1980 மற்றும் 90களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகி ஒருவர் அதிரடி ஆக்சன் நாயகியாக வலம் வந்தார் என்றால் அது நடிகை விஜயசாந்தியாக மட்டும்தான் இருக்க முடியும். தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் மிகவும் பவர்ஃபுல் பெண்மணியாக வலம் வரும் இவர், அன்று தொடங்கி இன்று வரை ஆக்சன் காட்சிகளில் கலக்கிய ஒரே நடிகை என்ற பெருமையை பெற்றவர். தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும், லேடி அமிதாப்பாகவும் அறியப்படும் விஜயசாந்தி, பெண் ஐபிஎஸ் அதிகாரியாக அதிரடி காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதற்கு அவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன 'வைஜெயந்தி ஐபிஎஸ்' என்கிற ஒற்றை திரைப்படமே சாட்சி எனலாம். 58 வயதை கடந்த நிலையிலும் அதே இளமை கொஞ்சும் துள்ளலோடு “வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” எப்படி போனேனோ அப்படியே திரும்பி நடிக்க வந்துருக்கேன்னு சொல்லு என்பதுபோல் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். மீண்டும் ஐபிஎஸ் அதிகாரியாக அதிரடி காட்ட களமிறங்கியுள்ளார். இதுகுறித்த தகவலோடு, விஜயசாந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கிளாமர் குயின் ஆக்சன் நாயகியானது எப்படி?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்தவர்களை பின்னுக்கு தள்ளி, அவர்களுக்கு நிகராக வில்லன்களை பந்தாடிய ஆக்சன் குயினான விஜயசாந்தி, 1966-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த இவரின் குடும்பம் மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுகளும் நிறைந்தது. சிறுவயதில் பாட்டு, படிப்பு என்று இருந்தவருக்கு சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்களை பார்ப்பது என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால், விஜயசாந்தியின் தந்தை முதலில் போய் படம் பார்த்து விட்டு அது குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் என்றால் மட்டும் மற்றவர்களை அழைத்துச் செல்வாராம். இப்படி இருந்த இவரின் தந்தை தன் மனைவியின் சகோதரியான விஜய லலிதா வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்ததை பார்த்து தன்னுடைய மகளையும் ஹீரோயினாக்க ஆசைப்பட்டுள்ளார். இந்த நேரம் பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வர அவரும் சம்மதம் தெரிவித்து 14 வயதிலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
விஜயசாந்தியின் தற்போதைய புகைப்படம் மற்றும் திரையுலகில் துவக்ககால புகைப்படம்
பின்னர் இதே ஆண்டில் தெலுங்கு திரையுலகிலும் காலடி எடுத்து வைத்த விஜயசாந்திக்கு இரண்டு மொழிகளிலும் அவர் அறிமுகமான படம் ஓரளவு கைகொடுக்க. 10-ஆம் வகுப்போடு தனது பள்ளிக் கல்வியை நிறுத்திக்கொண்ட விஜயசாந்தி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ‘நெற்றிக்கண்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘சிவப்பு மல்லி’, ‘இளஞ்சோடிகள்’, ‘நிழல் தேடும் நெஞ்சங்கள்’ என நடித்தார். ஆனால், தமிழை விட இதே காலகட்டங்களில் தெலுங்கு மொழியில் வெளிவந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்க, அங்கு மிகவும் பிசியான நடிகையாக மாறிப்போனார். இதனால் 1984-க்கு பிறகு டோலிவுட்டில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அப்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் தொடங்கி அடுத்த தலைமுறை நடிகர்களான சிரஞ்சீவி போன்றோருடன் ஜோடியாக கவர்ச்சி காட்டி நடித்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இவர் நடித்த ‘நெட்டி பாரதம்’ என்ற திரைப்படம்தான் இவருக்கு சிறந்த நாயகி என்ற அடையாளத்தையும், பிலிம்பேர் போன்ற விருதுகளையும் வாங்கி கொடுத்தது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியால் நாகர்ஜுனா, வெங்கடேஷ் என்று ஒவ்வொரு ஹீரோக்களுடன் கைகோர்த்து நடிக்க ஆரம்பித்தவருக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேர்ந்தது.
‘கர்தவ்யம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக விஜயசாந்தி
அது ஒருபுறம் அவருக்கு சந்தோஷமாக இருந்தாலும், இன்னொருபுறம் வருத்தமாகவும் இருந்தது. காரணம், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் பெண்ணாக வளர்ந்து தமிழில் அறிமுகமான நமக்கு அங்கு எந்த படங்களும் கைகொடுக்கவில்லையே. நமது தாய்மொழியான தமிழ் சினிமாவில் எதுவும் சாதிக்க முடியவில்லையே என்ற வருத்தம்தானாம். இருந்தும் தெலுங்கு சினிமா அவரை விடாமல் புகழின் உச்சாணிக்கொம்பில் கொண்டு அமர வைக்க, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டு விடாமல் தொடர்ந்து ஒரு வெற்றிகரமான நாயகியாக முன்னேறிக்கொண்டே சென்றார். இந்த நேரம்தான் இவரை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் படியாக வந்து அமைந்தது ‘கர்தவ்யம்’ என்ற தெலுங்கு திரைப்படம். கிரண் பேடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில்தான் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்தார் விஜயசாந்தி. இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது டூப் போடாமல் ஒரு ஆணுக்கு நிகரான பலத்துடன் மிகவும் துணிச்சலாக நடித்தவருக்கு, அந்த சமயம் நிறைய காயங்கள் எல்லாம் ஏற்பட்டதாம். இருந்தும் அதற்காக கொஞ்சமும் கலங்காமல், தன் முடிவில் இருந்தும் பின்வாங்காமல் நடித்து ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகினரையும் ஆச்சர்யப்படுத்தினார். அப்படத்தில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் நடித்ததனால்தானோ என்னவோ படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதோடு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
லேடி சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி?
90-களில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகிய இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நிகராக ஒரே பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விஜயசாந்தி
1990-ஆம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், மோகன் காந்தி என்பவரது இயக்கத்தில் தெலுங்கு திரையுலகில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘கர்தவ்யம்’ திரைப்படம், தமிழில் ‘விஜயசாந்தி ஐபிஎஸ்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் தெலுங்கில் ஓடியது போலவே, தமிழிலும் தாறுமாறாக ஓடி வெற்றிபெற்றது. அதுவரை அதிகமாக கிளாமர், குடும்ப பாங்கான வேடம் என்று நடித்து வந்த விஜயசாந்தி, முதல் முறையாக முன்னணி ஹீரோக்களையே தூக்கி சாப்பிடும் விதமாக ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தது, படம் பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனால் இந்தியாவிலேயே வேறு எந்த நடிகைக்கும் இல்லாத வகையில், ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், இப்படத்தில் விஜயசாந்தியின் துணிச்சல் மிக்க நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 1991-க்கு பிறகு, அவரின் சம்பளம் ஒரு கோடியாக உயர்ந்தது மட்டுமின்றி முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன. இதுதவிர அந்த காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் ஒரு கோடி சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் யார் யார் என்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை விஜயசாந்தி ஆகிய மூன்று பேர்தான் என்று 1992-ஆம் ஆண்டு “இந்தியா டுடே" பத்திரிகையில் முதல் அட்டை பக்கத்தில் வெளியான செய்தி அப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு பிறகுதான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் ரசிகர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. இப்படியான ஒரு பட்டத்தை பெற்ற முதல் நடிகை என்ற வரலாற்று சிறப்புமிக்க பெருமையும் விஜயசாந்திக்குத்தான் கிடைத்தது.
'மன்னன்' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விஜயசாந்தி
மேலும் தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்துடன் இணைந்து ‘மன்னன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக, திமிரும், அகம்பாவமும் பிடித்த பெண்ணாக நடித்து ரசிக்க வைத்திருப்பார். அந்தநேரம் இவருக்கான பொறுப்புகள் இன்னும் அதிகமாக கதைகளை கவனமாக தேர்வு செய்து ஒரு நாளைக்கு 6 ஷிஃப்டுகளாக பணியாற்ற ஆரம்பித்தாராம். அதிலும் தெலுங்கு சினிமாக்களில் ஒரு படத்தில், சில காட்சிகளில் மட்டும் விஜயசாந்தி நடித்தால் போதும். அப்படம் வெற்றி பெற்று விடும் என்ற நிலை ஏற்பட, அதனால் கடுப்பான சில முன்னணி நடிகர்கள் தங்களின் படங்களில் விஜயசாந்தியை வேண்டாம் என்று ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். விஜயசாந்தியும் நீங்கள் ஒதுக்கினால் என்ன? எனக்கான கதையை நானே தேர்வு செய்துகொள்கிறேன் என்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அதுவும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த கதைகளில் ஹீரோக்களுக்கு சரி சமமாக மாஸாக நடித்து பணம், புகழ் என்று நும்பர் ஒன் நடிகையாக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’
மீண்டும் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’-ஆக கலக்க வரும் விஜயசாந்தி
திரையுலகில் கலக்கியது போன்று 1998-ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி அரசியலிலும் சாதித்து கலக்கிவரும் விஜயசாந்தி, கடைசியாக 2020-ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடித்து வெளிவந்த "சரிலேரு நீக்கெவரு” என்ற படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு அவர் நடித்திருந்த இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பிறகு மீண்டும் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி பயணித்துவரும் விஜயசாந்தியை மீண்டும் சினிமாவில் போலீஸ் வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். பிரதீப் சிலுகுரி என்பவர் இயக்கத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடித்து வரும் அப்படத்தில் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ ஆக நடிக்கிறார் விஜயசாந்தி. கடந்த ஜூன் 24-ஆம் தேதி, விஜயசாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்படத்தில் விஜயசாந்தியின் அறிமுக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில் 34 வருடங்களுக்கு முன்பு ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ படத்தில் எப்படி நடித்திருந்தாரோ, அதேபோன்று 58-வயதிலும் இளமை கொஞ்சும் துள்ளலோடு அதே வேகத்தில் ‘I Am Back’ என்று மிரட்டலாக நடித்துள்ளார். இதனால் விஜயசாந்தியின் இந்த படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்தாக அமைந்துள்ளது.
THE GLIMPSE ' from our #NKR21 @NANDAMURIKALYAN Garu @saieemmanjrekar @PradeepChalre10 @SunilBalusu1981 #AshokMuppa @AJANEESHB @harie512 @NTRArtsOfficial @AshokaCOfficial pic.twitter.com/PrnTDD5eqJ
— VIJAYASHANTHI (@vijayashanthi_m) June 24, 2024