கருப்பு எம்ஜிஆர்… கருப்பு நிலா… சொக்கத்தங்கம்… ஏழைகளின் அட்சயப் பாத்திரம்.. என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். அவர் செய்த நல்ல காரியங்கள் எல்லாம் இன்று நடிகர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் வரும் “நெஞ்சோடு கலந்திடு உயிரானேன்” என்ற பாடலில் இடம்பெற்ற “காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்… என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்” என்ற வரிகளை போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்திவிட்டது. அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் செய்த நன்மைகளால் காலங்கள் கடந்தும் ஏழைகள் ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அப்படிப்பட்ட இந்த தங்க மகனின் வாழ்க்கையில் மறக்க முடியாத சில ஸ்வாரஸ்ய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
யார் இந்த விஜயராஜ் ?
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அரிசி ஆலை முதலாளியாக இருந்த அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்தான் விஜயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த். சிறுவயதில் இருந்தே சினிமா பார்ப்பதில் ஆர்வம் கொண்ட விஜயகாந்த், எம்ஜிஆரின் படங்களை பார்த்து அவரின் தீவிர ரசிகராக மாறிப்போனார். இதனால் பின்னாளில் நாமும் எம்ஜிஆர் போன்று மிகப்பெரிய நடிகராக மாறிவிட வேண்டும் என்று சினிமா கனவோடு, துணைக்கு தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தரை கூடவே அழைத்துக்கொண்டு 1978-ஆம் ஆண்டு சென்னை வந்து சேர்ந்தார்.
தந்தை அழகர்சாமி மற்றும் விஜயகாந்த்
தயாரிப்பாளர்களால் தூக்கியெறியப்பட்ட விஜயகாந்த்
பெரும்பாலும் பலர் விஜயகாந்தின் அறிமுகப்படம் என்றால் அது ‘இனிக்கும் இளமை’ தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுதான் இல்லை. எந்த ரஜினியை அடையாளமாக வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்னை வந்தாரோ, அதே ரஜினியுடன் ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து 101 ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு நடித்தார். பி.மாதவன் என்பவர் இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு தம்பியாக விஜயகாந்த் நடித்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த 3-வது நாளில் ரொம்ப சூப்பரா நடிக்கிறீங்க என்று பாராட்டப்பட்ட அதே வேளையில், நீங்கள் இப்படத்திற்கு வேண்டாம் என்று தூக்கி வீசவும் பட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த் நேராக தயாரிப்பாளரிடம் சென்று நன்றாக நடிக்கிறேன் என்று பாராட்டிய நீங்கள் திடீரென என்னை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டீர்கள். இதே சென்னையில் நான் வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள் என்று சவால் விட்டுவிட்டு, சென்னை கோடம்பாக்கம் தொடங்கி வளசரவாக்கம் வரை தனது புகைப்படங்களை கொண்டு வாய்ப்பு கேட்டுள்ளார். எல்லோரும் சொன்ன வார்த்தை கருப்பா இருந்தா ரஜினி மாதிரி வந்திடலாம்னு கிளம்பி வந்துடுவீங்களா? என்று புகைப்படத்தை முகத்தில் தூக்கியெறிந்து அவமானப்படுத்தி அனுப்பி வைப்பார்களாம். இப்படி, தான் பட்ட அவமானங்களை எல்லாம் பின்னாளில் வெகுமானங்களாக மாற்றிக்காட்டினார் விஜயகாந்த்.
விஜயகாந்த் ஹீரோவானது எப்படி?
தொடக்க காலங்களில் விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜயகாந்த், சென்னை சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் என்ற அலுவலகத்தில்தான் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் சினிமா வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு இடமாக சென்று வந்தார். அப்போது விஜயகாந்திற்கு நண்பராக இருந்த மான்சூக் என்பவரின் மூலமாக அறிமுகமானவர்தான் எம்.ஏ.காஜா. இயக்குநரான இவர்தான் விஜயகாந்தை தனது ‘இனிக்கும் இளமை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். 1979-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் கால் பதித்தார் விஜயகாந்த். இப்படத்திற்கு பிறகு ’அகல் விளக்கு’, ‘தூரத்து இடி முழக்கம்’ போன்ற படங்களில் நடித்தாலும், விஜயகாந்திற்கு பெரிதாக அங்கீகாரமோ, அடையாளமோ கிடைக்கவில்லை. நல்ல வாய்ப்புக்காக தொடர் முயற்சியில் இறங்கி தேடிக் கொண்டிருந்தபோதுதான் திடீரென ஒருநாள் எஸ்.ஏ.சந்திரசேகரின் கண்களில் பட்டு ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடித்தார். 1981-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இதற்கிடையில் எந்த ஹீரோவிற்கு தம்பியாக நடிக்கும் போது நிராகரிக்கப்பட்டாரோ, அதே ஹீரோவின் ‘முரட்டுக்காளை’ என்ற படத்தில் வில்லனாக நடிக்க அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த வாய்ப்பை வேண்டாம் என்று நண்பரின் அறிவுறுத்தலின் பேரில் மறுத்துவிட்டார்.
ஒரே ஆண்டில் 18 படங்கள்
1984-க்கு பிறகு ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘செந்தூரப்பூவே’, ‘புலன் விசாரணை’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘வானத்தை போல’, ‘வல்லரசு’, ‘ரமணா’ போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து விஜயகாந்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. குறிப்பாக 1984-ல் மட்டும் ‘நூறாவது நாள்’, ‘வெற்றி’, ‘வெள்ளை புறா ஒன்று’, ‘நல்ல நாள்’, ‘வீட்டுக்கு ஒரு கண்ணகி’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘ஜனவரி ஒன்று’, குடும்பம் என 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த படங்களை அதிகமாக இயக்கிய இயக்குநர்கள் யார் என்றால் எஸ்.ஏ.சந்திர சேகரும், ராமநாராயணனும்தான். இதில் எஸ்.ஏ.சி மட்டும் 17 படங்களை இயக்கியுள்ளார். அந்த நன்றியுணர்வுதான் எஸ்.ஏ.சி தனது மகனை ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நடிக்க வைத்து பிரபலப்படுத்த வேண்டும் என்று நினைத்தபோது, விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் நான் நடித்து தருகிறேன் என்று வெறும் வார்த்தையோடு நின்று விடாமல் அதை செயல்படுத்தியும், விஜய்யின் திரை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். அதேபோன்றுதான் நடிகர் சூர்யாவுக்கும் கை கொடுத்தார்.
இப்ராஹிம் ராவுத்தர் - விஜயகாந்த் நட்பு
நண்பன் இப்ராஹிம் ராவுத்தரோடு விஜயகாந்த்
விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவை தாண்டியும், நட்பு வட்டங்கள் அதிகம். அதிலும் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் மிக முக்கியமான ஒருவர் என்றால் அது இப்ராஹிம் ராவுத்தர்தான். மதுரையில் ஆரம்பமான இவர்களின் நட்பு திருமணத்திற்கு முன்பு வரை பிரித்து பார்த்திட முடியாத அளவில்தான் இருந்தது. ராவுத்தரை கேட்காமல், விஜயகாந்த் ஒரு அடியும் எடுத்து வைக்க மாட்டார். ராவுத்தர் எடுக்கும் முடிவுதான் விஜயகாந்தின் முடிவாக இருக்கும். ராவுத்தரிடம் சொல்லி கதை ஓகே ஆனால்தான், விஜயகாந்த் ஓகே சொல்வார். திரையுலகில் தனது நண்பனின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட ராவுத்தர், அதேபோன்று அவரை எப்படியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கி பார்த்துவிடவேண்டும் என்று பெரும்பாடுபட்டார். அதனை தனது நண்பனிடமும் கூறி ஆரம்பத்தில் இருந்தே அதற்கான முயற்சிகளையும் செய்ய வைத்தார். ஆனால் யார் கண் பட்டதோ இந்த நட்பு திருமணத்திற்கு பிறகு நீடிக்கவில்லை. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை பெண் பார்த்து வைத்து திருமணம் முடித்துவைத்ததும் ராவுத்தர்தான். இப்படி தன் வாழ்க்கையில் தன்னை வழிநடத்தி மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை நண்பன் ராவுத்தரைத்தான் சேரும் என்று விஜயகாந்தே பல மேடைகளில் பேசியுள்ளார்.
காவி உடையில் பெண் பார்க்கச் சென்ற விஜயகாந்த்
திருமண கோலத்தில் மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த்
விஜயகாந்துடன் உடன் பிறந்தவர்கள் நிறையபேர். அதனால் தன் தந்தைக்கு பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாக செய்து முடித்துவிட வேண்டும் என்று, தன் உடன் பிறந்த சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் செய்து, அவர்களுக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி அழகு பார்த்த பின்னரே தன் திருமணத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தார். அதிலும் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தவரை சம்மதிக்க வைத்து பெண் பார்க்கும் படலத்தையும் ஆரம்பித்து வைத்தது விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர்தான். ஒருவழியாக பெண் பிரேமலதாதான் என்பதை முடிவு செய்து விஜயகாந்தை பார்க்க அழைத்த போது, அவர் மாலை அணிந்து காவி உடையில் சென்றுதான் பெண் பார்த்துள்ளார். அந்த கணமே திருமணத்திற்கும் சம்மதம் சொல்லிவிட்டு வந்தவர், 1990 ஆம் ஆண்டு மதுரையில் மிக பிரம்மாண்டமாக ரசிகர்கள் புடைசூழ தனது 38-வது வயதில் பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டார். அந்த சமயம் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்த ‘புலன் விசாரணை திரைப்படம் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தனது திருமண பரிசாக தந்த ஆர்.கே.செல்வமணியை விஜயகாந்த் வெகுவாக பாராட்டி நன்றி கூறினார்.
100-வது படத்தில் சாதித்து காட்டிய விஜயகாந்த்
'கேப்டன் பிரபாகரன்' படத்தில் மிடுக்கான போலீஸ் உடையில் நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி அதன் பிறகு வந்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் வரை யாரும் நிகழ்த்திட முடியாத சாதனையை கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திக் காட்டினார். அதுதான் தனது 100-வது படத்தின் வெற்றி. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான எம்ஜிஆரின் 100வது படமான 'ஒளிவிளக்கு', சிவாஜியின் 100 வது படமான 'நவராத்திரி', அதேபோல் சூப்பர் ஸ்டாராக இன்றளவும் ரசிகர்களை தனது ஸ்டைலால் கட்டிப்போட்டிருக்கும் ரஜினிகாந்தின் 100வது படமான 'ராகவேந்திரா', உலக நாயகன், ஆண்டவர் என்றெல்லாம் அன்போடு அழைக்கப்படும் கமலின் 100வது படமான ராஜபார்வை ஆகியவை வெளிவந்த காலங்களில் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நால்வரின் 100வது படங்களும் வணிகரீதியாக தோல்வியை தழுவியதால் நட்சத்திர ஹீரோக்களுக்கும், அவர்களின் 100வது படத்திற்கும் இனி ராசியே இல்லை என்ற பேச்சு அடிபட்டது. அது உண்மையில்லை என்பதனை முதல் முறையாக தனது 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலமாக உடைத்து காட்டினார் கேப்டன் விஜயகாந்த்.
மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் ஒரு ஆக்சன் ஹீரோவாக சாதனை... அனைவருக்கும் சமமான உணவு... பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி... புதிதாக வாய்ப்புத் தேடும் இளம் இயக்குநர்களுக்கு தன் படங்களின் மூலம் அறிமுகம்... தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்காதவர் என பல பெருமைகளை கொண்ட விஜயகாந்த், சினிமாவை தாண்டி தன் குடும்பத்தையும் மிகவும் நேசிக்க கூடியவர். தன் மனைவி, பிள்ளைகள் மீது அதீத பாசம் கொண்டவர். தன் மகன்களை ஒரு சொல் சொல்லி திட்டிவிட்டால் அன்று முழுவதும் அவர் சாப்பிடாமல் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பாராம். அப்படிப்பட்டவர் தன் இரண்டு மகன்களான பிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியன் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்கான முயற்சிகளில் இறங்கி தனது மூத்த மகனான பிரபாகரனுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயமும் செய்துள்ளார். ஆனால் அந்த நேரம் விஜயகாந்தின் உடல்நலம் குன்றிப்போகவே திருமணத்தை நடத்த முடியாமல் தள்ளி போனது. இருப்பினும் உடல்நலம் தேறிய சமயங்களில் எல்லாம் மகன்களின் திருமணத்தை நடத்தி வைக்க மிகவும் மெனக்கெட்டுள்ளார். ஆனால் அது நடைபெறாமல் போனதுதான் வேதனையின் உச்சம்.
அரசியல் கட்சி தொடங்கியது ஏன்?
ஸ்ரீ ஆண்டாள் அழகர் திருமண மண்டபம், தேமுதிக அலுவலகம் மற்றும் நடிகர் விஜயகாந்த்
விஜயகாந்த் திரைத்துறைக்குள் வந்து ஜொலிக்க தொடங்கிய சிறிது காலத்திலேயே அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகத் தொடங்கியது. அதன் அடிப்படையில் ரசிகர் மன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. நாளடைவில் அந்த ரசிகர் மன்றங்களை நடிகர் விஜயகாந்த், நற்பணி மன்றங்களாக மாற்றினார். பின்னர் அந்த நற்பணி மன்றங்களுக்கு தேவையான நிதியை தனது சொந்த பணத்தில் இருந்து ஒதுக்கி அதன்மூலம் படிக்க சிரமப்படும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது, பெண்களுக்கு இலவச தையல் மெஷின் கொடுப்பது, கிராமப்புற பெண்கள் மற்றும் மாணவர்கள் கணினி அறிவை பெற்றிடும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி கொடுப்பது என அரசியலுக்கான அடித்தளத்தை அங்கேயே விதைக்க ஆரம்பித்துவிட்டார். அதற்காக ஒவ்வொரு ஊராக, மாவட்டமாகச் சென்று தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து பேச ஆரம்பித்தார். பிறகு 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி அன்று தமிழகத்தில் திமுக - அதிமுக என்ற இருபெரும் ஆளுமைகள் ஆட்சி செலுத்தி வந்த சமயத்தில், மிகவும் தைரியமாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி ஒட்டுமொத்த தமிழக மக்களையும், அவரது ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தினார். 2006-ஆம் ஆண்டே சட்டமன்றத் தேர்தலை சந்தித்த விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் அறிமுகமில்லாத வேட்பாளர்களை களமிறக்கி, தனித்து போட்டியிட்டு 8.45 சதவிகித வாக்குகள், அதாவது ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளை பெற்று இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் அதிர்ச்சியளித்தார். மேலும் அந்த தேர்தலில் தனது கட்சியைச் சேர்ந்த யாரும் ஜெயிக்காத நிலையில், விஜயகாந்த் மட்டும் தான் போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று, தனக்கு எதிராக களமிறங்கிய பாமக வேட்பாளர் கோவிந்தசாமி என்பவரை தோற்கடித்து, முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அந்த சமயம் திமுக ஆட்சி கட்டிலில் இருந்ததால், நெடுஞ்சாலை துறையை விரிவாக்கம் செய்து கோயம்பேட்டில் பாலம் அமைக்கப்போவதாக கூறி விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இருந்த இடத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி இடித்தது. இதனால் மிகுந்த வேதனையுற்ற விஜயகாந்த், தனது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாமல்தான் திமுக இப்படியெல்லாம் செய்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். பின்னர் 2009-ஆம் ஆண்டு தேர்தலையும் தணித்தே சந்தித்த விஜயகாந்த், கட்சி துவங்கியபோதும் சரி, அதற்குப் பிறகும் சரி, தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று சொல்லிவந்த நிலையில், திடீரென 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது மட்டுமின்றி தமிழகத்தின் பிரதான கட்சியாக பார்க்கப்பட்ட திமுக-வையே பின்னுக்குத் தள்ளி இரண்டாவது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தார்.
அரசியலில் எங்கு சறுக்கினார் விஜயகாந்த்?
நடிகர் விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தபோது, ஒட்டுமொத்த தமிழகமும் இனி எல்லாமும் இவருக்கு வெற்றியாகத்தான் இருக்கும். இனி தன் நிலையை விஜயகாந்த் கெட்டியாக பிடித்து தக்கவைத்துக் கொண்டால் மூன்றாவது பிரதான கட்சியாகவும், அசைக்க முடியாத சக்தியாகவும்தான் இருப்பார் என்று பலரும் எண்ணினர். ஆனால் அந்த எண்ணங்களெல்லாம் பொய்யாகும் விதமாக 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே நடைபெற்ற மோதல் பெரும் பின்னடைவை அவருக்கு ஏற்படுத்தியது. தேமுதிக கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அதிமுக பக்கம் வர ஆரம்பித்தனர். சிறிது நாட்களில் விஜயகாந்தும் உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதனால் கட்சி நிகழ்வுகளில் பெரிதும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதோடு, அவரது செயல்பாடுகளை மீடியாக்களும் கேளிக்குரிய நிகழ்வாக மாற்ற ஆரம்பித்தனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்த விஜயகாந்த், அதன் எதிரொலியாக 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும், இருந்ததை விட மோசமான தோல்விகளை சந்தித்தார்.
விஜயகாந்த் மரணத்திற்கு கொரோனாதான் காரணமா?
கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அந்த சமயங்களில் எல்லாம் அவரது குடும்பத்தினர் அவருக்கு உறுதுணையாக நின்றதோடு எப்படியாவது அவரை பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு, வெளிநாடு என்று மாறி மாறி அழைத்துச் சென்று தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவரது சிகிச்சையில் சிறு சிறு முன்னேற்றங்கள் ஏற்பட்டதே தவிர, திடீர் திடீர் உடல் உபாதைகளும் வந்துகொண்டுதான் இருந்தன. இதுதவிர அவ்வப்போது கொரோனா வைரஸ் தொற்றாலும் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளையும் பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி, சளி மற்றும் இருமல் பிரச்சினையால் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், சுமார் 23 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்துகொண்ட விஜயகாந்தைப் பார்த்து கட்சி தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். அதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதன்பிறகு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 28-ஆம் தேதி உயிரிழந்தார். அப்போதும் விஜயகாந்த் மரணத்திற்கு கொரோனா தொற்றுதான் காரணம் என்று தேமுதிக சார்பிலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் சொல்லப்பட்டது.
விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்ட தருணம்
எது எப்படியாகினும் விஜயகாந்த் என்ற தன்னிகரில்லா ஒரு சகாப்தம் இன்று நம்மோடு இல்லை. கடந்த 29-ஆம் தேதி அன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடல் கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்தின் உடல் மக்கள் வெள்ளம் அலைமோத ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடல் 50 கிலோ எடை கொண்ட சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. அந்த சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட உடல், அடக்கம் செய்யப்படுவதற்காக குழிக்குள் இறக்கப்பட்டபோது அங்கிருந்தவர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் கடலில் மூழ்கச் செய்தது.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பாடல் வரிகளுக்கு ஏற்ப தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஆளுமையாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் என்ற ஒரு சரித்திரம் மறைந்து காற்றோடு கலந்துவிட்டது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் பேசிய பஞ்ச் வசனங்களும், ஆக்சன் காட்சிகளும், போலீஸ் தோரணையும்தான் நம் நினைவுகளில் இருந்து நீங்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும். ஆனால் தனி ஒரு மனிதனாக அவர் ஆற்றி சென்றிருக்கும் பங்களிப்புகள் சரித்திரத்தில் இடம்பெற்று ஆண்டுகள் கடந்தாலும் பேசப்படும் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.