ஒரு படத்தை பார்க்கும்போது அந்த கதையுடன் நம்மை உணர்ச்சிப்பூர்வமாக ஒன்ற வைப்பதில் ஒலிக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. எப்பேர்ப்பட்ட ஹாரர், த்ரில்லர் கதைகளைக்கூட மியூட் செய்துவிட்டு பார்த்தால் பயமே இருக்காது. ஒரு விஷுவலுக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது ஒவ்வொரு கேரக்டருக்கும் கொடுக்கப்படும் குரல். திரையின்முன்பு முகத்தில் உணர்ச்சிகளைக்காட்டி நடித்தாலும் அதே உணர்ச்சியை குரலிலும் கொண்டுவந்தால்தான் ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் இருக்கும். ஆனால் நாம் அனைவரும் திரையில் பார்ப்பதுபோன்று ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. டப்பிங் செய்யும்போது நடித்துக்கொண்டே செய்தால்தான் உணர்ச்சிகள் நன்றாக வரும் என்கிறார் வளர்ந்துவரும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மீனா ராஜா. டப்பிங் செய்வதில் உள்ள சவால்கள் குறித்தும், அதிலுள்ள சுவாரஸ்யங்கள் குறித்தும் நம்முடன் அவர் உரையாடுகிறார்.
டப்பிங் என்று சொன்னாலே நிறையப்பேருக்கு சந்தேகம் இருக்கும். மற்ற மொழிப்படங்களை தமிழுக்கு கொண்டுவரும்போது என்னென்ன மாதிரியான வேலைகளை செய்வார்கள்?
வேறு மொழிப்படங்களை தமிழில் டப் செய்தால் அதற்கு பின்பு டப்பிங் டைரக்டர், சவுண்டு என்ஜீனியர், சவுண்டு மிக்ஸிங், எஃபெக்ட்ஸ், ஆம்பியன்ஸ் என டப்பிங்கைத் தாண்டி நிறைய வேலைகள் இருக்கும். இதில் 2,3 ஸ்டெப்ஸ் முடித்தபிறகுதான் டப்பிங்கே செய்வார்கள். டப்பிங் என்பது வெறும் குரல் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. அதுவும் கிட்டத்தட்ட ஒரு நடிப்புதான். உதாரணத்திற்கு, நான் டப்பிங் பேசவந்த ஆரம்பகாலத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு டப் செய்தேன். அந்த படத்தில் மாஸ்க்கை கழட்டி, நான்தான் செய்தேன் என்று சொல்லி வில்லத்தனமாக ஒரு சிரிப்பு சிரிப்பார். அந்த சீன் எனக்கு வரவே இல்லை. அதற்கு ஒரு 10,15 டேக் போனோம். என்னை அதேபோன்று சிரிக்க வைப்பதற்கு டப்பிங் டைரக்டர், சவுண்டு என்ஜீனியர் இருவரும் மிகவும் சிரமப்பட்டார்கள். ஒரு கேரக்டருக்கு 50% நடிப்பு என்றால் 50% டப்பிங்கில்தான் உயிர்கொடுப்பார்கள். குரல் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று கிடையாது. நடிப்பும் தேவை.
பிற மொழிப்படங்களை தமிழில் டப் செய்யும்போது இந்த நடிகருக்கு இந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்?
ஒவ்வொருவரின் குரலும் மாறுபடும் என்பதால் நடிகர்களின் வயது மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளின் குரலின் தன்மைக்கு ஏற்ப கேரக்டர்கள் தீர்மானிக்கப்படும். பெரும்பாலும் நடிகர்களின் சொந்த குரலுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிற குரல் இருப்பவர்கள்தான் டப்பிங் செய்வார்கள். பெரிய நடிகர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கு முன்பு, சுமார் 5 குரல்கள் ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்டு, அதில் இரண்டை செலக்ட் செய்து, கடைசியாக ஒன்றை தீர்மானிப்பார்கள். இப்படி குரலை தேர்ந்தெடுக்கவே 2,3 நாட்கள் ஆகும்.
மிஸ்டர்.செலிபிரிட்டி படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு வாய்ஸ் கொடுத்த அனுபவத்தை பகிர்ந்த மீனா
மிமிக்ரி செய்பவர்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகமுடியுமா?
மிமிக்ரி வேறு, டப்பிங் வேறு. மிமிக் செய்யும்போது ஒரிஜினாலிட்டி இருக்காது. ஒரு ஆர்ட்டிஸ்ட்டை போன்றே செய்துகாட்டலாம். அது நன்றாக இருக்கும்.
தமிழ் படத்தை தவிர வேறு எது எதற்கெல்லாம் டப்பிங் செய்திருக்கிறீர்கள்?
அனிமேஷன் கார்ட்டூன்களில் 2, 3 கேரக்டர்களுக்கு பேசியிருக்கிறேன். வெப் சீரிஸ்களில் மிஸ்டர் செலிப்ரிட்டி, பொலிமேரா போன்ற பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பேசியிருக்கிறேன். இதுவரை தியேட்டர்களில் ரிலீஸான படங்களுக்கு டப்பிங் செய்ததில்லை. அதற்காக முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் செய்வேன்.
டப்பிங் கொடுப்பதற்கு முன்பு முழு கதையையும் கேட்டுவிட்டுத்தான் டப் செய்வீர்களா? அல்லது உங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் குறித்து மட்டும் கேட்பீர்களா?
இதில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பே கொடுக்கமாட்டார்கள். மேலும் ஒரு படத்தை முழுவதும் காட்டவும் மாட்டார்கள். நாம் டயலாக் பேசவேண்டிய பகுதியை மட்டும்தான் கட் கட்டாக காட்டுவார்கள். உதாரணத்திற்கு நான் பொலிமேராவில் ஒரு கேரக்டருக்கு டப்பிங் செய்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனது, அடுத்து கர்ப்பமானார்கள், அடுத்து குழந்தையும் பிறந்தது, அதன்பிறகு அந்த கேரக்டரையே காணோம். உடனே நான் சவுண்டு என்ஜீனியரிடம் அந்த கேரக்டர் எங்கே என்று கேட்டேன். அதற்கு, எப்போதோ அவர் செத்துட்டாங்க என்று சொன்னார். அதேமாதிரித்தான் Jujutsu Kaisen என்ற கார்ட்டூன் சீசன் 2 ஸ்டோரிக்கு டப்பிங் கொடுத்தபோதும் மொத்தம் 59 எபிசோடுகள் இருந்தன. அவை அனைத்திலுமே 32 எபிசோடுகளில் மட்டும்தான் என்னுடைய பகுதிகள் இருந்தன. அதை மட்டும்தான் எனக்கு காட்டினார்கள். ஒவ்வொரு டயலாக் பேசும்போது அந்தந்த மொழிகளில் கேட்டு, அந்த மாடுலேஷனுக்கு ஏற்ப தமிழில் எப்படி டயலாக் வைத்துக்கொள்ளலாம் என கலந்தாலோசித்து பண்ணுவோம். ஒரு சில சீன்களுக்கு அரை மணிநேரத்துக்கும் மேல் டப்பிங் செய்வதும் உண்டு.
கார்ட்டூன் கேரக்டருக்கு குரல் கொடுப்பதில் இருக்கும் சிரமங்கள்
ஒரு வெப் சீரிஸுக்கு டப்பிங் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்?
நாம் பேசுவதற்கு தயாராக இருந்தாலும் பல நேரங்களில் குரல் ஒத்துழைக்காது. என்னுடைய கேரக்டருக்கு 50, 60 எபிசோடுகள் இருந்தாலும் அதிகபட்சமாக ஒரு நாளில் 12 எபிசோடுகளுக்கு பேசியிருக்கிறேன். அதற்கு மேல் பேசுவதற்கு குரலும், எனர்ஜியும் ஒத்துழைக்காது. ஏனென்றால் கார்ட்டூன்களுக்கு பேசும்போது கத்த வேண்டும், சத்தம்போடவேண்டும், மான்ஸ்டர் போன்றெல்லாம் கத்தவேண்டி இருக்கும். அப்படி பேசும்போது 2 எபிசோடுகளிலேயே சோர்வடைந்துவிடுவேன்.
வெப் சீரிஸுக்கு டப் செய்யும்போது முழுக்கதையையும் சொல்லிவிடுவார்களா?
கதையே சொல்லமாட்டார்கள். ஒருசில டப்பிங் ஸ்டூடியோக்களில் படத்தின் பெயரைக்கூட சொல்ல யோசிப்பார்கள்.
இதுவரை நீங்க செய்த டப்பிங்கிலேயே உங்களுக்கு பிடித்தது எது?
வரலட்சுமி சரத்குமாருக்கு செய்ததுதான். எனக்கு கஷ்டமாக இருந்ததும் அந்த வாய்ஸ்தான். பிடித்து பண்ணியதும் அதுதான். கதையும் நன்றாக இருந்தது. வரலட்சுமிக்குத்தான் நான் டப்பிங் செய்துகொண்டிருக்கிறேன் என்பதே சிறிது நேரத்திற்கு பிறகுதான் எனக்கு தெரிந்தது.
மீனா ராஜாவுக்கு பிடித்தமான ஆடியோ புத்தகம் பொன்னியின் செல்வன்
யாராவது செலிப்ரிட்டீஸ் உங்களுடைய குரலுக்கு வாழ்த்து தெரிவித்ததுண்டா?
ஆடியோ புத்தகங்களுக்கு பாராட்டுகள் வந்ததுண்டு. நடிகர், நடிகைகளை நான் நேரில் பார்த்ததே இல்லை. அப்படியிருக்கையில் அவர்களிடமிருந்து எப்படி பாராட்டு வரும்?
ஆடியோ புத்தங்கள் பற்றி சொல்லுங்கள்!
இப்போது புத்தகங்கள் படிப்பது கணிசமாக குறைந்துவிட்டது. படங்கள் பார்ப்பதற்கு அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்கள் இருப்பதுபோன்று ஆடியோ புத்தகங்களுக்கும் குக்கூ எஃப்.எம், பாக்கெட் எஃப்.எம், மிர்ச்சி பிளஸ் என நிறைய இருக்கின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான ஆடியோ புக்ஸ் இருக்கின்றன. உதாரணத்திற்கு, பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் போன்ற புத்தகங்களை நமக்கு தெரியும். ஆனால் அவற்றையெல்லாம் ஆடியோ வடிவில் மாற்ற, அந்த கதையை ஸ்க்ரிப்ட்டாக மாற்றி, டயலாக்குகளுக்கெல்லாம் உணர்ச்சிகள் கொடுத்து, மியூசிக், ஆம்பியன்ஸ் எல்லாம் கொடுத்து ஆடியோ புத்தகங்களாக வெளியிடுவர். அதையும் லட்சக்கணக்கான மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆடியோ புத்தகங்களுக்கு பேசியது பற்றி பகிர முடியுமா?
இதுவரை கிட்டத்தட்ட 600 ஆடியோ புத்தகங்கள் பேசியிருக்கிறேன். அதில் உண்மைக்கதைகள், புனைக்கதைகள் என நிறைய இருக்கும். புனைக்கதைகளில் காதல், குற்றம், திரில்லர், ஹாரர் என நிறைய இருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் பொன்னியின் செல்வன் மிகவும் பிடிக்கும்.
