ஓஹோ எந்தன் பேபி… வாராய் எந்தன் பேபி.. இந்த பாடலை எப்படி அவ்வளவு எளிதாக மறந்து கடந்து போய்விட முடியாதோ அதேபோன்றுதான் அப்பாடலில் வரும் நடிகை வைஜெயந்திமாலாவையும் எளிதாக கடந்து போய்விட முடியாது. மெலிந்த தேகம், நீள்வடிவ முகம், கூர்மையான நாசி என அபாரமான அழகுடன், அழகே பார்த்து பொறாமைப்படும் பேரழகியாக பாலிவுட்டில் வலம் வந்த இவர், தொட்டு பார்க்காத உயரங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி, வங்க மொழி என 21 ஆண்டுகள் திரையுலகிலும், 15 ஆண்டுகள் அரசியல் களத்திலும் கோலோச்சி இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக பார்க்கப்படும் வைஜெயந்திமாலா, நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் கை தேர்ந்தவர். அதற்கு உதாரணமாகதான் வைஜெயந்திமாலா தனது 90-வது வயதிலும் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை நிகழ்வுக்கு பின்னர் ஜனவரி 27 முதல் 45 நாட்களுக்கு நடைபெற்ற ராக சேவா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடி, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தார். 90 வயதிலும் அபிநயம் குறையாமல், அவர் ஆடிய அற்புத நடன அசைவுகள் சமூக ஊடகங்களில் தீயாய் பரவி அவரது ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அப்படிபட்ட புகழ்வாய்ந்த நட்சத்திரமான வைஜெயந்திமாலா இன்று(13.8.24) தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், வைஜெயந்திமாலா யார்? அவர் கலைத்துறைக்குள் வந்து நிகழ்த்திக்காட்டிய சாதனைகள் என்ன? தற்போதும் நடனத்தை விடாமல் ஆடி ரசிக்க வைப்பது எப்படி? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
நளின சுந்தரியின் தொடக்க காலம்
நாட்டிய பேரொளி பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா
தமிழ் திரையுலகில் 1950 மற்றும் 60-களில் நடிக்கவரும் நாயகிகள் பெரும்பாலும் நடனத்தில் அதாவது பரதக் கலையில் புகழ் பெற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பர். அந்த வகையில் நாட்டிய பேரொளி பத்மினிக்கு அடுத்ததாக புகழ் பெற்றது நடிகை வைஜெயந்திமாலாதான். ஆடலழகி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட இவர், 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று எம்.டி.ராமன் - வசுந்தரா தேவி தம்பதியருக்கு மகளாக சென்னை திருவல்லிக்கேணியில் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரின் அம்மா வசுந்தரா தேவியும் 1940-களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர். நடிப்பு மட்டுமின்றி சாஸ்திரிய சங்கீதம், பரதநாட்டியம் ஆகியவற்றிலும் திறமையாளராக வலம் வந்தவர். இதனால், வைஜெயந்தியின் பாட்டி யதுகிரி தேவி தன் மகளை போன்றே பேத்தியையும் அனைத்து கலைகளிலும் முன்னிலை படுத்த வேண்டும் என்று வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனமும், மனக்கல் சிவராஜா ஐயரிடம் கர்நாடக சங்கீதமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னெடுக்க, அதன்படி அவரும் அனைத்தையும் கற்று தேர்ந்தார். இதற்கிடையில், பள்ளி கல்வியையும் விட்டுவிடாது சென்னை சேக்ரட் ஹார்ட் மற்றும் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார். “தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும்” என்று கூறுவார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக வைஜெயந்தியும் பரதம் மற்றும் கர்நாடக சங்கீதம் இரண்டையும் நன்கு கற்றுத் தேர்ந்து 13-வது வயதில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
‘வாழ்க்கை’ திரைப்படத்தில் வைஜெயந்தியை நாயகியாக அறிமுகம் செய்துவைத்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
இந்த அரங்கேற்றத்தை காண வந்திருந்த அவிச்சி என்றழைக்கப்படும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், வைஜெயந்தியின் நடனத்தை பார்த்து வியந்து, தான் எடுக்க இருந்த ‘வாழ்க்கை’ என்ற படத்தில் நடிக்க வைக்க கேட்க, குடும்பத்தினர் முதலில் யோசித்தாலும், பிறகு செட்டியாரின் வற்புறுத்தலால் மகளை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்தனர். பெற்றோரின் ஆதரவுடன் இப்படத்தில் மோகனா என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமான வைஜெயந்திக்கு 2 ஆயிரத்து 350 ரூபாய், முதல் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். 1949-ஆம் ஆண்டு வெளியான ‘வாழ்க்கை’ படம் வைஜெயந்திக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதே படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் எடுக்க அங்கும் வெற்றிப்படமாக அமைந்து அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதனால் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று உயர பறக்க ஆரம்பித்தார். அதிலும் தமிழை விட ஹிந்தியில் முன்னணி நட்சத்திரமாக மாறி அங்கு தன் முத்திரையை பதித்தது மட்டுமின்றி பாலிவுட் குயினாகவே மாறிப்போனார். இந்தியில் பிஸியான நாயகியாக வலம் வர ஆரம்பித்த அந்த நேரம்தான் தமிழில் மீண்டும் மூன்று வருட இடைவேளைக்குப் பிறகு ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினியுடன் இணைந்து நடித்தார்.
திரையில் சாதுரியம் பேசிய நாயகி
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் “கண்ணும் கண்ணும் கலந்து” பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்த பத்மினி, வைஜெயந்தி
ஜெமினி ஸ்டுடியோவின் பிரம்மாண்ட படைப்பாக கருப்பு வெள்ளையில் உருவாகி 1958-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’. ஜெமினிகணேசன் மற்றும் நாட்டிய பேரொளி பத்மினியுடன், மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வைஜெயந்திக்கு இப்படம் தமிழில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. அதிலும் இப்படத்தில் வைஜெயந்தி மற்றும் பத்மினியின் “கண்ணும் கண்ணும் கலந்து” என்ற போட்டி நடனம் ரசிகர்களை வாய் பிளக்க செய்தது மட்டுமின்றி பார்த்தவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தியது. ஏறக்குறைய, ஒன்பது நிமிடங்கள் பத்மினியும், வைஜெயந்தியும் ஆடிய ‘சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி…’ பாடல் நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும் வகையில் படமாக்கப்பட்டது மட்டுமின்றி, வைஜயந்தியின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான நடன பாடலாகவும் இன்றுவரை இருந்து வருகிறது. இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் இப்படத்திற்கு பிறகு கிடைத்த வரவேற்பால் தமிழிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி நாகேஸ்வரராவுடன் ‘அதிசய பெண்’, சிவாஜி கணேசனுடன் ‘ராஜ பக்தி’, ‘இரும்புத்திரை’, ‘சித்தூர் ராணி பத்மினி’, மீண்டும் ஜெமினி கணேசனுடன் ‘பார்த்திபன் கனவு’, ‘தேன் நிலவு’, எம்.ஜி.ஆருடன் ‘பாக்தாத் திருடன்’ என வரிசையாக நடிக்க, அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்தன.
'மாப்பிள்ளை' திரைப்படத்தில் ஸ்ரீவித்யா நடித்த வேடத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட வைஜெயந்திமாலா
இதனை தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியவர், அங்கு நடிப்பதோடு மட்டும் நின்றுவிடமால், தான் நடித்த ‘சங்கம்’, ‘லீடர்’ ஆகிய படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றினார். மேலும் பெங்காலியில் ‘ஹேடி பஸாரே’ என்ற திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி “செயே தாகி செயே தாகி” என்ற பாடலை பாடி பாடகியாகவும் முத்திரை பதித்தார். இதுதவிர 1982-ஆம் ஆண்டு ராம்ஜி, ஸ்ரீ பிரியா, மேனகா நடித்து வெளிவந்த ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இப்படி சினிமாவில் பல தடங்களை பதித்து வெற்றி கண்ட வைஜெயந்தி தமிழில் கடைசியாக நடித்த படம் ‘சித்தூர் ராணி பத்மினி’. இப்படத்திற்கு பிறகு 26 ஆண்டுகள் கழித்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில், தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1989-ஆம் ஆண்டு வெளிவந்த 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடிக்க வைஜெயந்திக்கு அழைப்புவிடுக்கப்பட்டதாம். அதிலும் ரஜினிக்கு மாமியாராக ஸ்ரீவித்யா நடித்திருந்த ராஜேஸ்வரி என்ற அதிகாரம் மிக்க வேடத்திற்குத்தான் கேட்கப்பட்டதாம். ஆனால், வைஜெயந்தியோ எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லை. அப்படி நடித்தால் இதுவரை இல்லாத ஒரு நேரெதிரான இமேஜ் எனக்கு அமைந்துவிடும். அதனால் விட்டுவிடுங்கள் என்று அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதற்கு பிறகுதான் ஸ்ரீவித்யா அந்த வேடத்தில் நடித்தாராம்.
அரசியலிலும் சாதித்த வைஜெயந்தி
கணவர் பாலியுடன் வைஜெயந்தி - குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் “பத்ம விபூஷண்” விருது பெற்ற தருணம்
தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட் சென்று தென்னிந்திய நட்சத்திரம் என்ற அந்தஸ்து பெற்ற முதல் நடிகையான இவர், தான் நடித்த படங்களில் ‘பரதம்’, ‘குச்சுப்புடி’, ‘கதகளி’, ‘நாட்டுப்புற நடனம்’ என்று தன்னிடம் இருந்த மொத்த திறமைகளையும் கொட்டி, கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வெற்றிநடை போட்டார். 1968-ஆம் ஆண்டு சமன்லால் பாலி என்பவரை திருமணம் செய்துகொண்டு "வைஜெயந்திமாலா பாலி" என ஆனார். இவர்களின் திருமண பந்தத்திற்கு அடையாளமாக சுசீந்திர பாலி என்றொரு மகனும் உள்ளார். திருமணம், குழந்தை என்று ஆன பிறகு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி திரைப்படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். 1970-களுக்குப் பிறகு முழுமையாகவே திரையுலகில் இருந்து ஒதுங்கினார். அதன்பிறகு தனக்கு மிகவும் பிடித்த நடனத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்த நேரத்தில்தான், வேறொரு களத்தை தேர்வுசெய்து அதில் பயணிக்க முடிவுசெய்து, 1984-ஆம் ஆண்டு தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். திரையில் இருந்து விலகி 14 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்தவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது மட்டுமின்றி அந்த வருட பாராளுமன்ற தேர்தலிலும் தென்சென்னை தொகுதி வேட்பாளராக களமிறக்கியது. அதில் வெற்றி வாகை சூடிய வைஜெயந்தி, மக்கள் விருப்பப்படி நாடாளுமன்றம் சென்று தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் மீண்டும் 1989-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு அப்போதும் வெற்றி பெற்றார். திரைத்துறையை போன்றே அரசியல் களத்திலும் வெற்றிமேல் வெற்றி பெற்ற வைஜெயந்தி, 1999-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபாவில் மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே ஆண்டில் பாஜக -வில் இணைந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு 90-வது வயதில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி அன்று “பத்ம விபூஷண்” விருது அறிவிக்கப்பட்டது. அதற்காக தனது மகன் சுசீந்திர பாலியுடன் டெல்லி சென்றவர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார்.
90-வது வயதில் 'ராக் சேவா' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பரதநாட்டியம் ஆடிய தருணம்
அதற்கு முன்பாக ஜனவரி மாதம் அயோத்தி ராமர்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பல கலைஞர்கள் இணைந்து வழங்கிய 'ராக் சேவா' என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற வைஜெயந்திமாலா அங்கு பரதநாட்டியம் ஆடி, வந்திருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார். 90 வயதில் நளினம் மாறாமல் அவர் ஆடிய அந்த நடனத்தைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். அவரின் பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. 1986-ஆம் ஆண்டு கணவர் மறைந்த பிறகு முழுக்க முழுக்க மகன் சுசீந்திர பாலியின் அரவணைப்பில் சென்னையிலேயே வசித்துவரும் வைஜெயந்திமாலா பாலி, இன்று தனது 91-வது பிறந்தநாளை கொண்டாகிறார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத அங்கமாக, இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக பார்க்கப்படும் வைஜெயந்தி இன்னும் 100 ஆண்டுகளை கடந்து நலமுடன் பயணிக்க வாழ்த்துவோம்.