வாழ்த்த வருவார்களா விஜய், அஜித்?
விஜய் நடிப்பில் 1999-ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர்தான் எழில். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித்தை வைத்து ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ என தொடங்கி ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘தீபாவளி’, ‘தேசிங்குராஜா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் விமலை வைத்து ‘தேசிங்குராஜா-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் வெளியாகி 25 ஆண்டுகள் எட்டியுள்ளதை கொண்டாடும் விதமாகவும், இயக்குநர் எழில் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டும் 'தேசிங்கு ராஜா 2' படத்தினை தயாரித்து வரும் பி.ரவிசந்திரன் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இதுவரை இயக்குநர் எழில் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது படத்தில் நடித்த முக்கிய நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது . குறிப்பாக தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமார்
பிப்ரவரியில் வருகிறது ‘துருவ நட்சத்திரம்’
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ரீத்துவர்மா நடிக்க, இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2018-ஆம் ஆண்டு இறுதிக்குள் படத்தினை முடித்து திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சில பொருளாதார சிக்கல் காரணமாக, நினைத்தது போல் படத்தை வெளியிட படக்குழுவால் முடியவில்லை. இருந்தும் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து பட ரிலீசுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக திட்டமிட்டது போல படத்தை வெளியிட முடியாமல் அப்போதும் ரிலீஸ் தேதி எப்போது என்றே தெரியாமல் தள்ளிப்போனது. இன்று வரை வெளியிட முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் இப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் போஸ்டர்
நடிகர் சிம்புவை வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றிருந்த இயக்குநர் கௌதம், சொன்னதுபோல் பட வேலைகளை தொடங்கவில்லை. வாங்கிய முன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே பணத்தை திருப்பித் தராமல் ‘துருவ நட்சத்திரம்’ படத்தினை வெளியிடக் கூடாது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி, பிப்ரவரி மாதம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால், வழக்கினை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்க கேட்டுக் கொண்டதை அடுத்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் பிப்ரவரி மாதம் வெளியாவது உறுதியாகியுள்ளது.
ரஜினியை கண்டு வியந்த விஷ்ணு விஷால்
'லால் சலாம்' படத்தில் ரஜினியின் மொய்தீன் பாய் தோற்றம் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் '3' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து 'வை ராஜா வை' மற்றும் ஆவணப்படமான சினிமா வீரன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். தற்போது 4-வதாக தந்தையை வைத்து 'லால் சலாம்' என்றொரு படத்தினை இயக்கி அதன் ரிலீசுக்காக காத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, ஜீவிதா ராஜசேகர், நிரோஷா, விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணா, விக்னேஷ், செந்தில், ஆதித்யா மேனன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான கபில்தேவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் சில பணிகள் முடிக்கப்படாமல் இருந்ததால், ரிலீஸ் தேதி பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அவரின் அந்த பதிவில், தலைவரின் நடிப்பை பார்த்தபோது மிகவும் பிரமிப்பாக இருந்தது. நிச்சயம் இப்படம் பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு விஷ்ணு விஷால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
#lalsalaam
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) January 18, 2024
Dubbing done...
In awe of thalaivar's performance...
Trust me guys...
It's gonna be a great watch....
So damn excited to see u all soon in theatres on February 9th....
Proud to be a part of this movie...@ash_rajinikanth ❤️❤️ pic.twitter.com/kCzkKhphkC
வாலிபனாக மாறும் மோகன்லால்
'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் தோற்றம்
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. 'நாயகன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தெடர்ந்து 'பாம்பே மார்ச் 12', 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி மலையாள ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை வைத்து 'மலைக்கோட்டை வாலிபன்' என்றொரு படத்தை இயக்கியுள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ள இந்த படத்தில் மணிகண்டன் ஆச்சாரி, சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியில் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடரும் சூரியின் ஹீரோயிசம்...
'விடுதலை' படத்தில் நடிகர் சூரி தோன்றும் காட்சி
நகைச்சுவை நாயகனாக திரையில் எல்லோரையும் மகிழ்வித்து வந்த நடிகர் சூரி, வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே உச்சம் பெற்றார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு சூரி மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சூரி மீண்டும் தனது கதாநாயகன் என்ற அந்தஸ்த்தை விட்டுவிடாமல் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் நடிகரும், சூரியின் நண்பருமான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கொட்டுக்காளி’, காதலை மையமாக வைத்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களிலும் கதையின் நாயகனாகவும், இரண்டாம் நிலை ஹீரோவாகவும் சூரி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Get ready for a soaring adventure! The pulse-pounding "Glimpse of Garudan" is here!
— Actor Soori (@sooriofficial) January 19, 2024
▶️: https://t.co/rtxbkIpxTb#Garudan, starring @sooriofficial and directed by @Dir_dsk hitting theaters soon!
An @thisisysr musical
A #VetriMaaran story@SasikumarDir… pic.twitter.com/ZzxZLYn8JV