இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு என்று எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் இயக்குநர் ஹரியின் படம் என்றால் திரையில் மட்டும் அல்ல, பார்க்க வரும் ரசிகர்களிடத்திலும் வேகம் பற்றிக்கொள்ளும். குறிப்பாக இவர் நடிகர் விக்ரம், சூர்யா போன்றவர்களுடன் இணைந்துப் பணியாற்றிய 'சாமி', 'சிங்கம்' போன்ற திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆனதோடு, தமிழ் சினிமாவின் ஆக்சன் பிளாக் படங்களுக்கு அக்மார்க் முத்திரைகளாக இன்றும் இருந்து வருகின்றன. இருப்பினும் குடும்ப சென்டிமென்ட் படங்களுக்கும் பெயர் போன ஹரி, சிம்பு, விஷால் போன்ற நடிகர்களுடன் இணைந்து அதிலும் தனி முத்திரைப் பதித்துள்ளார். இதில் 'தாமிரபரணி' , 'பூஜை' போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமானவை. இவ்விரு படங்களிலுமே நடிகர் விஷால்தான் ஹீரோ என்பதோடு, அவருக்கும் இப்படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தன. அந்த வகையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மூன்றாவது முறையாக 'ரத்னம்' என்ற படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் வெளிவரவுள்ள 'ரத்னம்' படம் குறித்தும், ஏற்கனவே விஷால், ஹரி கூட்டணியில் வெளிவந்த படங்கள் தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தின என்பது குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

மாஸ் ராஜாக்கள்


'சண்டக்கோழி' படத்தில் பாலுவாக வரும் விஷால்

வித்தியாசமான காதல் கதையை மையமாக கொண்டு கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்த ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஷால், முதல் படத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தனது வெற்றி முத்திரையை பதிவு செய்தவர். இதனை தொடர்ந்து காதல் நாயகனாகவே வலம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, விஷாலோ தனது இரண்டாவது படத்திலேயே அதிரடி ஆக்சன் நாயகனாக களமிறங்கி மாபெரும் வெற்றி கண்டார். அந்த படம்தான் 2005-ஆம் ஆண்டு என்.லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘சண்டக்கோழி’ திரைப்படம். விக்ரம் கிருஷ்ணா தயாரித்திருந்த இப்படத்தில் மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தன. ஆக்சன் கலந்த மசாலா படமாக வெளிவந்திருந்த ‘சண்டக்கோழி’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்தும் எந்த அளவிற்கு ரசிக்கப்பட்டதோ, அதே அளவுக்கு அதில் இடம் பெற்றிருந்த ஆக்சன் காட்சிகளும் பேசப்பட்டன. 200 நாட்களுக்கு மேல் ஓடி விஷாலின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்த இப்படத்தினை தொடர்ந்து 'திமிரு' படத்திலும் ஆக்சனில் கலக்கிய விஷால் ஒரு மாஸ் ஹீரோவாக மாறி தொடர்ந்து ‘தாமிரபரணி’, ‘சிவப்பதிகாரம்’, ‘மலைக்கோட்டை’, ‘சத்யம்’, ‘தோரணை’, ‘வெடி’, ‘சமர்’, ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’, ‘ஆம்பள’, ‘மருது’, ‘இரும்புத்திரை’, ‘துப்பறிவாளன்’, ‘சண்டக்கோழி 2’, கடைசியாக ‘மார்க் ஆண்டனி’ என பெரும்பாலும் மாஸான ஆக்சன் படங்களில் நடித்து தற்போதும் முத்திரையைப் பதித்து வருகிறார்.


இயக்குநர் ஹரியின் 'சாமி' படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிகர் விக்ரம்

இதே போன்றுதான் விறுவிறுப்பான ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ஹரியும், 2002-ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரனை வைத்து ‘தமிழ்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் சியான் விக்ரமை ஹீரோவாக வைத்து ‘சாமி’ என்ற மெகா ஹிட் படத்தினை கொடுத்தார். நடிகர் விஷாலை போன்றே இயக்குநர் ஹரியும் தனது இரண்டாவது படத்தினை ஆக்சன் கலந்த மசாலா படமாக வித்தியாசமான கதைக்களத்தில் கொடுத்திருந்த விதம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. அதிலும் வழக்கமான போலீஸ் கதைபோல் இல்லாமல், கொஞ்சம் அதிலேயே வேறுபடுத்தி ரசிகர்களை கவரும் வண்ணம் கதையை குழைத்து கொடுத்திருந்தது ஹே யாருப்பா இந்த படத்தோட டைரக்டரு என்று ஒவ்வொருவரும் தேடும் அளவுக்கு சிறப்பான படைப்பாக வெளிவந்து பாராட்டப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘அருள்’, ‘ஆறு’,‘சிங்கம்’ என்று பெரும்பாலும் ஆக்சன் படங்களாக எடுத்தவர் முதல் முறையாக விஷாலுடன் கைகோர்த்து ‘தாமிரபரணி’ என்ற படத்தினை இயக்கினார். விஷால் - ஹரியின் முதல் கூட்டணியே வெற்றி கூட்டணியாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, அடுத்ததாக மீண்டும் ‘பூஜை’ என்ற ஆக்சன் கலந்த மசாலா படத்தில் இணைந்து அதிலும் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர்.

மாற்றம் தந்த 'தாமிரபரணி'


'தாமிரபரணி' படத்தில் நடிகர் விஷால் மற்றும் பானுவாக நடிகை முக்தா

2 ஆயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து ஆக்சன் படங்களாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குநர் ஹரிக்கும், ஆக்சன் படங்களாக நடித்துக்கொண்டு இருந்த நடிகர் விஷாலுக்கும், அவர்களின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்ததுதான் ‘தாமிரபரணி’ திரைப்படம். இப்படம் விஷாலுக்கு மட்டுமல்ல பானு கதாபாத்திரம் தொடங்கி அப்படத்தில் நடித்திருந்த அனைவருக்குமே மிகப்பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்று தந்தது. குடும்பம், காதல், நகைச்சுவை என ஆக்சன் கலந்த மசாலா படமாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்திருந்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இடம்பெற்றிருந்த “தாலியே தேவையில்லை”, “வார்த்த ஒன்னு” உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் விருப்ப லிஸ்டில் எப்போதும் இடம்பெறும் வகையில் ஹிட் பாடல்களாக அமைந்தன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படம் வெளிவந்த அதே சமயத்தில்தான் தமிழ் சினிமாவின் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் 'போக்கிரி' படமும் வெளியாகியிருந்தது. 2007 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்கிரியுடன் போட்டி போட்டு வெளிவந்திருந்த இப்படம் நிச்சயம் ஓடாது. இவ்வளவு பெரிய ஹீரோவின் படம் திரைக்கு வந்திருக்கும் போது, விஷால் போன்ற நடுத்தர ஹீரோக்களின் படம் வெற்றி பெறுவது சிரமம்தான் என்ற பேச்சுக்களும் அடிபட்டன. ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி விஜய்யின் போக்கிரி படத்திற்கு நிகராக ஓடி வெற்றிவாகை சூடியது மட்டுமின்றி, வசூலையும் வாரி குவித்த நிகழ்வு அந்த சமயம் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முழு முதற்காரணமாக சொல்லப்பட்டதே படத்தின் கதைக்களமும், அதற்கு ஏற்ற கதாபாத்திர தேர்வும் என்றே சொல்லலாம். இப்படி விஷால், ஹரி இணைந்த முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை அடுத்து மீண்டும் இவர்கள் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அந்த சமயம் பலரிடத்திலும் இருந்து வந்தது.

கத்தியோடு போட்டி போட்ட 'பூஜை'


'பூஜை' படத்தின் பாடல் காட்சியில் நடிகர் விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன்

நடிகர் விஷால் எப்போதும் நடிகர் விஜய்யை பற்றி பேசும் போதெல்லாம் அவர் என்னுடைய விருப்ப நாயகன். நான் அவரது தீவிர ரசிகன். அவரை பின்பற்றியே சினிமாவில் பயணித்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் கூற கேட்டிருப்போம். அதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளும் நடந்துள்ளன. இருப்பினும் சினிமா துவங்கி அரசியல்வரை விஜய்க்கு போட்டியாக பல செயல்கள் நடிகர் விஷால் செய்துள்ளார் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக நடிகர் விஜய் அண்மையில் கட்சி தொடங்கி அது குறித்த அறிவிப்பினை வெளியிட்டபோது கூட, நடிகர் விஷாலும் 2026-ல் தானும் தனி அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோன்று, தனது திரைப்படங்களை ரிலீஸ் செய்யும்போது கூட பல முறை விஜய்க்கு போட்டியாக தான் நடித்த படங்களை களத்தில் இறக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அந்த வரிசையில் 2 ஆயிரங்களின் நடுப்பகுதியில் எப்படி விஜய்யின் போக்கிரி படத்துடன் போட்டி போட்டு தாமிரபரணி திரைப்படம் வெளிவந்ததோ, அதேபோன்று 2014-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘கத்தி’ படம் வெளியான சமயத்தில் இயக்குநர் ஹரி - விஷால் கூட்டணியில் இரண்டாவது முறையாக அதிரடி ஆக்சன் படமாக வெளிவந்த ‘பூஜை’ படமும் மாஸ்ஹிட் வெற்றியை பதிவு செய்தது. குடும்ப சென்டிமென்டை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தினை நடிகர் விஷாலே சொந்தமாக தயாரித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பிரதாப் போத்தன், சூரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. விஷால் - ஹரி கூட்டணி ஏற்கனவே ‘தாமிரபரணி’ என்றொரு மெகாஹிட் படத்தினை கொடுத்திருந்ததால் இவர்கள் கூட்டணியில் ‘பூஜை’ படமும் வெளிவருகிறது என்பதை கேள்விப்பட்டவுடன் நிச்சயம் மாஸான காட்சிகள் அதிரடியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் திரையரங்கை நோக்கி ரசிகர்கள் கூட்டம் வர, அதனாலேயே விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு நிகரான கூட்டம் இப்படத்திற்கும் வந்து படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதன் மூலம் நட்சத்திர நடிகருக்கு நிகரான வரவேற்பை தன்னாலும் பெற முடியும் என்பதை ஹரியுடன் மீண்டும் கூட்டணியமைத்து நிரூபித்தார் விஷால்.

ஹாட்ரிக் அடிக்க வரும் 'ரத்னம்'


விஷால் இடம்பெற்றிருக்கும் 'ரத்னம்' பட போஸ்டர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஷால் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரியுடன் ‘ரத்னம்’ என்ற படத்தில் கைகோர்த்துள்ளார். ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள இப்படத்தினை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 10-ஆண்டுகளுக்கு பிறகு விஷால் - ஹரி கூட்டணியில் வெளிவரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, படத்தின் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க, இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷாலின் 34-வது படமாக வெளிவரும் இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, ஜூலையில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, இறுதியாக சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.


நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் -15ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே, தமிழ்நாடு - ஆந்திரா என காட்டப்பட்டு, பிறகு பேருந்து ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்போதே மலையில் இருந்து கவிழ்ந்து விழுவதுபோல் காட்டப்படுகிறது. எப்போதும் நெல்லை, தூத்துக்குடி என்று அந்த பகுதிகளை சுற்றியே படம் எடுக்கும் இயக்குநர் ஹரி இந்த முறை ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படத்தினை எடுத்திருப்பாரோ என்று நினைக்க தோன்றும் வகையில் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. ஏனென்றால் ஒரு காட்சியில் சமுத்திரக்கனி எல்லையை தாண்டிவர எந்த பேருந்தும் திரும்பிபோக முடியாது என்று பேசும் வசனம் அப்படியான எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட ‘பூஜை’ படத்தின் கதை சாயலிலேயே இப்படமும் இருக்குமோ என்ற எண்ணமும் சிலருக்கு உருவாகியுள்ளது. காரணம், ட்ரெய்லரில் விஷால் ஓடி வரும் காட்சியில், ஒரு இடத்தில் அரிவாளை கையில் எடுத்து சண்டையிட்டு பிரியா பவானி ஷங்கரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி “அந்த பொண்ணு என் உசுரு” என்று பேசும் வசனம், ‘பூஜை’ படத்தில் ஸ்ருதிஹாசனை விஷால் காப்பாற்றி வீர வசனம் பேசுவதை நினைவுபடுத்துவது போன்று உள்ளது. மேலும் ‘பூஜை’ படத்தில் இருப்பது போலவே இதிலும் மறைமுகமான குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் இடம்பெறும் என்பது போல்தான் தெரிகிறது. எது எப்படியாகினும் விஷால், ஹரி கூட்டணி என்றாலே மாஸான வெற்றிப் படமாகத்தான் இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இந்த 'ரத்னம்' திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியை விஷாலுக்கும், ஹரிக்கும் பெற்று தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 29 April 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story