இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காதல், ஆக்‌ஷன், ட்விஸ்ட், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் ஒரே படத்தில் அதுவும் பெரிய ஸ்டாரின் படத்தில் இடம்பெற்றால் ரசிகர்களின் உற்சாகத்தை சொல்லவா வேண்டும்? அப்படி உலகம் முழுக்க சமீபத்தில் வெளியாகி உள்ள திரைப்படம்தான் விஜய்யின் ‘தி கோட்’. பொதுவாகவே வெங்கட் பிரபு இயக்கம் என்றாலே படத்தின்மீதும் கதையின்மீதும் அதிக எதிர்பார்ப்பு உருவாகும். அதற்கு ‘சென்னை -28’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘மாநாடு’ போன்றவை சிறந்த உதாரணங்கள். ஏனென்றால் படத்தில் பல சர்ப்ரைஸ்களையும் கடைசி நொடிவரை பல ட்விஸ்டுகளையும் தனது கதைகளில் எப்போதும் வைத்திருப்பார். வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் 400 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்பதாலேயே ‘கோட்’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 5ஆம் தேதி படம் ரிலீசானது. குறிப்பாக, முழுநேர அரசியலில் இறங்கியிருக்கும் விஜய், இன்னும் ஒருபடம்தான் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதனாலேயே கோட் படத்தில் என்னென்ன மாதிரியான காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கும் இப்படத்தில் AI தொழில்நுட்பம் மற்றும் டீ-ஏஜிங் டெக்னாலஜி போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது படம் வெளியாவதற்கு முன்பே அனைவரும் அறிந்தது. இந்நிலையில் ‘கோட்’ திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள மற்ற சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.

‘கோட்’ படம் எப்படி இருக்கு?

படத்தில் மூன்று விஜய் என்று சொல்லப்பட்ட நிலையில், அப்பா - மகன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2008 காலகட்டம் தொடங்கி 2024வரை நடக்கும் நிகழ்வுகளை எப்போதும்போல Non-Linear பாணியில் தந்திருக்கிறார் வெங்கட்பிரபு. அப்பா காந்தி - மகன் ஜீவன் என வயதான மற்றும் இளம்வயது கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார். காந்தியின் நண்பர்களாக சுனில் கதாபாத்திரத்தில் பிரசாந்தும், அஜய் கதாபாத்திரத்தில் அஜ்மலும், கல்யாண் கதாபாத்திரத்தில் பிரபு தேவாவும் நடித்துள்ளனர். அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா, வில்லனாக மோகன், அதுபோக, மீனாட்சி சௌத்ரி, லைலா, ஜெயராம், யோகிபாபு, பிரேம்ஜி என படத்தில் ஸ்டார்களுக்கு பஞ்சமில்லை. SATS என அழைக்கப்படும் Special Anti Terrorism Squad-ஐ சேர்ந்தவர்களான காந்தி, சுனில், கல்யாண், அஜய் ஆகியோர் இந்திய நாட்டிற்காக உளவு பார்த்து எதிரிகளை அழிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாதியான மேனனை (மோகன்) கென்யாவில் வைத்து ரயில் விபத்தின்போது தீர்த்துகட்டுகிறது இந்த குழு. அதன்பின் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சென்ற சமயத்தில் தனது 4 வயது மகன் ஜீவனை தொலைத்துவிடுகிறார் காந்தி. அந்த மகனும் விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுகின்றனர்.


‘கோட்’ படத்தில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரங்களில் விஜய்

அதன்பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மாஸ்கோவில் வைத்து தனது மகன் ஜீவனை சந்திக்கும் காந்திக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மோதலும் பாசப் போராட்டமுமாக கதை நகர்கிறது. கதையில், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோருக்கும் சில முக்கியமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறிதுநேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கின்றன. குறிப்பாக, படத்தில் பல சஸ்பென்ஸ் சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. சினிமாவிலிருந்து விடைபெறுவதாலோ என்னவோ விஜய் தனது முழு நடிப்புத் திறமையையும் இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அப்பா கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு பொறுமையையும், நிதானத்தையும் நடிப்பில் காட்டுகிறாரோ அதே அளவிற்கு மகன் கதாபாத்திரத்தில் இளமை, துள்ளல் மற்றும் துடிப்பை அசால்ட்டாக காட்டியிருக்கிறாராம். கடந்த சில படங்களில் இருந்த விஜய்க்கும் ‘கோட்’ படத்தில் இருக்கும் விஜய்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக பல பத்திரிகைகள் பாராட்டிவருகின்றன.

சிறப்பாக கையாளப்பட்ட டெக்னாலஜிஸ்?

சமீபத்தில் வெளியான மற்ற படங்களைவிட ‘கோட்’ படம் அதிகமாக பேசப்பட்டதற்கு காரணமே அந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டீ-ஏஜிங் டெக்னாலஜிதான். ப்ளாக் & வொயிட் காலத்திலிருந்தே சினிமாக்களில் இரட்டை வேடம் என்பது இருக்கிறது. ஆனால் அதில் நடை, உடை, பாவனைகள் மற்றும் கெட்டப்களில்தான் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்குமே தவிர, உருவத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. டெக்னாலஜி வளர வளர ப்ராஸ்தட்டிக் மேக்கப்புடன் VFX-ஐ பயன்படுத்தி சற்று வித்தியாசம் காட்டப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளில் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது டீ-ஏஜிங் டெக்னாலஜி. இந்த டெக்னாலஜி மூலம் வயதான ஒருவரின் இளமை தோற்றத்தை திரையில் கொண்டுவர முடியும். டீப் ஃபேக் அல்லது டீ-ஏஜிங் டெக்னாலஜியானது எப்படி செய்யப்படுகிறது? என்று பார்த்தோமானால், டீ-ஏஜிங் செய்யப்படும் நபரின் முகத்தில் மார்க்கரால் நிறைய புள்ளிகளை வைப்பார்கள். பிறகு தலையில் ஹெல்மட் ஒன்றை மாட்டிவிடுவார்கள். அதில் பல சென்சார்கள் இருக்கும். அந்த நபர் முகப் பாவனைகளை மாற்றும்போது, மார்க்கர் புள்ளிகளின் அசைவுகளை, சென்சார்கள் கேப்ச்சர் செய்துகொள்ளும். இதனைத்தான் CGI இமேஜாக மாற்றி அந்த நபரின் டீ-ஏஜிங் என்று சொல்லக்கூடிய இளம்வயது தோற்றத்தை உருவாக்குவார்கள். இப்படித்தான் ‘கோட்’ திரைப்படத்தில் 3டி டீ-ஏஜிங் VFX செய்யப்பட்டிருக்கிறது. அதன்மூலம் இளம்வயது விஜய்யை மீண்டும் திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘நாளைய தீர்ப்பு’, ‘செந்தூரப் பாண்டி’ போன்ற படங்களில் பார்த்து ரசித்த 20 வயது இளைஞன் விஜய்யை ஜீவன் என்ற கதாபாத்திரம்மூலம் மீண்டும் நம் கண்முன் நிறுத்துகிறது ‘கோட்’.


‘கோட்’ படத்தை போன்றே ‘விக்ரம்’ படத்திலும் டீ-ஏஜிங் செய்யப்பட்டது குறித்து பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

ஏற்கனவே பல ஹலிவுட் படங்களில் இந்த டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ‘தி ஐரிஷ் மேன்’ படத்திற்கு பிறகுதான் இதுகுறித்து பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக, ‘ஜெமினி மேன்’ திரைப்படத்தில் வில் ஸ்மித்தின் இளம்வயது கதாபாத்திரத்தை இந்த டெக்னாலஜியைக்கொண்டுதான் உருவாக்கியிருந்தார்கள். அந்த படத்தை பார்த்து ஈர்க்கப்பட்டதால்தான் தனது படத்திலும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்த முடிவெடுத்ததாக வெங்கட்பிரபுவும் கூறியிருக்கிறார். இந்த படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்ஸிடம் சொன்னபோது, அவர்களுக்கும் பிடித்துப்போனதால் மொத்த படக்குழுவே இந்த டெக்னாலஜிக்காக அமெரிக்கா சென்றது. முதலில் ‘ஜெமினி மேன்’ படத்திற்கு டீ-ஏஜிங் செய்த நிறுவனத்தை அணுகி இதுகுறித்து விசாரித்தபோது, போதுமான நேரம் கிடைக்காததால், அதேபோன்றதொரு பெரிய நிறுவனமான லோலா VFX-ஐ அணுகியிருக்கிறது படக்குழு. டீ-ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யை காண ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது ‘ஸ்பார்க்’ பாடல். அந்த பாடலில் காட்டப்பட்ட விஜய்யின் டீ-ஏஜிங் லுக் விஜய் போன்றே இல்லை என ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்க, அதனை ஏற்றுக்கொண்ட படக்குழு மீண்டும் அதனை சரிசெய்து ட்ரெய்லரை வெளியிட்டது. குறிப்பாக, விஜய்யின் மூக்கு மற்றும் தாடை போன்றவை விஜய் போன்றே இல்லை என கூறிய நிலையில் அது முழுமையாக சரிசெய்யப்பட்டதாக படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் தெரிவித்தனர். இந்த டீ-ஏஜிங் டெக்னாலஜிக்காக மட்டும் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 25% செலவழித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி. இதற்கு முன்பே கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்திலும் டீ- ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி எடுக்கப்பட்டது. ஆனால் அது படத்தில் இடம்பெறவில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இருப்பினும் அந்த காட்சிகளை விரைவில் தனியாக வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார்.


‘கோட்’ படத்தில் கேப்டன் பிரபாகரனாக மறைந்த நடிகர் விஜயகாந்த்

டீ-ஏஜிங் தவிர, படத்தில் கவனம் ஈர்த்த மற்றொரு கதாபாத்திரம் மறைந்த நடிகர் விஜயகாந்த். இவருக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின்மூலம் மீண்டும் திரையில் உயிர்கொடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே விஜயகாந்த் இப்படத்தில் இடம்பெறுகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவரை இழந்துவிட்ட நிலையில், இப்படம் அனைவருக்கும் ஒரு சென்டிமென்ட்டாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. விஜயகாந்தை எந்த கெட்டப்பில் பார்க்கப்போகிறோம் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் வெங்கட்பிரபு குறைவைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. AI டெக்னாலஜிமூலம் சில நிமிடங்கள் மட்டுமே கேப்டன் பிரபாகரனாக வரும் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ‘கோட்’ படத்தில் விஜயகாந்த் கேரக்டரை போஸ்டராக வெளியிட்டிருக்கிறது ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மென்ட்.

திரைத்துறைக்குள் விஜய் நுழைந்த ஆரம்பகாலங்களில் அவரை ஒரு நடிகராகவே மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கியபோது, கைகொடுத்து தூக்கிவிட்டவர் விஜயகாந்த். அந்த வகையில் இப்படத்தை அவரிடம் காட்டி ஆசிபெறவேண்டும் என படக்குழு நினைத்திருந்ததாகவும், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதால் அவருடைய குடும்பத்தினரை அழைத்து காட்டியதாகவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியிருந்தார். டீ-ஏஜிங் மற்றும் AI தவிர, தேவையான இடங்களில் நிறைய VFX காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. உலகின் பல நாடுகளுக்கு நகரும் இப்படத்தின் கதைக்கேற்ப கேமிராவை சிறப்பாக கையாண்டு எங்கெல்லாம் டெக்னாலஜி தேவையோ அதற்கெல்லாம் வழி அமைத்து கொடுத்திருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி.


விஜய் ரசிகர்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபுவின் சர்ப்ரைஸ்கள்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா வெங்கட் பிரபு?

டெக்னாலஜி போக, விஜய்யின் அரசியல் குறித்து ஏதேனும் டயலாக்குகள் இடம்பெறுமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிறப்பான சம்பவத்தை செய்துகொடுத்திருக்கிறாராம் வெங்கட்பிரபு. அதுதான் கார் நம்பர் TN 07 CM 2026. 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த சி.எம் எங்கள் விஜய் அண்ணாதான் என கூறிவருகின்றனர் ரசிகர்கள். அவர்களை குஷிபடுத்தும்விதமாக விஜய்யின் கார் எண்ணை CM 2026 என வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. இதேபோன்று, சினிமாவை விட்டு வெளியேறும் விஜய்க்கு இந்த படம் ஒரு tribute போன்று அமைந்திருப்பதாகவும், அதனாலேயே ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற சில காமெடி காட்சிகள், உடல்மொழி மற்றும் நடனம் ஆகியவற்றை இந்த படத்திலும் வைத்திருப்பதாக கூறுகின்றன விமர்சனங்கள். அதுபோக, அஜித்தின் பாடல்களையும் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் வெங்கட்பிரபு. என்னதான் பல ட்விஸ்டுகள் படத்தில் இருந்தாலும் முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லை என்கின்றனர் பலர். வெங்கட் பிரபு படம் என்றாலே கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் இருக்கும், ஆனால் இந்த படத்தில் இரண்டாம் பாதியை எளிதில் ஊகிக்கமுடிகிறது என்கின்றனர். படத்தின் நீளத்தை க்ளைமாக்ஸில் குறைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். உலகம் முழுவதும் படம் சுற்றிவந்தாலும் கடைசியில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக அமைகிறது. அதேசமயம் கிட்டத்தட்ட அரைமணிநேரம் அதே இடத்தில் சுற்றி சுற்றி நகரும் காட்சிகள் சற்று சலிப்பூட்டுவதாக கூறுகின்றனர்.


‘கோட்’ படத்தில் யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் - ரசிகர்கள் கருத்து

பழைய யுவன் எங்கே?

வெங்கட் பிரபு -யுவன் கூட்டணி என்றாலே மியூசிக் பின்னியெடுக்கும். வெங்கட் பிரபு - அஜித் காம்போவில் வெளிவந்த ‘மங்காத்தா’ படம் போன்றே விஜய்க்கும் தரமான சம்பவத்தை யுவன் செய்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். பட ரிலீஸுக்கு முன்பு வெளியான நான்கு பாடல்களுமே எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை சென்றடையவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் பின்னணி இசையில் எப்படியும் யுவன் ஸ்கோர் செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்தாலும் யுவனின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் பாடல், பின்னணி இசை இரண்டுமே அந்த அளவிற்கு எடுபடவில்லை என்றே சொல்லப்படுகிறது. இருப்பினும் தனியாக பார்த்தபோது அவ்வளவு ரசிக்கப்படாத ‘விசில் போடு’ மற்றும் ‘மட்ட’ பாடல்களை படத்துடன் பார்க்கும்போது நன்றாகத்தான் இருப்பதாக கூறுகின்றனர். எப்படியாயினும், விஜய் ரசிகர்களுக்கு ‘கோட்’ ஒரு சிறப்பு விருந்தாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Updated On 16 Sept 2024 11:57 PM IST
ராணி

ராணி

Next Story