இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய சினிமாவை பொருத்தவரை பாலிவுட்டுக்கு இணையாக தமிழ் மற்றும் தெலுங்குப்படங்கள்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும். இப்போது எடுக்கப்படுகிற பெரும்பாலான படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாகவே எடுக்கப்படுவதால் அனைத்து மொழி படங்களையுமே அனைவருமே ரசித்துப்பார்க்கின்றனர். ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளில் இவை அனைத்திற்கும் விதிவிலக்காக மலையாள சினிமா, உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எதார்த்தமான கதைக்களம், சிறிய பட்ஜெட் என்றாலும் அவை பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்து வருகின்றன. குறிப்பாக, ஓடிடியின் தாக்கம் அதிகரித்தபிறகு மலையாள சினிமாவுக்கான மவுசு கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம் தமிழ், தெலுங்கு படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் மலையாளப் படங்கள் அளவிற்கு வெற்றி பெறுவதில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், மலையாள சினிமாவின் வளர்ச்சி பிற திரையுலகினை பாதிப்பதாக கூறுகின்றனர். மேலும் மலையாள சினிமாக்களின் தொடர் வெற்றியானது பிற திரையுலகிற்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக முன்பெல்லாம் சூர்யா, விஜய் போன்ற தமிழ் ஹீரோக்களுக்கு மலையாள ரசிகர்கள் அதிகம் இருந்தனர். அதனாலேயே அவர்களுடைய படங்கள் கேரளாவில் ரிலீஸ் செய்யப்பட்டன. ஆனால் இப்போது அந்த ட்ரெண்ட் தலைகீழாக மாறி, மலையாள படத்திற்கு அதிகளவில் தமிழ் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? பார்க்கலாம்.

தமிழ் ஹீரோக்களுக்கு கேரளாவில் வரவேற்பு!

கேரளாவில் ரிலீஸுக்காக ரஜினி படங்கள் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டாலும் வெற்றிபெறுவது என்னவோ விஜய் படங்கள்தான். கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் விஜய் மற்றும் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இவர்களுடைய படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் அவை கேரளாவிலும் கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும். இதனாலேயே சூர்யா தனது படங்களுக்கான புரமோஷன் பணிகளின்போது கேரளாவிற்கு விசிட் அடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதேசமயம் விஜய் பல ஆண்டுகள் கேரளா பக்கம் போகாதபோதிலும் அவருக்கு அங்கு ரசிகர்கள் குறைந்தபாடில்லை.


‘ஜில்லா’ படத்தில் விஜய் - மோகன்லால் காம்போ

விஜய்க்கு அங்கு இருக்கும் வரவேற்பை கணக்கில் கொண்டுதான் ‘ஜில்லா’ படத்தில் மோகன்லால் - விஜய் காம்போ உருவாக்கப்பட்டதாக இன்றும் தமிழ் திரையுலகில் பேசப்படுவதுண்டு. அதேபோலத்தான் ‘தளபதி’ ரஜினி - மம்மூட்டி காம்போவும். ‘ஜில்லா’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தந்தது. அதனாலேயே ‘காப்பான்’ படத்தில் சூர்யா - மோகன்லால் கூட்டணி அமைக்கப்பட்டது. அப்படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றிபெறாவிட்டாலும், கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து, ‘கோட்’ படப்பிடிப்புக்காக சமீபத்தில் விஜய் கேரளா பக்கம் போனார். அங்கு அவருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு சமூக ஊடகங்களில் படுவைரலானது. இதனால் ‘கோட்’ திரைப்படம் தமிழ்நாடு அளவிற்கு கேரளாவிலும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சமீப காலமாக தமிழ்நாட்டில் கேரள திரைப்படங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம்?

மலையாள படங்களின் வளர்ச்சி!

கடந்த 5 வருடங்களில் மலையாள திரையுலகமானது அபரிமிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. குறிப்பாக, கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு மற்ற திரையுலகங்களே பார்த்து வியக்கும் அளவிற்கு மலையாள படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்துவருகின்றன. பொதுமுடக்கத்தால் உலகளவில் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. இது திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. அதற்கு மலையாள சினிமாவும் விதிவிலக்கல்ல. ஆனால், அதையே சவாலாக எடுத்துக்கொண்டு மிகச்சிறிய பட்ஜெட்டில் குறிப்பிட்ட லொகேஷனில் எப்படி ஒரு கதையை திறம்பட திரைப்படமாக உருவாக்கமுடியும் என்ற யுக்தியை கற்றுவிட்டனர் மோலிவுட் இயக்குநர்கள். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வெளியான ‘2018’, ‘புலிமுருகன்’, ‘ரோமாஞ்சம்’, ‘தள்ளுமலா’, ‘லூசிஃபர்’, ‘நெரு’, ‘பீஷ்ம பர்வம்’, ‘கன்னூர் ஸ்குவாட்’, ‘குரூப்’, ‘பிரேமலு’, ‘ஆடுஜீவிதம்’, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘பிரம்மயுகம்’, ‘ஷேஷம்’, ‘ஆவேஷம்’ போன்ற படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்து மலையாள சினிமாவை உலகளவில் உயர்த்தியுள்ளன.


புலிமுருகனில் மோகன்லால் - பீஷ்ம பர்வத்தில் மம்மூட்டி - ஆவேஷத்தில் ஃபகத் ஃபாசில்

இதற்கு எதார்த்தமான கதைகளும், அவற்றை இயக்குநர்கள் கையாளும் விதமும்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடிக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதையம்சம் கொண்டதாக இருந்தாலும், அவை அனைத்துமே இன்றைய வாழ்வியலுடன் ஒன்றிப்போவதாக இருக்கிறது. வெளிநாட்டுக்கு வேலை தேடிப்போகும் பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாக கொண்டது ‘ஆடுஜீவிதம்’ கதை. அதுவே ‘பிரேமலு’ படம் முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் வேலையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியே ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தை பார்த்தால், சுற்றுலா செல்லும் நண்பர்கள், அங்கு அவர்கள் மாட்டிக்கொள்ளும் சிக்கலை கருவாக கொண்ட ஒரு உண்மைக்கதை, கல்லூரியில் சீனியர் ஜூனியர் மாணவர்களின் பிரச்சினைக்கு இடையே வரும் ஒரு ரவுடியால் ஏற்படும் சிக்கல்தான் ‘ஆவேஷம்’ திரைப்படம். அப்படியே ‘பிரம்மயுகம்’ பக்கம் திரும்பினால் 17ஆம் நூற்றாண்டிற்கே நம்மை திகிலுடன் அழைத்துச்செல்கிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பில்லாததாக எடுக்கப்படுவதே மலையாள திரைப்படங்களின் வெற்றிக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இளைஞர்களுடன் ஒத்துப்போகும் கதாபாத்திரங்கள்

உண்மையை சொல்லவேண்டுமானால் தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் அறிமுகத்திற்கும் அவர்கள் வெற்றிக்கனியை எட்டுவதற்குமான இடைவெளி என்பது நீண்டதாகவே இருக்கிறது. இது கன்னடம், தெலுங்கு சினிமாக்களுக்கும் பொருந்தும். ஆனால் மலையாள சினிமாக்களில் அப்படியல்ல. மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், டோவினோ தாமஸ், ஃபகத் ஃபாசில் என முன்னணி ஹீரோக்கள் தங்கள் நடிப்புத்திறமையை வெளிகாட்டும்விதமாக வித்தியாசமான கதைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டாலும், நச்லென், மேத்யூ தாமஸ், மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் போன்ற இளம் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அதே அளவிற்கு மறுபுறம் இயக்குநர்கள் வாய்ப்பு அளிக்கின்றனர்.


இளம் மலையாள நட்சத்திரங்களான மேத்யூ தாமஸ் மற்றும் அனஸ்வரா ராஜன்

இதுதான் மலையாள சினிமாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இப்போது சோஷியல் மீடியாக்களின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போவதை நன்கு புரிந்துகொண்ட இயக்குநர்கள், அதில் பிரபலமாக இருப்பவர்களையே தங்கள் கதைகளுக்கு தேர்ந்தெடுத்து நடிக்கவைக்கின்றனர். இது புது நடிகர், நடிகைகளை மக்களுக்கு பரிச்சயப்படுத்த செய்யப்படும் புரமோஷன் வேலையை சற்று குறைத்துவிடுகிறது. சினிமா பின்னணி இல்லாத புதுமுகங்களை இறக்குவது இப்போது மலையாள சினிமாவில் டிரெண்டாக இருக்கிறது. 20, 21 வயதில் பிற திரையுலகில் நுழைவது என்பதே கடினமான ஒன்றாக பார்க்கப்படும் சூழலில், மலையாள திரையுலகில் அந்த வயது ஸ்டார்கள்தான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்துவருகின்றனர். இப்போது முன்னணியில் இருக்கும் மேத்யூ தாமஸ், அனஸ்வரா போன்றோர் பெரிய ஹீரோக்களின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று, தங்கள் திறமையை நிரூபித்துதான் குறுகிய காலத்திலேயே அனைவரும் விரும்பும் ஸ்டார்களாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றனர். இதனாலேயே பெரிய இயக்குநர்கள்கூட இந்த இளம் நடிகர்களை பெரிதும் நம்புகின்றனர். ஜீது மாதவன், கிரிஷ் ஏ.டி போன்றோர் இதுபோன்ற புதுமுகங்களை மையமாக வைத்தே எதார்த்தமான கதைகளை எழுதுகின்றனர்.

தமிழ்ப்படங்கள் சோபிக்காதது ஏன்?

எங்களுடைய ரசிகர்களை பொருத்தவரை சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதை நன்றாக இருக்கிறதா? ரியாலிட்டியுடன் ஒத்துப்போகிறதா? என்றுதான் பார்க்கிறார்கள் என்கின்றனர் மலையாள திரையுலகில் இருப்பவர்கள். மேலும் 80, 90 களிலேயும் அவர்கள் நல்ல கதைக்களங்களைத்தான் கொடுத்ததாகவும், ஆனால் அப்போது சோஷியல் மீடியா மற்றும் ஓடிடி போன்றவை இல்லாததால்தான் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை எனவும் கூறுகின்றனர். அதுபோக, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் வசூல் குறித்த விவரங்களை வெளியிடுவார்கள். ஆனால் மலையாள திரையுலகில் வசூல் விவரங்கள் அரிதாகவே வெளியிடப்பட்டதும் வெற்றியை கொண்டாடாததற்கு மற்றொரு காரணம் என்கின்றனர்.


‘குட்நைட்’ திரைப்படத்தால் முன்னணி ஹீரோவாக உருவாகியிருக்கும் மணிகண்டன்

ஆனால் அப்போதிருந்தே தமிழ்ப்படங்களின் வெற்றி, பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் குறித்த போஸ்டர்கள் ஒட்டப்படுவதுண்டு. இது படத்தை பார்க்கவேண்டுமென்ற ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இப்போது திரைப்படங்களின் வெற்றியில் சோஷியல் மீடியாவின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் எல்லா மொழிப்படங்களுமே ஓடிடி தளங்களில் வெளியிடப்படும்போது பல மொழிகளில் வெளியிடப்படுகிறது. அதனால் புரமோஷன்கள் பெரிதளவில் படங்களின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக, அவை விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. மாஸ் ஹீரோ, பெரிய பட்ஜெட், பிரம்மாண்டம் என கூறப்பட்டாலும் கதை நன்றாக இல்லையென்றால் ஒரே நாளில் சோஷியல் மீடியாக்களில் விமர்சித்து படத்தின் கதையையே முடித்துவிடுகின்றனர் ரசிகர்கள். முன்பெல்லாம் ரஜினி, விஜய், அஜித், கமல் என முன்னணி ஹீரோக்களுக்காகவே படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்றவர்கள், இப்போது விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கே வருகின்றனர். இது தமிழ் மட்டுமல்ல; அனைத்து மொழிகளுக்குமே பொருந்தும். தமிழ் சினிமாவில் கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக நிறைய விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. சுமாரான கதைக்குள் மாஸ் ஹீரோவை கொண்டுவந்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என்ற இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் எண்ணத்தை இப்போது ரசிகர்கள் உடைத்துவருகின்றனர். இது பெரிய ஹீரோக்களுக்கு அடியாக பார்க்கப்பட்டாலும் சிறிய பட்ஜெட் மற்றும் புதுமுகங்களின் கதைகளுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதனாலேயே கவின், மணிகண்டன், அர்ஜுன் தாஸ் போன்ற நடிகர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றனர். எந்த மொழிப்படமானாலும், எவ்வளவு பெரிய பட்ஜெட் என்றாலும் கதை நன்றாக இல்லையென்றால் வெற்றி என்பது எட்டாக்கனிதான்.

Updated On 28 May 2024 12:06 AM IST
ராணி

ராணி

Next Story