இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு 250 படங்களுக்கு மேல் வெளியாகின. அதில் வெறும் 26 படங்கள் மட்டுமே வெற்றி படங்களாக இருந்தன. அதனால் 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கருப்பு ஆண்டாகதான் இருந்தது. பல பெரிய ஹீரோக்களின் படங்கள் வசூலை குவிக்க திணறின. ரஜினி, கமல், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களின் படம் பெரும் தோல்வியை சந்தித்தன. இதனால் தமிழ் சினிமா இவ்வருடம் பின்னடைவையே சந்தித்தது. இந்நிலையில் புதுவருடம் பிறந்துள்ள நிலையில், தமிழ் ரசிகர்கள் பல முக்கியமான படங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2025ஆம் ஆண்டில் எந்தெந்த படங்களின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் என்று விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


ரஜினி - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "‘கூலி"

ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கூலி

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் சத்யராஜும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "தக் லைஃப்" திரைப்படம்

கமல் - சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் "தக் லைஃப்"

`நாயகன்' படத்திற்குப் பிறகு மணிரத்னம், கமல் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு `Thug life' என்று பெயரிடப்பட்டு இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. மல்டி ஸ்டாரராக உருவாகும் இந்தப் படத்தில் சிம்பு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அசோக்செல்வன் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். மணிரத்னத்தின் ஆஸ்தான தொழில்நுட்ப கலைஞர்களான எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இதில் கைகோர்த்துள்ளனர். ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர். 35 வருடங்களுக்குப் பின்னர் இணைந்திருக்கும் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.


தளபதி விஜய்யின் கடைசி படம்

விஜய் - H.வினோத் கூட்டணி

தளபதி விஜய்யின் கடைசி படமான பெயரிடப்படாத "தளபதி 69" படத்தை H.வினோத் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் முழுமையாக அரசியல் பக்கம் களமிறங்குவதாக அறிவித்திருக்கிறார் விஜய். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதைத் தாண்டி ப்ரியா மணி, மமிதா பைஜு, பாபி தியோல் எனப் பல நட்சத்திரங்களும் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் `பகவந்த் கேசரி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனக் கூறப்பட்ட நிலையில், அது உண்மையான செய்தி கிடையாது என தகவல் கிடைத்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைகிறார்.


அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி

அஜித்தின் டபுள் ட்ரீட்

இவ்வருடம் அஜித்திற்கு இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. ஒன்று மகிழ் திருமேனியின் விடாமுயற்சி, இன்னொன்று ஆதிக் ரவிச்சந்திரனின் "குட் பேட் அக்லி". அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வராது என 'லைகா' தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி பட போஸ்டர்கள் முதன் முதலில் வெளியானபோது 2025 பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளில் இருந்த விடாமுயற்சி திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என பேசப்பட்டது. ஆனால் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு சென்ற உலக சுற்றுலா, துபாயில் ரேஸிங், திடீரென அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவுபெறாமலே இருந்தது. பொங்கல் ரிலீஸை மனதில் வைத்து ஜெட் வேகத்தில் குட் பேட் அக்லி உருவான நிலையில் அஜித் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி விடாமுயற்சிக்கு முன்னுரிமை அளித்தார். படத்தை முடிக்க வேண்டும் என இசையமைப்பு பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இருந்து ஜீ.வி.பிரகாஷிடம் ஒப்படைத்த நேரம் அது. அஜித்தின் பேச்சை கேட்டு குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமும் பொங்கல் ரிலீசில் இருந்து பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தனுஷ் இயக்கி நடிக்கும் "இட்லி கடை"

தனுஷின் இட்லி கடை

தனுஷின் 52வது படமாக (51வது படம் 'குபேரா') உருவாகி வரும் 'இட்லி கடை'யின் படப்பிடிப்பு தேனி ஏரியாவில் நடந்து வருகிறது. படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் இணைந்துள்ளனர். இப்போது ராஜ்கிரண், தனுஷ், நித்யாமேனன் ஆகியோரின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தில் அருண் விஜய், அசோக் செல்வன், தனுஷின் தம்பியாக கமிட் ஆகி உள்ளதாக சொல்கிறார்கள். அவர்களின் போர்ஷன் சென்னையில் படமாக உள்ளது. இந்தப் படம் ஃபீல்குட் படமாக உருவாகலாம் என்கின்றனர். 'திருச்சிற்றம்பலம்' போல ஒரு அழகான படமாக இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்கின்றனர்.


சித்தா இயக்குநரின் வீர தீர சூரன்

சித்தா இயக்குநரின் அடுத்த படைப்பு

விக்ரம் முழு ஆக்‌ஷன் படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் விக்ரமுடன் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முற்றிலும் வித்தியாசமாக இப்படத்தின் முதல் பாகத்திற்கு பதிலாக இரண்டாம் பாகம் தற்போது வெளியாகிறது. இப்படத்தின் டீசர் யூடியூபில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதேபோல் இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் இடம்பெறும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Updated On 7 Jan 2025 9:02 AM IST
ராணி

ராணி

Next Story