஆரம்பித்த புதிதில் அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது. அதனால் சாதாரண செராக்ஸ் கடை வைத்திருந்தவர்கள் அதனை எடுத்து செய்ய யோசித்தார்கள்.என் அப்பாதான் துணிந்து செய்வோம் என்று செய்ய ஆரம்பித்தார். நன்றாக போனது. அதுதவிர டிசைனிங், டைப்பிங் போன்றவையும் செய்துவந்தோம். இப்போதும் எங்கள் அலுவலகத்தில் பல வேலைகளை காலத்திற்கு ஏற்றாற்போல் புதுப்பித்து செய்து வருகிறோம்.
உங்களின் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர்களில் பலபேர் ஹீரோவாகவும் உயர்ந்தார்கள். பிரபலமாக இருந்த நீங்களும் ஹீரோவாக முடியவில்லையே என்று எப்போதாவது வருத்தப்பட்டது உண்டா?
நான் எப்போதும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது. காரணம் அதற்கு என்று உயரம், மேனரிசம், அழகு போன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என்று தெரியும். ஆனால், நான் எப்போதும் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அதாவது துணை நடிகராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். புதிய வரவுகளின் அதிகரிப்பால், அனுபவம் வாய்ந்த என்னை போன்ற நடிகர்களை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். அதுதான் உண்மையும் கூட.
நீங்கள் கடைசியாக நடித்த படம் எது?
நான் கடைசியாக ஈரம் என்றொரு படத்தில் நடித்தேன். என்னுடைய செராக்ஸ் கடைக்கு செராக்ஸ் எடுக்க வந்த ஒருவர், நான் அங்கு எல்லோரிடமும் பழகுவதை பார்த்து இந்த படத்தில் நடிக்கிறீர்களாக என்று கேட்டு அதில் நடிக்க வைத்தார். அவருக்கு நான் யார் என்பதே தெரியாது. படமெல்லாம் நடித்து முடித்த பிறகு நானே சென்று அந்த படத்தை எடுத்தவரிடம் நான்தான் ‘திருவருட்செல்வர்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம், இதுபோல் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் என்று கூறினேன். பிறகு அவரே ஆச்சர்யப்பட்டு மொபைலில் தேடி என்னை பற்றி அறிந்து கொண்டார். இதுதவிர, தூர்தர்ஷன் நாடகங்களிலும், பிற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறேன். கொஞ்சம் இடைவெளி விட்டுதான் வாய்ப்புகள் வரும். அப்படி ஒருமுறை ஒரு தொலைக்காட்சி தொடரில் என்னை நடிக்க அழைத்தவர்கள் தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் அலைய வைத்துவிட்டார்கள். அதனாலேயே எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன்.
ராணி ஆன்லைன் யூடியூப் தளத்திற்கு மாஸ்டர் பிரபாகர் பேட்டி அளித்த தருணம்
நடிப்பிற்காக இதுவரை என்னென்ன விருதுகள் வாங்கி இருக்கிறார்கள்?
பிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கிறேன். தமிழில் மூன்று படங்களுக்கும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒருசில படங்களுக்கும் பெற்றிருக்கிறேன். நடிகர் சங்கம் சார்பாகவும், டி.கே.எஸ் பிரதர்ஸ் சார்பாகவும் கலைச்செல்வம் என்ற விருது கொடுத்தார்கள். பாரதியார் என்ற அமைப்பில் இருந்து சிறந்த நாடக நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. இப்படி நிறைய விருதுகளை பெற்றுள்ளேன். கலைமாமணி விருது தானாக கிடைத்தால்தான் மதிப்பு. கேட்டு பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அவர்களாக எனது திறமை அறிந்து கொடுத்தால் பெற்றுக்கொள்வேன்.
இப்போது உள்ள சினிமாவிற்கும், உங்கள் காலத்து சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்ன மாற்றங்கள் வந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. அப்போது உள்ள சினிமாக்கள் நாடக ஸ்டைலில் இருந்தன. இப்போது அப்படியல்ல. கேமராவிலேயே நிறைய புதுவிதமான கேமராக்கள் வந்துள்ளன. அப்போதெல்லாம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை காட்சிக்கு காட்சி விளக்கி சொல்லி கொடுத்து அதற்கு தகுந்த நேரம் கொடுத்து எடுப்பார்கள். இப்போதெல்லாம் அப்படி இல்லை. இப்போது சீரியலில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களிடம் சரியான முகபாவனைகளே இல்லை. எல்லோரும் பேயறைந்தது போல்தான் நடிக்கிறார்கள். யாருடைய நடிப்பிலும் ஒரு உயிரோட்டம் என்பது இல்லை.
எதிர்கால சினிமாத்துறை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாற்றங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால், நடிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கார்ட்டூன் படங்கள் போன்றுதான் சினிமாத்துறை செயல்படும். காரணம் முன்பெல்லாம் சினிமாவை ஆர்வமாக ரசித்தார்கள். ஒரு இடத்தில் சினிமா ஷூட்டிங் நடக்கிறது எனறால் தனது வேலைகளை விட்டுவிட்டு, அந்த படப்பிடிப்பையும், நடிகர்களையும் வந்து வேடிக்கை பார்த்து ரசிக்க ஒரு கூட்டம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. இப்போதே நிலைமை இப்படியிருக்கிறது என்றால் இன்னும் போக போக எப்படி இருக்கும்? நீங்களே யோசித்து பாருங்கள்.