இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எனக்கு அழைப்பு விடுக்காதீர்கள்! - கங்கனா ரெனாவத்

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இந்த படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருந்தார். படம் வெளியானதிலிருந்து இன்றுவரை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், ஆல்பா ஆண் என்ற பெயரில் ஆணாதிக்கத்தை தூண்டுவது, பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது, கேவலமான வசனங்கள் மற்றும் வார்த்தை பிரயோகங்கள், சுயநலம், சாதிவெறி மற்றும் வன்முறையை ஊக்குவிப்பது போன்றவைதான் படம் முழுக்க இடம் பெற்றிருக்கும். இவ்வளவு நெகட்டிவ் இருந்தாலும் இப்படம் வசூல் சாதனை படைத்தது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

பொதுவாகவே சமூக பிரச்சினையாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி தாமாக முன்வந்து கருத்துக்களை தைரியமாக தெரிவிக்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். அவர் அனிமல் படத்தை பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் சந்தீப் ரெட்டி சமீபத்திய ஒரு நேர்க்காணலில், “என்னுடைய அனிமல் படத்தை பற்றி கங்கனா விமர்சித்திருந்தார். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எனக்கு கோபமும் இல்லை. அவர் நடித்த ‘குயின்’ போன்ற படங்களை பார்த்திருக்கிறேன். அவருடைய நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய கதைக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று தோன்றினால் கண்டிப்பாக அவரிடம் கதையை சொல்வேன். அவர் திறமையான நடிகர்” என்று கூறியிருந்தார்.


கங்கனா ரனாவத் - அனிமல் திரைப்பட போஸ்டர் - இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா

ஆனால் சந்தீப் ரெட்டியின் இந்த கருத்துக்கு கங்கனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்திருக்கிறார். அதில், “தயவுசெய்து உங்கள் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு விடுக்கவேண்டாம். நீங்கள் அழைப்பு விடுத்தால் உங்களுடைய ஆல்பா ஆண்கள் (ஆணாதிக்கம்)கூட பெண்ணியவாதிகளாக மாறிவிடுவார்கள். இதனால் உங்களுடைய படங்களும் அடிவாங்கும். ப்ளாக்பஸ்டர் படங்களை உருவாக்கும் நீங்கள் திரைத்துறைக்கு தேவை” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் கங்கனாவுக்கு ‘அனிமல்’ திரைப்படத்தின்மீது மட்டுமல்ல; சந்தீப் ரெட்டியின் மனநிலைமீதும் அதிருப்தி இருப்பது தெளிவாக தெரிகிறது.

அன்பு தாய் - நெகிழ்ச்சியில் ரஜினி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் ‘3’ மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 1980-களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது ‘லால் சலாம்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கபில் தேவ் ஆகியோர் சிறப்புத் தோற்றத்திலும், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். 9ஆம் தேதி படம் வெளியானதிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போதே தனது அப்பா குறித்தும், திரைப்படம் குறித்தும் ஐஸ்வர்யா பேசியது வைரலானது. மேலும் தனது அப்பாவிற்காக ஒரு மகளாக ஐஸ்வர்யா பேசியபோது ரஜினி ஆனந்த கண்ணீர் வடித்திருந்தார்.


அப்பா ரஜினியுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இந்நிலையில் முதல்நாளே படம் மிகுந்த வரவேற்பு பெற்றதால் ரஜினி தனது மகளுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டு, இதுவரை யாரும் பார்த்திராத ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். மேடையில் பேசியபோதே தனது அப்பாதான் தனக்கு எல்லாமே என்று ஐஸ்வர்யா கூறியிருந்தார். ரஜினி வெளியிட்டிருக்கும் அந்த போட்டோவில் அவரை வீல் சேரில் அமரவைத்து ஐஸ்வர்யா தள்ளிக்கொண்டு போகும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

மீண்டும் நடிகராக உருவெடுக்கும் பிரபல பாடகர்

‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘என்னை தாலாட்ட வருவாளா’, ‘அவள் வருவாளா’, ‘அன்பே அன்பே’, ‘சொல்லாமல் தொட்டு செல்லும்’ போன்ற பல ஹிட் பாடல்களை தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளில் பாடி பல்வேறு விருதுகளை பெற்றவர் ஹரிஹரன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக இசையுலகில் சோபித்து வருகிறார். தனது குரலுக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் இவர், தற்போது மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகிறார். கே.ஜி விஜயகுமார் எழுதி இயக்கும் ‘தயா பாரதி’ என்ற மலையாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அப்பானி சரத், கைலாஷ், நேகோ சக்ஸேனோ மற்றும் கோகுலம் கோபாலன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.


‘தயா பாரதி’ மலையாளப் பட போஸ்டர் - பாடகர் ஹரிஹரன்

இப்படத்தின் இயக்குநர் பேசுகையில், “பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினையை இந்த படத்தில் சொல்கிறோம். பாடகர் ஹரிஹரன் மும்பையைச் சேர்ந்த பாடகராகவும், வைல்டு லைஃப் வீடியோகிராஃபராகவும் நடிக்கிறார். தனது வேலைக்காக வனப்பகுதிக்கு செல்லும் இவர், அங்கு மக்கள் சந்திக்கும் பிரச்சினையை எப்படி தனது புகழ் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறார் என்பதே படத்தின் கதை” என்று கூறியிருக்கிறார்.

திருவனந்தபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் இதற்கு முன்பு 2005ஆம் ஆண்டு வெளியான ‘பவர் ஆஃப் வுமன்’ என்ற படத்தில் குஷ்புவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிப்பில் இறங்கியுள்ளார். இவருக்கு வயது 68.

சமந்தாவுக்கு 2ஆம் திருமணமா?

தமிழில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’ திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து அதன்மூலம் அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளை பெற்றவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வந்த சமந்தாவின் க்ளாம்ருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக, தெலுங்கு திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்த இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் க்யூட் ஜோடியாக வலம்வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு, முன்பைவிட க்ளாமர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்தார் சமந்தா. ஆனால் அக்கினேனி வீட்டு மருமகள் இதுபோன்று நடிப்பது நல்லதல்ல எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண உறவை முடித்துக்கொண்டனர். திருமண முறிவால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான போதிலும் மீண்டும் திரையில் எப்படி தோன்றுவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ‘ஊ சொல்றியா மாமா’ பாடல்மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் சமந்தாவின் புகழும் பெயரும் இந்தியா முழுவதும் பரவியது. தொடர்ந்து ஹாலிவுட் வாய்ப்பும் தேடிவந்தது.


சமந்தா - நாக சைதன்யா திருமண புகைப்படம்

ஆனால் தனியாக வசித்துவரும் சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்னும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் திடீரென ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டார். இது சமந்தா ரசிகர்களை கவலையுற வைத்தது. இருப்பினும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து நடித்துவந்த சமந்தா, வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுக்கவேண்டும் என கூறி சினிமாவிலிருந்து தற்போது சற்று விலகியிருக்கிறார். இதனால் தன்னை தேடிவந்த ஹாலிவுட் வாய்ப்பையும் இழந்துவிட்டார். இந்நிலையில் அவர் தனியாக இருப்பதை விரும்பாத பெற்றோர், இரண்டாம் திருமணம் குறித்து பேசிவருகிறார்களாம். குறிப்பாக, தங்களது நெருங்கிய உறவுக்கார பையனையே திருமணம் செய்துவைக்க முயற்சித்து வருகிறார்களாம். ஆனால் சமீபத்தில் திருமணம் குறித்து சமந்தாவின் கருத்து ரசிகர்களை குழப்பியிருக்கிறது. காரணம், புள்ளிவிவரங்களின்படி திருமணம் என்பது தவறான முதலீடு என்று கூறியிருந்தார். கூடவே விவாகரத்து குறித்த புள்ளிவிவர ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்திருந்தார் சமந்தா. சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் வதந்திகள் பரவிவந்த நிலையில், அவரும் திருமணத்தின்மீது ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

Updated On 20 Feb 2024 7:27 AM IST
ராணி

ராணி

Next Story